www.womanofislam.com

Muslim women's online learning centre

பெண்கள் நோன்பு சட்டங்கள்


​​நோன்பு என்றால் என்ன?

நோன்பு இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் நான்காவது கடமையாகும். இது அரபியில் ஸவ்ம் (Sawm) என்று அழைக்கப்படுகிறது.​


நோன்பு என்றால் அதிகாலை சுப்ஹ் நேரத்தில் இருந்து மாலை சூரிய அஸ்தமனம் ஆகும் நேரம் வரை ​​அதாவது மஃரிப் நேரம் வரை ஒருவர் அல்லாஹ்வுக்காக உண்ணாமலும் குடிக்காமலும் உடலுறவு கொள்ளாமலும், இன்னும் நோன்பை முறிக்க கூடிய எந்தவொரு காரியத்தையும் செய்யாமலும் இருப்பதை குறிக்கும்.



​​

​​

நோன்பு கடமையை நிராகரிக்கும் ஒருவர் பற்றி இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?

இஸ்லாமிய கடமைகளில் ஏதேனும் ஒரு கடமையை ​​​எவரேனும் நிராகரித்தால், அவர் ஒரு இறை நிராகரிப்பாளராக கருதப்படுவார். அதாவது, நோன்பு எல்லாம் தேவை இல்லை, அது கட்டாயம் இல்லை என்று எவேரனும் கூறினால், அவர் அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்தவராக கருதப்பட்டு இறை நிராகரிப்பாளராக கருதப்படுவார்.


​​அதேநேரம், ஒருவர் நோன்பை ஏற்றுக்கொள்கிறார், ஆனால், ஏதேனும் காரணத்தினால் நோன்பை நோற்கவில்லை என்றால், அவர் விட்ட நோன்பை பின்னர் களா செய்ய வேண்டும். காரணமின்றி விடுவது பாவமாகும். 


​​ 

நோன்பின் வகைகள் என்ன?

நோன்பு இரண்டு வகைப்படும்:


1. கடமையான நோன்பு                                                      ​2. மேலதிக நோன்பு​​​


1. கடமையான (பர்ளான) நோன்பு 

ஒருவருக்கு நோன்பு 3 விதமாக கடமையாகும்.

அ. ரமழான் நோன்பு

வயது வந்த ஒவ்வொரு ஆண், பெண்ணின் மீதும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது. இந்த நோன்புகளை நோற்பதால் அல்லாஹ்வின் திருப்தியும் அன்பும் எல்லையில்லா நன்மைகளும் கிடைக்கிறது.


​​​ஆ. நேர்ச்சை நோன்பு

ஒருவர் தனது ஏதேனும் ஒரு நாட்டம் நிறைவேற வேண்டும் என்று நாடி, அல்லாஹ்வுக்காக நேர்ச்சை ​செய்து, அவ்வாறு நிறைவேறினால் இத்தனை நோன்புகள் நோற்பேன் என்று நேர்ச்சை செய்து, அதேபோல் அந்த நாட்டமும் நிறைவேறினால், அப்போது நேர்ச்சை செய்தபடி அந்த நோன்புகளை நோற்பது அவரின் மீது கடமையாகும். ஆனால், அத்தேவை நிறைவேறாவிடில், அதனை நோற்பது அவ்வடியான் மீது கடமையில்லை


(இ) குற்ற பரிகார நோன்புகள்

ஒருவர் குறித்த சில பாவங்களை செய்யும்போது அதற்கான குற்றப்பரிகாரமாக இஸ்லாம் நோன்பு நோற்பதை கடமையாக்கி இருக்கிறது. அவற்றை இது குறிக்கிறது.


உதாரணம்: ஒருவர் சத்தியம் செய்து விட்டு பின்னர் அச்சத்தியத்தை முறித்தால் 10 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது 10 ஏழைகளுக்கு உடையளிக்க வேண்டும் அல்லது ஒரு அடிமையை உரிமையிட வேண்டும் அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும்.


அதேபோல், நோன்பு காலத்தில் ஒருவர் சுயநினைவோடு உடலுறவு கொண்டால் ஒரு அடிமையை உரிமையிட வேண்டும் அல்லது தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்றல் வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.   


