www.womanofislam.com

Muslim women's online learning centre

கூந்தல் நன்கு வளர என்ன செய்யலாம்?


♣ தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்த தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும்.


♣ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.


♣ சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.


♣ நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.


♣ தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.


♣ வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.


♣ கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.


♣ ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.


♣ கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.


♣ கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்களில் முக்கியமானது விளக்கெண்ணெய். ஆகவே வாரம் 1-2 முறை விளக்கெண்ணெயை தடவி மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் உதிர்தல் குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.






கூந்தல் உதிர்வதை தடுக்க வழி உண்டா?


தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்


♣ அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.


♣ மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.


♣ சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.


♣ புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.


♣ வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.


♣ இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.


♣ வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்.

நரை முடியை கருமையாக்க வழிகள் என்ன? 


நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.


♣ தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும். வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.


♣ பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும்.


♣ நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.


♣ இளநரை நீங்க சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.


♣ சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை முன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்.


♣ முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.


♣ தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம்.


♣ பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.


♣ மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.


♣ கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.

கூந்தலில் எண்ணை பசை இருக்கிறதா?


சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.


♣ ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.


♣கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.


♣ கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும்.


கூந்தல் மென்மையாகவும், பளப்பளப்பாகவும் மாற வேண்டுமா?


ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.


♣ தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை. உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா... இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.


♣ தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை. உலர்ந்த ஆரஞ்சு தோல் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள். அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.


♣ முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.


♣ வெந்தயம் ,வேப்பிலை, கறிவேபிள்ளை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.


♣ தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

பொடுகு தொல்லையா?



பொடுகு நீங்க வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.


♣ பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தேவைக்கு நீர் கலந்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.


♣ பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.


♣ அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.


பேன் தொல்லையா?


ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


♣ குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.







தமிழ் பகுதி → அழகு குறிப்புகள் → கூந்தல் பராமரிப்பு