www.womanofislam.com

Muslim women's online learning centre

இறை நம்பிக்கையின் (ஈமான் கொள்ள வேண்டிய) ஆறு அம்சங்கள்


இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையாகும் (ஈமான்). ஒருவர் முஸ்லிமா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஈமானாகும். இறை நம்பிக்கை இன்றி ஆற்றப்படும் எந்த ஒரு நற்காரியமும் எந்த மறுமை பிரயோசனத்தையும் கொடுக்காது.


அந்த அடிப்படையில், ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் ஆறு விடயங்களை நம்பிக்கை கொள்ள வேண்டும். அவற்றில் ஏதாவது ஒன்றை நம்பாவிட்டாலும் அவள் ஒரு முஸ்லிமாக கருதப்பட மாட்டாள்.


1. இறைவனை நம்புதல்

2. வானவர்களை நம்புதல்

3. வேதங்களை நம்புதல்

4. இறைத்தூதர்களை நம்புதல்

5. இறுதி நாளை நம்புதல்

6. நன்மை தீமை யாவும் இறைவன் நாட்டப்படி நடக்கிறது என்று நம்புதல்


இறைவனை  நம்புதல்

"அல்லாஹ்" என்ற பக்கத்தை வாசிக்கவும். 


வானவர்களை நம்புதல்வானவர்களுக்கு அரபி மொழியில் மலக்குகள் என்று சொல்லப்படும். இந்த மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு என்று எந்த ஒரு தனிப்பட்ட ஆசாபாசங்களும் கிடையாது. இறைவனை வணங்குதல், துதி செய்தல், இறை கட்டளையை ஏற்று பணி செய்தல் போன்றவையே இவர்களின் வேலையாகும்.


இவர்களில் பிரபலமான பத்து மலக்குகளும் அவர்களின் பணியும்:

1. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) - வானவர்களின் தலைவர். இறைவனிடமிருந்து நபிமார்களுக்கு இறைதூதை கொண்டு வருதல்.

2. மீக்காஈல் (அலைஹிஸ்ஸலாம்) - உணவு வழங்கல் மற்றும்  மழை, காற்று போன்ற இயற்கைக்கு பொறுப்பான வானவர்.

3. இஸ்ராபில் (அலைஹிஸ்ஸலாம்) - இறுதி நாளில் சூர் என்னும் ஊது குழல் ஊதுபவர்.

4. இஸ்ராயில் (அலைஹிஸ்ஸலாம்) - மரணத்திற்கு பொறுப்பான வானவர். உயிரை கைப்பற்றுபவர்கள்.

5. ரிழ்வான் (அலைஹிஸ்ஸலாம்) - சுவர்க்கலோகத்திற்கு பொறுப்பானவர்கள்.

6. மாலிக் (அலைஹிஸ்ஸலாம்) - நரகத்திற்கு பொறுப்பானவர்கள்.

7 & 8. முன்கர் & நகீர் (அலைஹிமுஸ்ஸலாம்) - மனிதன் மரணித்து அடக்கம் செய்யப்பட்டவுடன் கல்லறையில் கேள்வி கணக்கு கேட்பவர்கள். சரியான முறையில் பதில் அளிக்கும் ஆத்மா இறுதி நாள் வரை கப்ரில் சந்தோசமாகவும் பதில் அளிக்க தவறும் ஆத்மாக்கள் இறுதி நாள் வரை கல்லறையில் வேதனை அனுபவிப்பவையாகவும் இருக்கும்.

9 & 10. ரகீப் & அதீத் (அலைஹிமுஸ்ஸலாம்) - ஒவ்வொரு மனிதனின் வலது மற்றும் இடது தோள்பட்டையில் இருந்து கொண்டு அவனது நன்மை தீமைகளை பதிவு செய்யும் வானவர்கள்.


வேதங்களை நம்புதல்

அல்லாஹ்வினால் வேறுப்பட்ட காலப்பகுதிகளில் வேறுப்பட்ட நபிமார்களுக்கு நான்கு வேதங்கள் அருளப்பட்டன. இறுதியாக அருளப்பட்ட அல் குர்ஆனை தவிர மற்ற அனைத்து வேதங்களும் தற்போது இல்லை. அவை அவற்றின் சொற்களில் மற்றும் கருத்துக்களில் பல மனித கையாடல்கள் இடம்பெற்று அதன் அசல் கருத்துக்களில் மாற்றம் கண்டுள்ளது. இறுதி வேதமாகிய அல் குர்ஆன் மட்டுமே அதன் அசல் வடிவத்தில் தற்போதும் காணக்கிடைக்கிறது. அதில் எந்த மனித கையாடல்களும் கிடையாது.


