www.womanofislam.com

Muslim women's online learning centre

பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் இரக்க குணம் 


​சுவனலோகப் பேரரசி ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு அப்போது வயது ஐந்து. மக்காவின் கடைத்தெரு ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டின் சமீபத்தில்தான் இருக்கிறது. ஒரு சமயம் தங்களின் பணிப் பெண்ணுடன் கடைத் தெருவுக்கு சென்றிருந்த போது... அங்கு ஒரு ஏழைச் சிறுமி மெலிந்து போன உடலுடன் பசியின் கொடுமை தாங்காமல் அழுது, பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.



இக்காட்சி ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் சின்னஞ்சிறு உள்ளத்தில் கடுமையான ரணத்தை உண்டாக்கியது. கண்களில் கண்ணீர் உருண்டோடியது. ஏழைச் சிறுமிக்கு ஏதாவது கொடுப்பதற்கு ஒன்றுமில்லையே என்று அழுது கொண்டு வீட்டை நோக்கி ஓடோடி வந்தார்கள். பணிப் பெண்ணும் பின்னால் ஓடி வந்தாள். வீட்டிற்குள் நுழையும் போது, கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் வந்துவிட்டார்கள்.




அன்பு மகளுக்காக வாங்கி வந்த தின்பண்ட பொட்டலம் ஒன்றை ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை அழைத்து கொடுக்கிறார்கள். ‘என்ன வாப்பா இது?’ என்று கேட்டார்கள். ‘இது தின்பண்டங்கள். சாப்பிடு கண்ணே’ என்றார்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள். சிறிது நேரம் தந்தையாரை பார்த்துக் கொண்டே இருந்தார்கள். கண்மணி ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் நிலை அறிந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ‘என்னம்மா வேண்டும்? ஏதோ சொல்ல நினைக்கிறாய்? தைரியமாக சொல்லம்மா?’ என்றார்கள்.


‘நான் கடைத் தெரு வரை சென்று வர அனுமதி வேண்டும் தந்தையே!’ என்றார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், ‘தனியாகவா போகப் போகிறாய்?’ என்று கேட்டார்கள்.


‘பணிப் பெண்ணுடன் சென்று வருகிறேன் தந்தையே’ என்றார்கள். ‘சென்று சீக்கிரம் வந்து விடம்மா’ என்றார்கள்.



வாப்பாவின் அனுமதி கிடைத்தவுடன் பணிப் பெண்ணுடன் கடைத் தெருநோக்கி ஓடினார்கள். அங்கும், இங்கும் ஓடி, ஓடிப் போய் தேடி தேடி அலைந்தார்கள். என்ன வேண்டும்? யாரைத் தேடுகிறாய் ஃபாத்திமா? என்று பணிப்பெண் கேட்டாள். அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தேடிக் கொண்டே இருந்தார்கள். ஏதும் புரியாத நிலையில் பணிப் பெண்ணும் ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) கூட ஓடிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் கடைத் தெருவின் கடைசி முனையில் ஏழைச் சிறுமி நின்று கொண்டிருந்தாள். அச்சிறுமியை கண்ட ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) கொண்டு வந்த தின்பண்டப் பொட்டலத்தை ஏழைச் சிறுமியிடம் கொடுத்து விட்டு, வீட்டை நோக்கி ஓடி வந்தார்கள். இக்காட்சியை கண்ட பணிப் பெண்ணின் கண்கள் கண்ணீர் சிந்தின. ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் இரக்கம் உள்ள ஈர நெஞ்சை நினைத்து நினைத்து சந்தோஷமடைந்தாள்.








இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்


இமாம் ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வினிலே

தோள் கொடுத்த

தூய நபி ﷺ

அன்னவர்கள்

பொறுமையில் முன்மாதிரி 

அன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்