www.womanofislam.com

Muslim women's online learning centre






விட்டு கொடுங்கள் இல்லறம் நல்லறம் காணும் 



இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மனைவி இறந்துவிட்டார்கள். அப்போது இமாம் அவர்கள் கூறினார்கள்:


​​​“இறைவன் மீது ஆணையாக! நான் அவளுடன் நாற்பது வருடங்கள் வாழ்ந்தேன் ஆனால் ஒரு முறையேனும் நாங்கள் சண்டை போட்டதில்லை, வாக்குவாதம் செய்ததில்லை.


​​​அப்போது இமாம் அவர்களிடம் அது எப்படி என்று கேட்கப்பட்டது, இமாம் அவர்கள் கூறினார்கள்: “எப்பொழுதாயினும் அவளுக்கு கோபம் ஏற்பட்டு என்னுடன் வாக்குவாதம் செய்ய முற்பட்டால் நான் அமைதியாக இருப்பேன். எப்பொழுதாயினும் எனக்கு கோபம் ஏற்பட்டு நான் வாக்குவாதம் செய்ய முற்பட்டால், அவள் அமைதியாக இருப்பாள்.





​​​​​​​​நம் முன்னோர்களின் வாழ்க்கை நமக்கு எத்தனை படிப்பினைகளை கற்று தருகிறது பார்த்தீர்களா?


​​இன்றைய காலக்கட்டத்தில் பல தம்பதிகள் விட்டு கொடுத்து போவது இல்லை, இதனாலேயே பல ஜோடிகள் விவாகரத்து கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம் வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும். இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும்.


பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டபடாமலும் இருந்து இருவரும் ஒன்றே நின்று சமாளிக்க வேண்டும். இதை தவிர்த்து அப்பிரச்சினைக்காக உங்களுக்குள்ளே (கணவன்-மனைவி) மோதிகொண்டால் பிரச்சினை இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.  


கணவன் மனைவி இருவரில் யார் தவறு செய்தாலும் அதை ஒத்துக் கொள்ளுங்கள், அதற்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டாதீர்கள். ​​


​இல்லறம் இனிக்க கணவரின் குணம் அறிந்து மனைவி நடந்து கொள்ள வேண்டும். மனைவியின் குணம் அறிந்து கணவன் நடந்து கொள்ள வேண்டும். குடும்பம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க, விட்டு கொடுத்து போவதில் எந்த தவறும் இல்லை.


​​அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.