2. மேலதிக நோன்புகள்

மேலதிக நோன்புகள் என்றால் இவற்றை நோற்பது ஒருவர் மீது கடமையல்ல. ஆனால் நோற்றால் அதிகமான நன்மைகளும், அல்லாஹ்வின் அன்பும் திருப்தியும் கிடைக்கும்.

(அ) சுன்னத்தான நோன்புகள்

இவை ரமழான் மாதம் அல்லாத ஏனைய காலங்களில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களால் நோற்கப்பட்ட அல்லது நோற்குமாறு ஏவப்பட்ட நோன்புகளாகும். இவற்றை நோற்பது ஒவ்வொருவர் மீதும் கடமையில்லை. ஆனால், இவற்றை நோற்பதனால் நிறைய நன்மைகளும் அல்லாஹ்வின் அன்பும், பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் சுன்னத்தை பின்பற்றிய நன்மையையும் கிடைக்கிறது.

உதாரணம்: முஹர்ரம் மாத ஒன்பதாம் பத்தாம் நாட்களில் நோற்கும் ஆஷுராவுடைய நோன்பு.


(ஆ) நபிலான நோன்புகள்

மேற்குறிப்பிட்ட வகைகளை தவிர்த்து ஒரு அடியான் அல்லாஹ்விற்காக நோற்கும் இதர நோன்புகளாகும். நன்மையை நாடியோ அல்லது நாட்டம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்திலோ அல்லது அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியோ இந்த நோன்புகள் நோற்கப்படலாம்.

​ ​​​​

​​♣ நோன்பு யாருக்கு கடமை?

ஒருவர் மீது நோன்பு கடைமையாவதற்கு பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும்.


(1) முஸ்லிமாக இருத்தல்.

(2) பருவ வயதை அடைந்திருதல்.

(3) சித்த சுவாதீனமுள்ளவராக இருத்தல்.

(4) நோன்பு நோற்க சக்தியுடையவராக இருத்தல்.

(5) பெண்கள் மாத தீட்டு, பிரசவ தீட்டில் இருந்து நீங்கி பரிசுத்தமாக இருத்தல் வேண்டும்.

     (தீட்டு உள்ள பெண்கள் நோன்பு நோற்க கூடாது)

(6) தான் வசிக்கும் ஊரில் இருத்தல் (அதாவது பிரயாணத்தில் இல்லாதிருத்தல்)



♣ பெண்கள் நோன்பு நோற்கும் முறை என்ன?

பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் நோன்பின் சட்டம் பொதுவே.


1. நிய்யத்து வைத்தல்:

நோன்பு நோற்பவர், தாம் நோன்பு நோற்பதாக நிய்யத்து (நிர்ணயம்) செய்வது பர்ளாகும். நிய்யத்தின்றி நோன்பு நிறைவேறாது.

‘இந்த வருட ரமழான் மாதத்தின் ஃபர்லான நோன்பை நாளை நிறைவேற்ற நிய்யத்துச் செய்கிறேன் அல்லாஹுதஆலாவுக்காக’ என்று மக்ரிபிலிருந்து ஸுப்ஹு வரையிலுள்ள நேரத்தில் நிய்யத்துச் செய்வது ஸுன்னத்து. மறுநாள் முற்பகலுக்கு முன்னர் வரை நிய்யத்துச் செய்து கொள்வது கூடும். ஷாபியீ மத்ஹபின்படி நிய்யத்தின் நேரம், மக்ரிபிலிருந்து கிழக்கு வெளுக்கும் வரையிலாகும். கிழக்கு வெளுக்குமுன் நிய்யத்துச்செய்ய மறந்து விட்டோர், ஹனபீ இமாமின் கருத்துப்படி முற்பகலுக்கு முன்னர் நிய்யத்துச் செய்து கொள்ளலாம்


2. தடுத்து கொள்ளல்:

கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் தன்னை தடுத்துக்கொள்ளல். அதாவது, உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளல் உட்பட எந்த காரியங்களை செய்தால் நோன்பு முறியுமோ அத்தகைய காரியங்களை விட்டும் தன்னை தடுத்து கொள்வதாகும்.



