www.womanofislam.com

Muslim women's online learning centre

பெண்கள் ஸகாத் சட்டங்கள்


♣ ஸகாத் என்றால் என்ன?

இஸ்லாத்தின் ஐந்து பிரதான கடமைகளில் ஸகாத் மூன்றாவது கடமையாகும். பொருள் வசதியுடையவர்கள் வருடம் ஒரு தடவை நூற்றுக்கு இரண்டரை ரூபாய் வீதம் வசதியற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும். இது கட்டாய கடமை.


ஸகாத் எத்தனையாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது?

ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ஸகாத் கடமையாக்கப்பட்டது.


ஸகாத்தின் முக்கியத்துவம் என்ன?

ஸகாத் என்ற வார்த்தையின் நேரடி அர்த்தம் "தூய்மைப்படுத்துதல்" என்பதாகும்.

• ​நாம் ஸகாத் கொடுப்பதால் எமது உடைமைகள்  ​தூயமையடைகின்றன.

• எமது உள்ளம் உலக பற்று, கருமித்தனம், பண ஆசை போன்றவற்றை விட்டும் நீங்கி தூய்மை அடைகிறது.

• சமூகத்தில் வறுமை நீங்கி சமூகம் வளர்ச்சி அடைய ஸகாத் பெரிதும் துணை புரிகிறது.


ஸகாத் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

• அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்ள முடியும்.

​​​​​​​​​• செல்வத்தில் வளர்ச்சி ஏற்படும்.

• சொத்து இழப்புக்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

• ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

• அல்லாஹ்வின் கோப பார்வை மற்றும் கெட்ட மரணம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

• நரகத்தை விட்டும் பாதுகாக்கும் கேடயமாக இருக்கும். 

• எழுபது விதமான கெடுதிகளை விட்டும் பாதுகாக்கும் கேடயமாக இருக்கும்.​


♣ ஸகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள் (ஷர்த்துக்கள்) என்ன?

1. முஸ்லிமாக இருத்தல்.

2. பருவமடைந்து இருத்தல்.

3. புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல்.

​​​4. அடிமையாக இருக்காமல் சுதந்திரமானவனாக இருத்தல்.

5. சொத்து தனக்கு சொந்தமாக இருத்தல்.

6. ஸகாத்து நிர்ணயிக்கப்பட்ட அளவை அடைந்திருத்தல்.

7. தானியம், கனிவர்க்கங்கள் அல்லாதவைகளில் ஒருவருடம் பூர்த்தியாகி இருத்தல்.


♣ எந்த பொருட்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும்?

• தங்கம் மற்றும் வெள்ளி

• வெள்ளியின் அளவுக்கு நிகரான பணம் கையில் இருந்தால்

• வியாபார பொருட்கள்

• கால்நடைகள்

• வருமானம் உழைத்து தரக்கூடிய அசையா சொத்துக்கள்

​​ ​​

♣ எந்த பொருட்களுக்கு ஸகாத் கொடுக்க கடமை இல்லை?

• தங்கம், வெள்ளியை தவிர்ந்த ஏனைய ​​உலோகங்கள். (உதாரணம் - இரத்தினம், வைரம், வைடூரியம்). ஆனால் இவை வியாபார நோக்கத்திற்காக வைக்கப்பட்டு இருந்தால் ஸகாத் கொடுக்க வேண்டும். (உதாரணம் - இரத்தின கல் வியாபாரம்)

• ​வியாபார நிலையத்தில் நிர்வாகத்திற்காக பாவிக்கப்படும் பொருட்களான கதிரை, மேசை, ஏனைய தளபாடங்கள், வாகனங்கள் போன்றவற்றுக்கு சகாத் கொடுக்க தேவை இல்லை.


•​​ வீடு, வீட்டு தளபாடங்கள், உடைகள் போன்றவற்றுக்கு ஸகாத் இல்லை. ஆனால், அவை வியாபார நோக்கில் வைக்கப்பட்டு இருந்தால் அவற்றுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும். (உதாரணம் - ரியல் எஸ்டேட் )


♣ ​பெண்கள் அணியும் நகை, ஆபரணங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா?​

ஷாபிஈ மத்ஹப் சட்டப்படி அணியும் நகைகளுக்கு ஸகாத் கொடுக்க தேவை இல்லை. ஆனால், ஹனபி மத்ஹப் சட்டப்படி கொடுக்க வேண்டும். 

​​

​​​​♣ தங்கள், வெள்ளி, பணம் போன்றவற்றுக்கான ஸகாத்தின் நிஸாப் (அளவு) என்ன?

​ஒருவருக்கு கீழே குறிப்பிட்ட அளவு சொத்து இருந்து அவை ஒரு வருடத்தை அடைந்து இருந்தால் மாத்திரமே அவர் மீது ஸகாத் கடமையாகும்.

தங்கம் - ​87.5 g

வெள்ளி - 612 g

காசு - 612 g வெள்ளியின் பெறுமதிக்கு நிகரான அளவு பணம் கையில் இருந்தால்.​​


♣ ஸகாத் கொடுக்க வேண்டிய அளவு என்ன?

