www.womanofislam.com

Muslim women's online learning centre

ஏன் அழுதார்கள்? ஏன் சிரித்தார்கள்? 

மக்கா நகர் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்கள் அருமை மகளார் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது முஃமீன்களின் அன்னையரான ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களும் உடன் இருந்தார்கள். எனினும் அவர்கள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.


அப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மகள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை தன் பக்கத்தில் அழைத்தார்கள். தங்கள் வாயினருகே அவர்களின் காதை கொண்டு வரும்படி சொன்னார்கள்.


அதேபோல பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களும் மிக நெருங்கி நின்றார்கள்.


அப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுடைய காதில் ஏதோ ரகசியமாகக் கூறினார்கள்.



அதனைக் கேட்டதும் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுடைய முகத்தில் கவலைக் குறிகள் தென்பட்டன. கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. 


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அழுது கொண்டிருந்த தம்மகளாரை அழைத்து மீண்டும் காதில் ஏதோ ரகசியத்தை கூறினார்கள். அதனைக் கேட்டதும் முகம் மலர்ந்தது. சிரித்தும் விட்டார்கள். ஒன்றைச் சொல்லும் போது அழுதார்கள்: இன்னொன்றைச் சொல்லும்போது சிரிக்கிறார்களே, அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் என்ன சொன்னார்கள் என்ற கேள்விக் குறிகளோடு புரியாதவர்களாக அதை கவனித்துக் கொண்டிருந்தார்கள் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.


எனினும் அது என்ன ரகசியம் என்பதைப்பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடமோ, பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடமோ கேட்கவில்லை.


நாட்கள் கடந்தன. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் உடல் நலமின்றி மரணம் எய்தினார்கள். அதன் பின் சில நாட்கள் கழிந்தபின் தான் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் “அன்று தங்களுடைய காதில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறிய ரகசியம் என்ன? எதற்காக முதலில் அழுதீர்கள்? எதற்காக பிறகு சிரித்தீர்கள்?” என்று பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்டார்.


இத்தனை நாட்கள் மனதின் ஆழத்திலேயே மறைத்து வைத்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சொன்ன புதிரான ரகசியத்தை அன்று வெளிப்படுத்தினார்கள்.


“அன்று எனதருமை தந்தையவர்கள் என்னை அழைத்து என்னுடைய காதில் ரகசியமாக இரண்டு விஷயங்களைச் சொன்னார்கள். முதலில் எனதருமை தந்தையின் மரண காலம் நெருங்கி விட்டது என்று சொன்னார்கள். அதனைக் கேட்டதும் துக்கம் தாளாமல் அழுது விட்டேன். அடுத்ததாக நான் மரணித்ததற்கு பிறகு என்னை சந்திப்பதில் நீதான் முதன்மையானவள்.  ‘நிச்சயமாக நீ சுவனவாசிப்பெண்களுக்கெல்லாம் தலைவியாக இருப்பாய் – மர்யம் பிந்து இம்ரானைத் தவிர’ என்று நன்மாராயம் கூறினார்கள். எனவே நான் சிரித்து விட்டேன்” என்று கூறினார்கள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா).









இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்


இமாம் ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வினிலே

தோள் கொடுத்த

தூய நபி ﷺ

அன்னவர்கள்

பொறுமையில் முன்மாதிரி 

அன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்