www.womanofislam.com

Muslim women's online learning centre

இஸ்லாத்தை கற்போம்

(புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரிகளுக்காக)


அன்பான சகோதரிகளே,

அஸ்ஸலாமு அலைக்கும் வ'ரஹ்மதுல்லாஹி வ'பரகாத்துஹு

(சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் ஆசிர்வாதமும் உங்கள் மீது உண்டாகட்டும்)  


இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதும் சாந்தியையும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் போதிக்கக்கூடியதும் பரிசுத்த இஸ்லாமிய மார்க்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.

இஸ்லாத்தில் பாகுபாடு இல்லை


இஸ்லாமிய மார்க்கம் சமத்துவ தத்துவத்தை உலகிற்கு போதிக்கும் ஒரே மார்க்கமாகும். ஆண் - பெண், ஏழை - பணக்காரன், கருப்பன் - வெள்ளையன், படித்தவன் - பாமரன், அரபியர் - அரபியல்லாதோர் என எவ்விதமான பாகுப்பாடும் இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாத்தில் ஜாதி வேற்றுமை கிடையாது. அனைவரும் சமமாகவே மதிக்கப்படுவர். யாரிடம் இறைவனை பற்றிய பயபக்தியும், நல்லொழுக்கமும் உள்ளதோ அவரே இறைவனின் பார்வையில் மனிதர்களில் சிறந்தவர் என இஸ்லாம் போதிக்கிறது.


இதனாலேயே, இறைவனை தொழும் பள்ளிவாசல்களில் அனைவரும் சமமாகவே நோக்கப்படுகின்றனர். உயர் ஜாதியை சேர்ந்தவர் மட்டும் உள்ளே செல்லலாம், தாழ்வான ஜாதியை சேர்ந்தவர் செல்லக்கூடாது என்ற நிலை இஸ்லாத்தில் இல்லை. அனைவரும், இறைவனை தொழும்போது அணி அணியாக பக்கத்து பக்கத்தில் தோளோடு தோள் சேர்த்து நிற்கவேண்டும். இதன்போது, ஒரு நாட்டின் அரசனும், அதே நாட்டில் குறைந்த அந்தஸ்துள்ள தொழில் செய்யக்கூடிய ஒரு தொழிலாளியும் தோளோடு தோள் சேர்த்து நிற்பர். சில நேரம், ஆண்டி முன் வரிசையில் நிற்க அரசன் பின் வரிசையில் நிற்பான். இது இஸ்லாத்தில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கோட்பாடுகளை விளங்கி கொள்ள மிக சிறந்த உதாரணங்களாகும்.


ஒருவன் அல்லது ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுகொள்ளும் தருணம், அவள் அதுவரை செய்த அத்தனை பாவங்களும், அதாவது அவள் இறை நிராகரிப்பில் இருந்த காலத்தில் அறிந்தோ அறியாமலோ செய்த எல்லா பாவங்களும் இறைவனால் மன்னிக்கப்படுகின்றன. ஆனால், அவள் இஸ்லாத்தை ஏற்ற தருணத்தில் இருந்து அவள் செய்யக்கூடிய அனைத்து செயல்களுக்கும் அவள் இறைவனிடம் நாளை மறுமையில் கணக்கு கேட்கப்படுவாள். அவள் செய்யும் நற்காரியங்களுக்கு நன்மையையும் தீய காரியங்களுக்கு தீமையும் பதிவு செய்யப்பட்டு நாளை மறுமையில் இறைவன் முன் விசாரணை செய்யப்பட்டு அவள் நன்மை அதிகம் செய்து இருந்தால் சுவர்க்கத்திற்கு செல்லுவாள். ஆனால், முஸ்லிமாக வாழ்ந்து (அதாவது அல்லாஹ்வை இறைவனாக ஏற்று, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை இறைதூதராக விசுவாசித்து) ஆனால், நன்மையை விட அதிகம் பாவம் செய்து இருந்தால் தமது பாவ அளவுக்கு ஏற்ப நரக வேதனையை அனுபவித்துவிட்டு பின்னர் சுவர்க்கம் செல்வாள்.



இஸ்லாம் அன்பையும், சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்


இஸ்லாம் உண்மையில் அன்பையும் சமாதானத்தையும் போதிக்கும் மார்க்கமாகும். அதன்படி, ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வையும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும் உலகிலுள்ள அத்தனை உறவுகளை விடவும் அனைத்து பொருட்களை விடவும் நேசிக்க வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடைமையாகும். இன்னும் இஸ்லாம் மனிதர்களுக்கிடையில் அன்பையும் அமைதியையும் பரப்பும்படியும் போதிக்கிறது.


நாம் அல்லாஹ்வையும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும் எங்கள் உயிரை விடவும் நேசிக்கிறோம்.


இஸ்லாத்தை கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் : "அறிவை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்"


ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இஸ்லாத்தை முறையாக கற்று அதன்படி ஒழுகி வாழுமாறு இஸ்லாம் போதிக்கிறது. வெறும் பெயர் தாங்கி முஸ்லிமாக வாழாது முறைப்படி கற்று இஸ்லாமிய போதனைகளை கடைப்பிடித்து வாழவேண்டும்.


அதன்படி, இந்த பகுதி எமது இஸ்லாமிய சகோதரிகள் இஸ்லாத்தை கற்று அதன்படி நடக்க துணை புரியும் என்று நாம் நம்புகிறோம் இன்ஷா அல்லாஹ். 






தமிழ் பகுதி → இஸ்லாமிய கல்வி