www.womanofislam.com

Muslim women's online learning centre

பொறுமையில் முன்மாதிரி

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் காலத்தில் ஒரு யூத பெண் வாழ்ந்து வந்தாள். ஒவ்வொரு நாளும் அதிகாலை அவள் தன் வீட்டு மாடியில் குப்பைகளை ஏந்தியவாறு காத்திருப்பாள். எதற்காக தெரியுமா? அதிகாலை (சுப்ஹ்) தொழுகையை முடித்துவிட்டு வரும் “மனிதருள் மாணிக்கம்” நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் புனித தலையின் மீது கொட்டுவதற்காக.


தினமும் அவ்வழியே வரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் புனித தலையின் மீது அக்குப்பைகளை அவள் கொட்டுவாள். பொறுமைக்கே பொறுமை சொல்லி கொடுத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கொஞ்சம் கூட கோபப்படாமல் தம் புனித தலையை உயர்த்தி அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு சென்று விடுவார்கள்.


இப்படியே தினமும் நடந்து வந்தது.


ஒருநாள், வழமைப்போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அதிகாலை தொழுது விட்டு வந்தார்கள். ஆனால், அன்று குப்பை கொட்டப்படவில்லை. அவளையும் காணவில்லை. அவளை பற்றி அண்டை வீட்டாரிடம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் விசாரித்தார்கள். “அப்பெண் கடும் காய்ச்சலால் அவதிப்படுகிறாள்” என அண்டை வீட்டார் கூறினர்.


உடனே அவளின் இல்லம் நோக்கி விரைந்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள். பெருமானாரின் வருகையை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண்மணி, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை கண்டதும் படுக்கையை விட்டு எழுந்திட முயன்றாள்.


“வேண்டாம் அம்மா, படுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவளுக்கு பூரண உடல் சுகம் கிடைக்க இறைவனை பிரார்த்தித்தார்கள்.


அதனை கண்டு அப்பெண் வெட்கமுற்று மனம் துவண்டு போனாள். இத்தகைய ஒரு மனித புனிதரையா நான் இவ்வளவு நாட்களாக துன்புருத்தினேன் என மனம் கலங்கி போனாள். அவள் கண்கள் கண்ணீரை சொரிந்தன. நிச்சயமாக இவர் இறைத்தூதர்தான் என்று விசுவாசம் கொண்டாள். அடுத்த கணம் அவள் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றாள்.


சுப்ஹானல்லாஹ் எப்படிபட்ட பொறுமையின் சிகரம். பொறுமை கூட அண்ணலிடம் தான் பொறுமை கற்றது. ஒருவர் தமக்கு  தீங்கிழைத்த போதும் அவர்களுக்கு நன்மையை நாடும் உயர்ந்த பண்பை நமக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் காட்டி தந்து உள்ளார்கள்.


இப்படிபட்ட உயர் குணங்களை நாமும் வளர்த்து சிறந்த பண்பாளர்களாக விளங்குவோமாக.






இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்


இமாம் ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வினிலே

தோள் கொடுத்த

தூய நபி ﷺ

அன்னவர்கள்

சிந்திய உணவு 

அன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்