நோன்பின் ஸுன்னத்துக்கள் எவை?

1. ஸஹர் செய்வது (ஸஹரில் உணவு உண்பதால் இடையூறு ஏற்படுமென்றிருந்தால் ஸஹர் செய்வது ஸுன்னத்தல்ல)

2. ஸஹர் முடிய ஐம்பது ஆயத்துக்கள் ஓதுவதற்குரிய நேரம் இருக்கும்போது ஸஹர் உணவுண்டு முடிப்பது.

3. பேரீத்தம் பழம் கொண்டு ஸஹர் உணவைத் தொடங்குவது.

4. ஒன்றுமில்லையெனில் ஒரு மிடறு தண்ணீர் கொண்டாவது ஸஹர் செய்வது.

5. சந்தேகமான நேரமாயிருந்தால் ஸஹரை விட்டுவிடுவது.

6. சூரியன் அஸ்தமித்தது திட்டமானவுடன் நோன்பு திறப்பது.

7. நோன்பை பேரீத்தம்பழங் கொண்டு திறப்பது, இல்லாவிட்டால் தண்ணீரைக்கொண்டு திறப்பது.

8. மூன்று பேரீத்தம் பழங்கொண்டு திறப்பது.

9. நோன்பாளிகளைத் தன்னோடு நோன்பு திறக்கச் செய்வது.

10.நோன்பு திறக்கும் நிய்யத்துச் செய்வது

11. ஸதகா நன் கொடை கொடுப்பது, உறவினர்களின் தேவையை நிறைவேற்றுவது.

12. குர்ஆன் ஓதுவது, ரமழான், பிந்திய பத்தில் இஃதிகாப் இருப்பது போன்ற நற்காரியங்களைச் செய்வது.

13. பஜ்ருக்கு முன்னதாக பெருந்தொடக்கை விட்டும் நீங்கிக் குளிப்பது.

14. பொய், புறம், தீய பேச்சுக்கள், சிற்றின்ப எண்ணங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது.


நோன்பு திறக்கும்போது (இஃப்தாரின்போது) கவனிக்க வேண்டியவை

பொழுது மறைந்ததும் தாமதிக்காமல் நோன்பு திறக்கவேண்டும். ​பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “நோன்பு திறப்பதை விரைவுப்படுத்தும் வரை மக்கள் நன்மையிலிருப்பர்” என்று கூறி உள்ளார்கள்.

அறிவிப்பாளர்: ஹழ்ரத் சஹ்ல் பின் ஸஃத் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: ஸஹிஹுல் புகாரி 1957


நோன்பு திறக்கும்போது (இப்தாரின்போது) என்ன துஆ ஓத வேண்டும்?  ​

நோன்பு திறந்த பிறகு கீழ்க்கண்டவாறு ஓதுவது ஸுன்னத்து.


​​“அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஸ்கிக அப்தர்து ஃபதகப்பல் மின்னி.”


​‘இறைவா, உனக்காகவே நான் நோன்பு நோற்றேன். உன்னையே விசுவாசிக்கிறேன். உன் மீதே பொறுப்புச் சாட்டினேன். நீயளித்த உணவாலேயே நோன்பு துறந்தேன். ஆகவே என் நோன்பை அங்கீகரிப்பாயாக.’


​​

நோன்பை முறிக்கும் காரியங்கள் எவை?

நோன்பை முறிக்கும் காரியங்களைச் செய்வது ஹராம் என்பதை அறிந்து முரண்டாக அதனைச் செய்தால் நோன்பு முறிந்து விடும். அவை:

1. தன் துவாரங்களில் கண்ணுக்குத் தெரியும் பொருளை அது புகை போன்றதாக இருந்தாலும் சரி – நுழைய வைப்பது.

2. கன்னிப் பெண், குத்தவைத்திருக்கும் போது முன் துவாரத்தில் வெளியாகும் பகுதியினுள் விரலை நுழைய வைப்பது.

3. பின் துவாரத்தில் சுத்தம் செய்யும் பொழுது வட்ட வளைய சுருக்குக்குள் விரலைச் செலுத்துவது.

4. வாந்தி எடுப்பது.

