www.womanofislam.com

Muslim women's online learning centre

உலகின் உத்தம பெண்மணிகள்


​​​பெண்களுக்கு இஸ்லாம் தனியான ஓர் இடத்தை வழங்கியுள்ளது. மாற்று மதங்கள் இவ்வுலகில் வாழ்ந்த காலங்களில் பெண்களுக்கு கிடைக்காத உரிமையும் மரியாதையும் அண்ணலாரின் வருகையோடும், அல் – குர்ஆனின் வழிகாட்டலோடும் வழங்கப்பட்டது. விலை மாதுகளாய் பேணப்பட்ட, உயிரோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்ட பெண்களை, அந்நிலையிலிருந்து மாற்றி சுவனத்து மலர்களாய் மிளிர வைத்தது இஸ்லாம் மார்க்கம். ஜாஹிலிய்யா காலத்து வழக்கத்திலிருந்து விடுதலையாக்கி நற்குணத்தின் பெட்டகங்களாய் மாற்றப்பட்ட நமது இஸ்லாமியப் பெண்கள் மீண்டும் ஜாஹிலிய்யா மக்கள் போன்று மாறிச் செல்லும் அபாய நிலை தோன்றியுள்ளது. 


“பெண் இனம் அல்லாஹ்வால் எனக்கு விருப்பமாக்கப்பட்ட இனம், தாய்மார்களின் பாதங்களின் கீழ் சுவனம் உண்டு, உலகின் மிகச் சிறந்த பொருள் நல்லொழுக்கமுள்ள பெண்மணி” தான் என பல நூறு வார்த்தைகளால் மதிப்பளித்துக் கூறினார்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.


தனது இறுதிப் பேருரையான ‘ஹஜ்ஜதுல்விதா’ வில் அறபா மைதானத்தில் வைத்து உரை நிகழ்த்தும் போதும் பெண்களின் உரிமையை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வலியுறுத்திப் பேசினார்கள் என்றால் அதன் பெருமதியப் பேணும் விடயத்தில் தற்காலப் பெண்கள் தைரியமாக செயல்பட வேண்டும்.


அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வாழ்ந்த முறையைப் பற்றி வரலாற்றுப் புத்தகங்கள் அதிகம் உள்ளன. இவைகளைப் படிப்பது கொண்டு படிப்பினை பெற வேண்டும். குறிப்பாக தமது தாய்மார்களை மதிக்காத பெண்பிள்ளைகள் நிச்சயமாக தமது பிள்ளைகளாலும் மதிக்கப்படமாட்டார்கள் என்பதை நினைவில் பதிக்க வேண்டும்.


“பெண்கள் விஷயத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறார்கள். அது மிக வளைந்தே இருக்கும். (உடனடியாக) நேராக்க முற்பட்டால் முறித்துவிடுவீர்கள். அதை உள்ளபடியே விட்டு விட்டால் ஒருபோதும் நேராக்க மாட்டீர்கள்.” என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


“எந்த ஒரு முஃமினான ஆணும் ஒரு முஃமினான பெண்ணிடம் வெறுப்புக் கொள்ளக் கூடாது. அவளது ஒரு குணம் அவனுக்கு வெறுப்பை தரக்கூடியதாக இருந்தால் மற்றொரு குணம் அவன் விரும்பத்தக்கதாக அமையும்” என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். இவ்வாறு பெண்களின் உரிமையையும் மரியாதையையும் போதிக்கின்ற இஸ்லாம் “பெண்கள் ஷைத்தானின் வலைகள்” எனக் கூறுகின்றது.


இது இஸ்லாத்தின் தீர்க்கதரிசனமாக முன் அறிவிப்பாகும். தற்கால ஆடம்பர உலகின் பெண்களைப் பார்க்கும் போது இவர்கள் ஷைத்தானின் வலைகள் என்பதை விட, ஷைத்தானின் மனைவிமார்களா அல்லது பிள்ளைகளா என சிந்திக்கத் தோன்றுகின்றது.


எனவே, “இவ்வுலகம் சிலகாலம் இன்பமளிக்கும் சொற்பப் பொருளாகும். அதில் மிகச் சிறந்த பொருள் ஒழுக்கமுள்ள பெண்மணியாகும்.” என்ற நபிமொழிக்கு அமைவாக உலகில் உன்னதமான உத்தமியான பெண்மணியாக நமது பெண்மணிகள் வாழ்வை மாற்றியமைத்து மாநபியின் வழிமுறையை விழியாக பேணுவார்களாக!