www.womanofislam.com

Muslim women's online learning centre




வீட்டில் மினி பேக்கரி  (Mini Home Bakery)


உழைப்பதற்கு மூலதனத்தை விட மூளையைதான் அதிகம் பயன்படுத்த வேண்டும். கொஞ்சம் மூளையை பிழிந்து சிந்தித்தால் எப்படி மூலதனமே இல்லாமல் சம்பாதிக்கலாம் என்பதையும் கண்டுக்கொள்ளலாம். பெரியளவு முதலீடு இல்லாமல் வீட்டில் இருந்தவாறு இலகுவாக சம்பாதிக்க இன்னொரு வழி வீட்டிலேயே சிறியளவில் செய்யப்படும் பேக்கரி, அதாவது மினி ஹோம் பேக்கரி.


பேக்கரி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சுவையான கேக் (Cake) தான். எனவே, வீட்டில் இருந்தவாறே கேக் ஆர்டர்கள் எடுத்து, அவற்றை செய்து கொடுத்து சம்பாதிக்கலாம். அதற்கு முதலில் நீங்கள் விதவிதமான சுவையான கேக் வகைகள் செய்ய தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


3 மாதம், 6 மாதம் சமையல் வகுப்புகள் (Cookery Class) நிறையவே உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து நீங்கள் முறைப்படி கற்கலாம். குறிப்பாக கேக் வகைகள் மட்டும் செய்வதற்கான தனி வகுப்புகளில் சேர்ந்து கற்கலாம். இதை விட தற்காலத்தில் மிக இலகுவான முறைதான் இன்டர்நெட்டில் கற்பது. யூடுயூப் (YouTube) போன்ற இணையத்தளங்களில் கேக் செய்யும் முறை வீடியோ வடிவில் உள்ளன. அதேபோல, எமது www.womanofialam.com இணையதளத்தில் சமையல் குறிப்பு பகுதியிலும் நிறைய உணவு குறிப்புகள் உள்ளன. அவற்றை கொண்டு இலகுவாக கற்கலாம்.


பின்னர், தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் ஒவ்வொரு வகையையும் சிறியளவில் முதலில் நீங்கள் செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்து அவர்களின் கருத்தை கேட்டுப்பாருங்கள். என்ன தவறுகள் நடந்து உள்ளன என்று கண்டுப்பிடித்து அவற்றை அடுத்த முறை செய்யாமல் திருத்தி முழுமைப்படுத்தி கொள்ளுங்கள்.


பின்னர், பக்கத்து வீடுகள், பக்கத்தில் உள்ள கடைகள், ஹோட்டல்களுக்கு சிறு அறிவிப்பு கொடுங்கள். அவர்களிடம் இருந்து ஆர்டர்களை கேட்டு பெற்று செய்து கொடுங்கள்.


பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது சுவாரஸ்யமான வேலை. கேக் டெகரேஷன் (Cake Decoration) பண்ணுவதே ஒரு கலை. அதனை ஐசிங் (Icing) என்றும் சொல்லுவர். அதைக் கற்றுக் கொண்டால் அதனை கொண்டு பிறந்த நாள் கேக் வேண்டிய வடிவங்களில் செய்து கொடுத்து வாடிக்கையாளர்களை அசத்தலாம்.


அதேபோல, பன் (Bun) வகைகள், சாண்ட்விச் (Sandwich) வகைகள் செய்து கலக்கலாம். காலையில் ஸ்கூல் (School) போகும் பிள்ளைகளையும், ஆபிஸ் செல்லும் வளர்ந்தவர்களையும் குறி வைத்து இவற்றை செய்து விற்பனை செய்யலாம். உண்மையில் இவை யாவும் மிக இலகுவான வேலை. முறைப்படி செய்தால் நன்றாக சம்பாதிக்கலாம்.


தெரிந்தவர்கள், நண்பிகள், உறவுக்கார பெண்கள் என எல்லோருக்கும் நீங்கள் இப்படி வீட்டில் ஆர்டருக்கு செய்து கொடுப்பதாக தெரியப்படுத்துங்கள். அதன் மூலம் நிறைய ஆர்டர்கள் வரும்.


இன்னும் இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள் என தொடரலாம். இப்படி இடம், பொருள் அறிந்து செயல்பட்டால் விரிவாகவே பிசினஸை முன்னேற்ற முடியும்.