5. உடலுறவு கொள்வது (விந்து வெளியாகாவிட்டாலும் சரியே)

6. எந்த முறையிலாவது விந்துவை வெளியாக்குவது.

    (கனவின் மூலம் அல்லது ஆசை ஏற்படுவத்தின் மூலம் விந்து தானாக வெளியாகினால் நோன்பு முறியாது)

7. ஸுன்னத்தான கழுவுதலில் கடப்புச் செய்யும் பொழுது தண்ணீர் உள்ளே செல்வது.

8. வெற்றிலை போன்ற பொருளை மெல்லுவதால் தன்மை மாறிய உமிழ் நீரை விழுங்குவது.

9. சுத்தமான உமிழ் நீரை நாவல்லாத பொருளினால் வெளியிலெடுத்து பிறகு அதனை விழுங்குவது.

10. நஜீஸான வாயைக் கழுவும் முன் உமிழ் நீரை விழுங்குவது.

11. தொண்டையை விட்டும் வெளிப்பட்டு விட்ட காறலை விழுங்குவது.

12. உடலுறவு கொள்ளும் பொழுது கிழக்கு வெளுத்து விட்டதென்பதைத் தெரிந்த பின்னும் உறுப்பை வெளிப்படுத்தாமலிருப்பது.

13. பகலில் மறதியாக உடலுறவு கொள்கிறவன் நினைவு வந்தவுடன் உறுப்பை வெளியாக்காமலிருப்பது.

14. உணவு வாயிலிருக்கும் போது ஸஹர் நேரம் முடிந்து, கிழக்கு வெளுத்து விட்டது என்று தெரிந்த பிறகும் அவ்வுணவை வாயிலிருந்து வெளியில் துப்பாமலிருப்பது.


இவை அனைத்திலும் நோன்பு முறிந்து விடும். களாச் செய்வது அதாவது ரமழானுக்கு பின்னர் மீண்டும் ஒரு நாளில் நோற்பது கடமையாகும்.


♣ நோன்பை முறிக்காத காரியங்கள் எவை?

​1. நோன்பை முறிக்கும் காரியங்களை மறதியாகவோ, தெரியாமலோ, நிர்பந்திக்கப்பட்டவனாகவோ செய்வது.


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தமது நோன்பை முழுமைப்படுத்தட்டும். ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.”

அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: ஸஹிஹுல் புகாரி 1933


2. தன்னையறியாமல் தன் சக்திக்கு மீறி வாந்தி வருவது.


3. கனவின் மூலம், அல்லது ஆசை ஏற்படுவத்தின் மூலம் விந்து, தானாக வெளியாகுவது.


4. ஃபர்லான குளிப்பில் தண்ணீரில் மூழ்காதிருக்கும் நிலையில் தண்ணீர் உள்ளே செல்வது.


5. கொஞ்ச நேரம் போதையுண்டாகி தெளிவு பெறுவது.


6. சுத்தமான உமிழ் நீரைக் கூட்டி விழுங்குவது.


7. சுவையேதுமில்லாத “முஸ்தகா” என்னும் பூனைக்கண் குங்கிலியப்பிசின் (Mastic) போன்ற பொருளை வாயில் போட்டு அதனால் ஊறிய உமிழ் நீரை விழுங்குவது. இவற்றினால் நோன்பு முறியாது.​


நோன்பாளி கவனிக்க வேண்டியவை

நோன்பை முறிக்கும் காரியங்களை மறதியாகவோ, தெரியாமலோ, நிர்பந்திக்கப்பட்டவனாகவோ செய்தால் நோன்பு முறியாது.

சுருமாயிடுவதால் நோன்பு முறியாதென்றிருந்தாலும் அதனைச் செய்யாமல் விடுவது ஏற்றமாகும். தானாக வாந்தி எடுக்கச் செய்வது நோன்பை முறிக்கும். தன்னையறியாமல் தன் சக்திக்கு மீறி வாந்தி வந்தால் நோன்பு முறியாது.


