www.womanofislam.com

Muslim women's online learning centre

அல்லாஹ் ஏன் வியப்புற்றான்?

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் ஒரு ஏழையான மனிதர் வந்து, தான் மிகவும் பசியாக இருப்பதாகவும், ஏதேனும் உண்ணுவதற்கு உணவு கொடுக்கும்படியும் கேட்டார். அம்மனிதர் மீது இரக்கம் கொண்டு உடனே தங்கள் மனைவியர் ஒருவர் இல்லத்திற்கு ஒரு ஆளை அனுப்பினர். ஆனால் சென்ற நபர் சென்ற வேகத்திலேயே திரும்பி வந்து விட்டார். காரணம் வீட்டில் தண்ணீரைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறியிருந்தனர்.


எனவே இன்னொரு மனைவியர் இல்லத்திற்கும் ஆளை அனுப்பினாலும் அதே பதில்தான் திரும்பி வந்தது. எனவே தங்களோடு இருக்கும் ஸஹாபி ஒருவரின் இல்லத்திற்கு அனுப்பி இவரின் பசியை ஆற்றி வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் இந்த மனிதரை யாரேனும் அழைத்துச் சென்று விருந்து படைக்க விரும்புகிறீர்களா? எவர் இவருடைய பசியை போக்குகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கும்” என்ற கருத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சொன்னதைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) என்னும் ஸஹாபி முன்வந்தார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் அனுமதி பெற்று அந்த மனிதரைத் தங்களுடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். “உண்பதற்கு என்ன இருக்கிறது’ என்று மனைவியிடம் கேட்டதற்கு “நம் பிள்ளகளுக்குரிய உணவைத் தவிர வேறு எதுவுமில்லையே” என்று கூறினார் மனைவி.


“குழந்தைகளை சாக்குப் போக்கு சொல்லி அப்படியே உறங்க வைத்து விடு. இருக்கும் உணவை அந்த மனிதருக்கு அழித்து பசியாற்ற வேண்டும். உணவோ குறைவாக இருக்கிறது. எனவே அவர் சாப்பிட அமர்ந்ததும் விளக்கை அணைத்து விடு” என்றார்கள். அதன் படி அந்த மனிதரின் முன் உணவை வைத்ததும் விளக்கை சரி செய்வது போல விளக்கை அனைத்து விட்டார்கள்.


எனவே அந்த ஸஹாபி சாப்பிடுவதைப்போல பாவனை செய்து கொண்டு இருந்தார்கள். இருட்டில் ஒன்றும் தெரியாததால் அந்த மனிதரும் அந்த உணவை உண்டு பசியாற்றினார். அவர் சென்றதற்குப் பின்பு கணவன் மனைவி இருவரும் பட்டினியோடு உறங்கினர்.


விடிந்ததும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைத் காணச் சென்ற பொழுது அன்னவர்கள் அந்த ஸஹாபியைப் பார்த்து பெரிதும் வியப்புடன் பார்த்தார்கள். “ஏன் அப்படிப்பார்க்கிறார்கள் யா ரசூலல்லாஹ்!” என்ற எண்ணம் ஹழ்ரத் அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய உள்ளத்தில் எழுந்தது.


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், புன்னகையுடன் மகிழ்ச்சி பொங்க அந்த ஸஹாபியை அழைத்து அமரவைத்தார்கள். காரணம் என்னவென்று அவருக்கும் புரியவில்லை, அன்னாரைச் சுற்றியிருக்கும் ஸஹாபிகளுக்கும் புரியவில்லை. தாமதம் செய்யாது புதிரின் விளக்கத்தை வெளியிட்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்.


“நீங்கள் நேற்று அந்த விருந்தாளியுடன் நடந்து கொண்ட சம்பவத்தை அல்லாஹு தஆலா பார்த்து வியப்புற்றுள்ளான். மேலும் திருமறையின் 59:9 ஆவது வசனமாகிய ‘இவர்கள் ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வருவோரை அன்புடன் நேசித்து வருவதுடன் அவர்களுக்கு (மட்டும்) கொடுப்பதைப்பற்றித் தங்களின் உள்ளத்தில் சிறிதளவும், பொறாமை கொள்ளாமலும் தங்களுக்கு தேவை இருந்த போதிலும் தங்களின் பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவியும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் உலோபத்தனத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்களோ அவர்கள் தாம் சித்தி பெற்றவர்கள் என்ற வசனமும் வஹீயாக அருளியிருக்கின்றான்!!” என்ற செய்தியின் கருத்தை வெளியிட்டார்கள். ஸஹாபி ஹழ்ரத் அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) சந்தோஷத்தால் கண்களில் கண்ணீர் வரையிட்டது.








இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்


இமாம் ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வினிலே

பொறுமையில் முன்மாதிரி 

சிந்திய உணவு 

அன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்