அந்த நான்கு வேதங்களும் :

1. தவ்ராத் - இது மூஸா நபியவர்களுக்கு ஹிப்ரு மொழியில் அருளப்பட்டது.

2. ஸபூர் - இது தாவூத் நபியவர்களுக்கு கிரேக்க மொழியில் அருளப்பட்டது.

3. இன்ஜீல் - இது ஈஸா நபியவர்களுக்கு சிரிய மொழியில் அருளப்பட்டது.

4. அல் குர்ஆன் - இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு அரபி மொழியில் அருளப்பட்டது.


இவற்றுக்கு மேலதிகமாக, இறைவனால் 110 ஸுஹுபுகள் என்னும் கட்டளைகள் சில நபிமார்களுக்கு அவரவர்களின் காலப்பகுதியில் வழங்கப்பட்டது. அவையாவன:

1. ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம்  - 10

2. ஷீத் நபி அலைஹிஸ்ஸலாம் - 50

3. இத்ரீஸ் நபி அலைஹிஸ்ஸலாம் - 30

4. இப்ராஹிம் நபி அலைஹிஸ்ஸலாம் - 10

5. மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் - 10

​​

இறைத்தூதர்களை (நபிமார்களை) நம்புதல்

இறைவனால் வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு சமுதாய மக்களுக்கு என 124,000 இறைதூதர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த இறைதூதர்கள் இறைவனின் தூதாகிய ஒரே இறைவனை வணங்குதல், நல்லதை செய்தல், தீயவற்றிலிருந்து தவிர்தல் என கட்டளைகளை மக்களுக்கு எத்தி வைத்து மக்களை நேர் வழியின் பால் கொண்டு சென்றனர்.


​​ஒவ்வொரு நபிமார்களும் அவரவர்களின் சமுதாயதிற்கென அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் இறுதி நபியாகிய முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மட்டும் முழு உலகிற்குமே இறை தூதராக அனுப்பி வைக்கப்பட்டனர். அன்னவர்களுக்கு அருளப்பட்ட அல் குர்ஆன் வேதம் முழு உலகிலுள்ள மக்களுக்கும் வழிகாட்டியாகும். 


அல் குர்ஆனில் 25 நபிமார்களின் பெயர்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அந்த நபிமார்களை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள "இஸ்லாத்தில் இறை தூதர்கள்"என்ற பக்கத்துக்கு செல்லுங்கள்.   அதே போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை பற்றி அறிந்து கொள்ள "முஹம்மது நபி ﷺ " என்ற பக்கத்துக்கு செல்லுங்கள்.


இறுதி நாளை நம்புதல்

ஒரு நாள் இவ்வுலகத்தை இறைவன் அழிப்பான் என்றும் முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் அனைவரும் மாளுவர் என்றும் மீண்டும் அனைவருக்கும் உயிர் கொடுக்கப்பட்டு மறுமையில் எழுப்பப்படுவர் என்றும் அப்போது கேள்வி கணக்கு கணக்கு கேட்கப்பட்டு அவரவர் நிலைக்கு ஏற்ப சுவனம் அல்லது நரகம் செல்வர் என்றும் நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.


இறை விதியை (கழா கத்ர்) நம்புதல்

நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது என்றும் அல்லாஹ் அறியாமல் எதுவும் நடைப்பெறுவதில்லை என்று நம்புவதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். உலகில் ஆரம்பம் முதல் முடிவு வரை நடைப்பெறப்போவது எல்லாம் அல்லாஹ்வினால் முன் கூட்டியே எழுதப்பட்டுவிட்டது. இவை "அல் லவ் அல் மஹ்புள்" என்ற பாதுகாக்கப்பட்ட பலகையில் எழுதப்பட்டுள்ளது.  என்றாலும் மனிதனுக்கு நன்மை தீமை இரண்டுக்கு மத்தியில் விரும்பியதை தெரிவு செய்து பின்பற்றி நடக்கும்  சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தான் செய்யும் செயற்பாடுகளுக்கு அவனே பொறுப்பாளி ஆவான்.