www.womanofislam.com

Muslim women's online learning centre

உங்கள் மனைவி உங்கள் CHOICE


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பர். உண்மைதான். ஆனால், தனக்கு அமைய வேண்டிய மனைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு இளைஞனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.


ஒரு பெண் அவளின் செல்வத்திற்காக, குடும்ப அந்தஸ்துக்காக, அழகிற்காக, சன்மார்க்க நற்குணத்திற்காக மனமுடிக்கப்படுகிறாள். நீ சன்மார்க்க நற்குணம் உள்ளவளை மணந்து வெற்றி அடைந்து கொள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறிய அறிவுரை இன்றும் எங்களிடம் உள்ளது.


இதற்கு ஏற்பவே எமது முன்னோர் பெருமக்கள் வாழ்ந்து காட்டி சென்றனர். மாபெரும் இமாம் ஷாபிஈ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அடிமை வர்க்கத்தைச் சேர்ந்த கருப்பு நிறமுடைய பெண்ணை தனது வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

அப்பெண்ணின் பெயர் பலாக். அந்த ஊரிலுள்ள பலரும் இமாம் அவர்களுக்கு அழகு சௌந்தர்யமுள்ள பெண்ணை மணமுடித்து வைக்க முயற்சி செய்தபோது எனக்கு அதற்கெல்லாம் அவகாசமில்லை. பலாக்கில், பலாக் (பெரும் தத்துவம்) அமைந்திருக்கிறது எனக்கூறி மறுத்து விட்டார்கள்.


இதேபோல ஹன்பலி மத்ஹபின் இமாம் பேரறிஞர் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஒரு கண் ஒச்சமடைந்திருந்த ‘அவ்ராஉ’ என்ற பெண்ணை தம் இல்லறத் துணைவியாக தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். ஆனால், அவ்ராவின் தங்கை நல்ல அழகும், சௌந்தர்யமும் கொண்டவள். அவ்ராஉ அறிவு நுட்பமுடைய பெண். இவ்விருவரில் அறிவு நுட்பமுடைய அவ்ராதான் தனக்கு உகந்தவள் எனக் கூறி அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். நம் முன்னோர்களிடம் இப்பண்பே அதிகம் இருந்தது. பரம ஏழையாயினும், செல்வச் சீமானாயினும் ஒழுக்கத்திற்கும் நல்ல குணத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.


ஆனால், இப்போது கலிகாலம். வெள்ளை தோலுக்கும் கவர்ச்சி உடைக்கும் உள்ள கரிசனை வெள்ளை உள்ளத்திற்கும் ஒழுக்க குணத்திற்கும் கிடைப்பதில்லை. பெண்ணின் பணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கால் பங்கேனும் அவளின் குணத்திற்கு கொடுக்கப்படுவதில்லை.


இன்றைய அவசர உலகம் இந்த விசயத்திலும் ரொம்ப அவசரமாகவே போகிறது. போகும் வேகத்தில் மோதுண்டு பின்னர் வெடித்து சிதறுகிறது.


ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று சொல்வது போல் அழகும் மோகமும் கொஞ்ச நாளைக்கே இனிக்கிறது. பின்னர் குடும்பத்தில் சண்டை வெடிக்கிறது. நற்குணமும் விட்டுக்கொடுப்பும் என்னவென்று தெரியாத பெண்ணிடம் இருந்து எப்படி அன்பையும் சமாதானத்தையும் எதிர்பார்ப்பது. முடிவு? முஸ்லிம் காஸி கோர்ட்டில் விவாகரத்தில் போய் முடிகிறது.


கடைசியில் இன்பத்திலும் நிம்மதியிலும் திளைக்க வேண்டிய இல்லற வாழ்வை இழந்து அந்த இருவரும் தனிமையிலும் அழுகையிலும் வாழ்கின்றனர்.


இதனாலேயே பெரியார்கள் எங்களுக்கு மிக அழகாக உபதேசம் செய்து வாழ்ந்து காட்டி சென்றனர். அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எங்களுக்கான இலவச தங்க ஆலோசனைகள். அவர்களின் சொல் கேட்டு ஒழுக்க குணமுள்ள சன்மார்க்கத்தை பேணும் பத்தினியை மணக்கும் பட்சத்தில் எம் வாழ்வும் மணக்கும்.


அழகுள்ள பெண்ணை மணப்பது தவறல்ல. ஆனால் அழகுக்காக மட்டும் மணந்து விடாதீர்கள். இல்லையென்றால் உங்கள் முடிவு அழகில்லாமல் சென்று விடும்.