பகலில் நோயாளி குணமடைந்தாலும், பிரயாணி தம் இடம் வந்தடைந்தாலும், மாதவிடாய், பிரசவக் கழிவு பகலில் நின்று விட்டாலும், ஒருவர் பகலில் இஸ்லாத்தை ஏற்று கலிமாச் சொல்லிவிட்டாலும் மீதமுள்ள நேரத்தில் நோன்பாளி போல் இருப்பது வாஜிபு.  (இப்படிப்பட்டார் நோன்பாளி போன்றிருப்பது ஷாபியீ மத்ஹபின்படி ஸுன்னத்)


பிரயாணி, மாதவிடாய்க்காரி, பிரசவக்கழிவு ஏற்பட்டவள் ஆகியோர் பகலில் உணவு உண்ணத் தடையில்லை. எனினும், தாம் நோன்பில்லை என்பதை வெளியில் காட்டிக் கொள்ளக்கூடாது.



மாதவிடாய், பிள்ளைபேறு உடைய பெண்கள் விடுபட்ட பர்ளான நோன்பை களா செய்ய வேண்டுமா?

ஆம், ரமழான் முடிந்த பின்னர் விட்ட நோன்புகளை கணக்கு வைத்து பின்னர் நோற்க வேண்டும்.


♣ மாதவிடாய் உள்ள பெண்ணின் மாதவிடாய் ரமழானில் பகல் நேரத்தில் நின்று விட்டால் என்ன செய்வது?

​மாதவிடாய், பிரசவக் கழிவு பகலில் நின்று விட்டால் மீதமுள்ள நேரத்தில் நோன்பாளி போல் உண்ணாமலும், குடிக்காமலும் இருப்பது ஷாபிஈ மத்ஹப் படி சுன்னத். (ஹனபி மத்ஹப் படி வாஜிப்)


ஆனாலும், அன்றைய தினத்தின் விடுப்பட்ட நோன்பை பிறிதொரு நாள் களா செய்ய வேண்டும். அதாவது, திரும்ப நோற்க வேண்டும். 


நோன்பு திறக்க கொஞ்சம் நேரத்திற்கு முன்னர் (அதாவது மஃரிபுக்கு) முன்னர் ஒரு நோன்பாளி பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் சட்டம் என்ன?

​​​அவளது நோன்பு முறிந்துவிடும். ரமழான் முடிந்து இன்னொரு நாள் அந்த நோன்பை களா செய்ய வேண்டும் (மீண்டும் நோற்க வேண்டும்). 



ரமழான் மாதத்தில் கணவனுடன் உடலுறவு கொள்ளலாமா?

​​​​ரமழான் மாத பகல் நேரத்தில் நோன்பு நோற்று இருந்தால், கணவன் மனைவி உடலுறவு கொள்ளக்கூடாது. நோன்பு நோற்ற நிலையில் உடலுறவு கொண்டால், அது பாவமாகும். நோன்பு காலத்தில் ஒருவர் சுயநினைவோடு உடலுறவு கொண்டால் ஒரு அடிமையை உரிமையிட வேண்டும் அல்லது தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்றல் வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். ஆனால், இவை ஆணுக்கு மட்டும் உள்ள சட்டம் ஆகும். 


​​அதேநேரம், நோன்பு திறந்ததில் இருந்து, அதாவது மஃரிப் நேரத்தில் இருந்து, மறுநாள் நோன்பை ஆரம்பிக்கும் நேரம் வரை, அதாவது சுப்ஹு நேரம் வரை உள்ள காலப்பகுதியில் உடலுறவு கொள்ளலாம்.  


இரவில் கணவனுடன் உடலுறவு கொண்டுவிட்டு குளிப்பு கடமையான நிலையில் ஒரு பெண் நோன்பை நோர்கலாமா?​

ஆம், குளிப்பு கடமையான நிலையிலும் நோன்பை நோற்கலாம். ஆனால், அதிகாலை சுப்ஹ் தொழுகையை தொழ எப்படியும் அவள் குளித்தே ஆக வேண்டும்.

​​

​​

பெண்கள் ஸுன்னத்தான நோன்பை நோற்கலாமா?

திருமணமாகாத ஒரு பெண் தாராளமாக நோற்கலாம். திருமணமான ஒரு பெண் கணவன் ஊரிலிருக்கும் போது அவனுடைய அனுமதியின்றி ஆஷுரா, அறபா நோன்புகள் தவிர மற்ற ஸுன்னத்தான நோன்புகளை நோன்புகளை நோற்க கூடாது. கணவன் அனுமதி கொடுத்தால் தாராளமாக நோற்கலாம்.



