www.womanofislam.com

Muslim women's online learning centre

பெண்கள் ஹஜ் மற்றும் உம்ரா சட்டங்கள் 


♣ ஹஜ் என்றால் என்ன?

இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். ஹஜ் (Hajj) என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். உடல் நலமும் பணவசதியும் உள்ள இஸ்லாமியர் ஓவ்வொரும் தன் ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் செய்ய வெண்டும்.


♣ ஹஜ்ஜின் சிறப்புகள் என்ன?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நவின்றார்கள்: ஹஜ் செய்பவர்களும் உம்ராச் செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினராவர். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் நஸயீ, இப்னுமாஜா.


“உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்.” என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நவின்றார்கள்: அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்​

​​

♣ ஹஜ் யார் மீது கடமை?


1. முஸ்லிமாக இருத்தல்.

2. பருவமடைந்திருத்தல்.

3. சித்த சுவாதீனமாயிருத்தல்.

4. சுதந்திரமாயிருத்தல்.

5. வழியில் அச்சம் இல்லாது இருத்தல்.

6. ஒரு பெண்ணுக்கு தகுந்த துணை இருத்தல் வேண்டும்.

7. சரீர சுகத்துடன் இருத்தல்.

8. போய் சேருவதற்கு தகுந்த காலம் இருத்தல்.



♣ ஹஜ்ஜின் பர்ளுகள் என்ன?


1. இஹ்ராம் கட்டுதல்.

2. துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் இரவு சிறிது நேரம் முஜ்தலிபாவில் தங்குதல்.

3. தவாபு செய்தல்.

4. ஷபா, மர்வா என்ற இடங்களுக்கு தொங்கோட்டம் ஓடுதல்.

5. ஆண்கள் தலையின் முடியின் மூன்றுக்கு குறையாமல் சிரைத்து கொள்ளுதல், பெண்கள் கட்டையாக்கி கொள்ளுதல்.

6. மேற்கூறப்பட்ட பர்ளுகளை ஒழுங்கு முறையாய் நிறைவேற்றுதல்.



♣ இஹ்ராம் கட்டியவர் செய்யக்கூடாதவை என்ன?


1. உடலுறவு கொள்ளுதல்.

2. தாடிமயிர், தலைமயிர் ஆகியவற்றில் எண்ணெய் தேய்த்தல்.

3. நிக்காஹ் செய்தல்.

4. வாசனை திரவியங்கள் பூசுதல்.

5. சவரம் செய்து கொள்ளல்.

6. நகத்தை வெட்டுதல்.

8. பெண்கள் முகத்தில் சிலதை மறைத்தல்.

9. வேட்டையாடுதல்.



♣ ஒரு பெண் தனியாக ஹஜ்ஜுக்கு போகலாமா?


இல்லை. ஒரு பெண் சரியான ஒரு மஹ்ரமான ஆண் துணை இல்லாமல் ஹஜ்ஜுக்கு போக கூடாது. ஹஜ் செய்ய வேண்டுமென்றால் ஒன்று, அவள் தன் கணவருடன் செல்ல வேண்டும். அல்லது அவள் தனது தந்தை, மகன், சகோதரன் போன்ற திருமணம் முடிக்க ஹராமான ஆணுடன் செல்ல வேண்டும். ஒரு பெண் மக்கா சென்று வர பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் போன்ற வசதிகளைப் பெற்றுள்ளார்; ஆனால் அவளுடன் செல்வதற்குக் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லை என்றால் அவளுக்கு ஹஜ் கடமையில்லை. அதையும் மீறி அவள் சென்றால், அது அவளின் மீது குற்றமாகும்.



♣ பெண்கள் சுத்தமில்லாத காலத்தில் தவாப் செய்யலாமா?


சிறு தொடக்கு, பெரு தொடக்கு ஏற்பட்ட காலங்களில் தவாப் செய்வது கூடாது. பர்லான தவாப் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னதாகவோ, அல்லது செய்துகொண்டிருக்கும் போது ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் அவள் சுத்தமான பிறகுதான் அதனை செய்ய வேண்டும்.



♣ ஹஜ்ஜுடைய காலத்தில் பெண்கள் தலைமுடி சிரைக்கலாமா?


பெண்கள் தங்கள் தலைமுடிகளை கத்தரிப்பது ஏற்றமாகும். ஆண்களுக்கு தான் சிரைப்பது ஏற்றமாகும்.


பெண்கள் ஆண்களை போன்று தைக்காத ஆடைகளை அணிய வேண்டுமா?

இல்லை, ஆண்களை போன்று பெண்கள் தைக்காத ஆடைகளை அணிய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவிற்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். பல்வேறு நிறமுடைய, அலங்கார வேலைப்பாடுகள் உடைய ஆடைகளை கூட அணிவது தவறில்லை எனினும், ஆடைகள் மிக சாதாரணமாகவும் அதிக வேலைப்பாடுகள் மற்றும் மற்றவரை கவர்ந்து இழுக்க கூடிய நிலையில் இருப்பது நல்லதல்ல. ஏனெனில், ஹஜ் என்பது படைத்தவன் முன் சாதாரணமாகவும், பணிவாகவும் இருக்கும் நிலை ஆகும்.​​


பெண்கள் காலணிகள் அணிய முடியுமா?

ஆம், பெண்கள் செருப்பு, சப்பாத்து போன்ற காலணிகளை அணியலாம்.


பெண்கள் இஹ்ராம் சமயத்தில் முகத்திரை அணியலாமா அல்லது முகத்தை மூடலாமா?

இல்லை, இஹ்ராமின்போது பெண்கள் முகத்தை மூட கூடாது.


♣ பெண்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் புனித கப்ரை ஸியாரத்து செய்யலாமா?ஆம்,


இது ஒவ்வொரு ஆணும், பெண்ணும் செய்ய வேண்டிய கட்டாய ஸுன்னத் ஆகும்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நவின்றார்கள்: "யார் எனது கப்ரை சியாரத்து செய்கிறாரோ அவருக்கு எனது ஷாபாஅத் கட்டாயமாகிவிட்டது.."

அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: தாரகுத்னி, ஷுஃபுல் ஈமான்


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நவின்றார்கள்: யாரொருவர் என் இறப்புக்கு பின்பு என் கப்ரை ஸியாரத்து செய்கிறாரோ அவர் என்னை வாழ்நாளில் சந்தித்தவர் போலாவார்.

நூல்: தபரானி, ஷுஃபுல் ஈமான் ​​

​​






தமிழ் பகுதி → பெண்கள் ஹஜ் உம்ரா சட்டம்