சொத்தில் நூற்றுக்கு இரண்டரை வீதம் ( 2.5% )​ கொடுக்க வேண்டும். ​​​

♣ ஸகாத்துக்கு நிய்யத் வைப்பது எப்படி?

ஸகாத் கொடுக்கும் முன்னர் நிய்யத் செய்வது வாஜிப் ஆகும். ஸகாத் கொடுக்கும் முன்னர் "நான் இதனை ஸகாத் ஆக கொடுக்கிறேன்" என்று உள்ளத்தால் நினைத்து நிய்யத் செய்தல் வேண்டும். நிய்யத் செய்யவில்லை என்றால் ஸகாத் நிறைவேறாது.

​​

♣ ஸகாத் பெற தகுதியுடையோர் யார்?

ஸகாத் பெற தகுதியானவர்கள் எட்டு கூட்டத்தார்களாகும்.


1.  பக்கீர் – எவ்வித வசதியும் இல்லாமல் ஜீவியம் கழிப்பவர்.

2.  மிஸ்கீன் – சொற்பமாய் கிடைப்பவன்.

3.  ஸகாத்துடைய தொகையை வசூலிப்பவர்.

4.  புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்.

5.  நிபந்தனையுடன் உரிமைச்சீட்டு எழுதி கொடுக்கப்பட்ட அடிமை.

6.  கடன் பட்டவர், கடனை தீர்க்க வழி இல்லாதவர்.

7.  இஸ்லாமிய மார்க்கத்திற்காக புனித யுத்தம் செய்பவர்.

8.  பிரயாணத்தில் இருப்பவர்.


​​♣ மாற்று மதத்தவருக்கு ஸகாத் கொடுக்க முடியுமா?

முடியாது


♣ ஸகாத் ரமழான் மாதத்தில் மட்டும்தானா கொடுக்க வேண்டும்?

இல்லை, எப்போது ஒருவரது ​சொத்து குறிப்பிட்ட நிஸாப் (அளவை) அடைகிறதோ, ஒரு வருடம் பூர்த்தியாகிறதோ அத்துடன் ஒருவர் மீது ஸகாத் கடமை ஆகிவிடும். எனவே, உடனே அவர் தனது ஸகாத்தை கணக்கிட்டு கொடுத்து விட வேண்டும். ரமழான் வரும் வரை காத்திருக்க கூடாது. எல்லோரும் ரமழான் மாதம் வரும் வரை காத்திருக்கின்றனர், ஏனெனில் இந்த மாதத்தில் ஒன்றுக்கு எழுபது நன்மை கிடைக்கும் என்று ஹதீஸில் உள்ளதால் ஆகும்.


ஆனால், ரமழான் வருவதற்கு முன்னர் ஏதேனும் காரணத்தால் செல்வம் இல்லாமல் போனால், ஸகாத் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு ஸகாத் கொடுக்காத குற்றத்துக்கு ஆளாக வேண்டி ஏற்படும்.


அதேநேரம், சொத்து ஒரு வருடத்தை அடையும் முன்னர் ரமழான் வந்து​, ஒருவர் அந்த ரமலானில் முன் கூட்டியே ஸகாத் கொடுக்க நினைத்தால், அப்படி கொடுக்க முடியும்.​ ​​ 


♣ பள்ளிவாசல், மதரசா போன்றவற்றுக்கு ஸகாத் கொடுக்க முடியுமா?

முடியாது. ஸகாத் கட்டிடங்களுக்கு கொடுக்க முடியாது. மனிதர்களுக்கே கொடுக்க முடியும். எனவே, பள்ளிவாசல், மதரசா போன்றவை மனிதர்கள் அல்ல. அவை கட்டிடங்கள். எனவே அவற்றுக்கு கொடுக்க முடியாது.


ஆனால், அங்கு பணியாற்றும் அல்லது கல்வி பயிலும் மாணவர்கள் ஏழைகளாக இருந்து கல்வி பயில வசதி அற்ற நிலையில் இருந்தால் அவர்களுக்கு ​​​​​கொடுக்கலாம்.


♣ ​​நாம் பிறருக்கு கொடுத்துள்ள கடன் தொகைக்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா?

நாம் பிறருக்கு கொடுத்துள்ள கடன் தொகை திரும்ப கிடைக்கும் என்று உறுதி இருந்தால், அந்த கடனுக்கும் ஸகாத் கொடுக்க வேண்டும். அந்த பணம் திரும்பி வந்து சேராது என்று இருந்தால் அத்தொகைக்கு ஸகாத் கொடுக்க தேவை இல்லை.


♣ வீட்டுக்கு ​​அட்வான்ஸ் (முன் பணம்) ஆக கொடுத்துள்ள பணத்திற்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா?

ஆம் கொடுக்க வேண்டும்.


​♣ ஸகாத் ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டுமா?

ஆம், ஸகாத் ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும்.​​​


​​​​​​






தமிழ் பகுதி → பெண்கள் ஸகாத் சட்டங்கள்