ஸுன்னத்தான நோன்புகள் எவை?

​பர்ழான ரமழான் நோன்பை தவிர பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் வேறு சில விசேட நோன்புகளை காட்டி தந்திருக்கிறார்கள். அவைகளை நோற்பதன் மூலம் நிறைய சிறப்புகளை பெற்று கொள்ளலாம்.


1. துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் (அரபா) நாள்

2. முஹர்ரம் ஒன்பது, பத்து (ஆஷுரா) நாட்கள்

3. ஷவ்வால் மாதம் துவக்கத்தில் ஆறு நாட்கள்

4. துல்ஹஜ் அல்லாத மற்ற எல்லா மாதங்களிலும் பிறை 13,14,15 ஆகிய மூன்று இரவு வெளிச்சமான (அய்யாமுள் பீல்) என்ற நாட்கள்

5. ஒவ்வொரு மாதத்திலும் பிறை 27,28,29 ஆகிய மூன்று இரவு இருளான (அய்யாமுஸ் ஸுத்) என்ற நாட்கள்

6. திங்கள், வியாழன் இரு தினங்களில் நோன்பு வைப்பது ஸுன்னத்து முஅக்கதாவாகும்.

7. துல்ஹஜ் மாதம் பதின்மூன்றுக்கு பதிலாக பதினாறில் நோன்பு வைக்க வேண்டும். ஹஜ்ஜு செய்கிறவன் அரபா நாளன்று நோன்பை விடுவது ஸுன்னத்து.


ஷவ்வால் மாதம் பெருநாளைக்கு மறுநாள் முதல் ஆறு தினங்கள் தொடராக நோன்பு வைப்பது ஸுன்னத்து. ரஜப் மாதமும், ஷஅபான் மாதமும், துல்ஹஜ் ஒன்பது தினங்களும், முஹர்ரம் பத்து தினங்களும் நோன்பு வைப்பது ஏற்றமானதாகும்.​​


களாவான நோன்புகளை சுன்னத்தான நோன்புகளுடன் சேர்த்து நோற்கலாமா?

ஆம், களாவான நோன்புகளை குறிப்பிட்ட சில சுன்னத்தான நோன்புகள் நோற்க வேண்டிய தினத்தில் நோற்றால், இரண்டினது பலனும் கிடைக்கும். உதாரணமாக, ஒவ்வொரு மாதமும் பிறை 13, 14, 15 களில் நோன்பு நோற்பது சுன்னத். அந்த தினத்தில் ஒரு பெண் ரமழானில் களாவான நோன்பை நோற்றால் களாவும் தீர்ந்து விடும். சுன்னத்தான நோன்பின் நன்மையையும் கிடைக்கும். ஆனால், நிய்யத்து வைக்கும்போது களாவான நோன்புக்கு தான் நிய்யத்து செய்ய வேண்டும்.



கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் நோன்பு பிடிக்க வேண்டுமா?

• ஒரு கர்ப்பிணி பெண் தான் நோன்பு நோற்பதால் தன் கர்ப்பத்திற்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு விடும் என்றோ, அல்லது ஒரு பாலூட்டும் தாய் தன் பால் வற்றி போய்விடும் என்றோ பயந்தால், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ரமழான் காலத்தில் நோன்பு பிடிக்காமல் இருப்பதற்கு அல்லாஹ் சழுகை அளித்துள்ளான்.


ஆனால், கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் களா செய்ய வேண்டும்.


கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் சலுகையளித்தார்கள்.


அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: நஸயீ 2276


• அதேநேரம், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் நோன்பு நோற்பதால் எந்த தீங்கும் வராது என கருதினால், அப்போது நோன்பு நோற்க வேண்டும்.


இவற்றை நல்ல ஒரு முஸ்லிம் டாக்டர் ஒருவரிடம் பரீட்சித்து, அவர்களின் அறிவுரைப்படி ஆபத்தா இல்லையா என முடிவுக்கு வரலாம். ​​ 






தமிழ் பகுதி → பெண்கள் நோன்பு சட்டங்கள்