www.womanofislam.com

Muslim women's online learning centre

சிந்திய உணவு

உணவுப் பொருள்களை வீணடிப்பதும், தெருவில் கொட்டுவதும் அல்லாஹ்விற்குக் கோபமூட்டும் செயல்களாகும். இதனால் வீட்டில் பறக்கத் என்னும் அபிவிருத்தி இல்லாமற் போய்விடுவது உண்மையே!


உணவு உண்ணும் வேளையில் உணவுப் பொருள்கள் கீழே சிந்தக் கூடும். அவற்றை எடுத்து உண்பது இறைவனுக்கு உகந்த செயலும், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வழிமுறையுமாகும்.


உணவுப் பொருள் கீழே சிந்தி அசுத்தமடையாமல் இருப்பான் வேண்டியே ஸுஃப்ரா விரிக்கப்படுகிறது. ஸுஃப்ரா விரித்து உணவு உண்பதால் வளவாழ்வு ஏற்படும்.


ஒரு முறை காசி யஹ்யா இப்னு அக்தம், கலீபாவுடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது ஸுஃப்ராவின் மீது (உணவு விரிப்பின் மீது) சிதறிக் கிடந்த உணவுப் பொருள்களையும் அவர் பொருக்கியெடுத்து உண்டார்.


அது கண்ட கலீபா அவரைப் பார்த்து, “தாங்கள் சரிவர உண்ணவில்லை போலத் தோன்றுகிறதே?” என்று கூறினார்.


அதற்கு அவர், “நன்றாக உண்டேன். எனினும் நபி மொழியொன்றை பின்பற்றுவதற்காக வேண்டி ஸுஃப்ராவில் சிந்திய உணவுப் பொருள்களை பொருக்கி உண்டேன்” என்று கூறினார்.


“அது என்ன நபிமொழி?” என்று கலீபா வினவ,


“ஸுஃப்ராவில் சிந்தியவற்றைப் பொறுக்கி உண்பதில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளார்கள்” என்றார் காசி யஹ்யா.


“அப்படியா? அது இதுவரை எனக்குத் தெரியாமற் போயிற்றே!” என்று கூறிய கலீபா, நபிமொழியை தமக்குக் கூறியதற்காக மூவாயிரம் தீனார்காலி காசிக்கு அன்பளிப்புச் செய்தார்.


அதனைப் பெற்றுக்கொண்ட காசி யஹ்யா, “கலீபாவே! இந்த மூவாயிரம் தீனார்கள் எனக்கு எவ்வாறு கிடைத்தன தெரியுமா? ஸுஃப்ராவில் சிந்திய உணவுப் பொருள்களை பொருக்கி உண்டதால் ஏற்பட்ட பரக்கத்தாலே ஆகும்!”


ஸுஃப்ராவிலிருந்து சிந்திய உணவுப் பொருள்களை பொறுக்கி எடுத்து உண்பவர்களின் சந்ததிகளை அல்லாஹ் கண்ணியப்படுத்துவான் என்று கூறப்படுகிறது.


இங்கு இன்னொரு ஹதீசையும் நினைவு கூர்தல் நல்லதாகும்.


ஒருமுறை ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்து தம்முடைய வறிய நிலை பற்றி முறையிட்டார்.


அப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், ஸுஃப்ரா விரித்து உணவருந்தி வருமாறு கூற அவரும் அவ்விதமே செய்து வந்தார். சிறிது காலத்தில் அவர் வளமிக்க வாழ்வினை அடையப் பெற்றார்.







இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்


இமாம் ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வினிலே

தோள் கொடுத்த

தூய நபி ﷺ

அன்னவர்கள்

பொறுமையில் முன்மாதிரி 

அன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்