www.womanofislam.com

Muslim women's online learning centre

தொடக்கு வகைகள்


1. பெரும் தொடக்கு என்றால் என்ன?

பெரும் தொடக்கு என்பது மாத தீட்டு, பிரசவ தீட்டு, உடல் உறவு கொள்ளல், தூக்கத்திலோ அல்லது விழிப்பிலோ விந்து வெளியாவதால் ஏற்படும் அசுத்த நிலையை குறிக்கும். இந்த தொடக்கு உள்ள ஒரு பெண் கடமையான குளிப்பை குளிப்பதன் மூலமோ அல்லது தயம்மும் செய்வதன் மூலமோ மட்டுமே இத்தொடக்கிலிருந்து சுத்தமாக முடியும்.


2. சிறு தொடக்கு என்றால் என்ன?

சிறு தொடக்கு என்பது ஒருவர் வுளூ இல்லாமல் இருக்கும் நிலையை குறிக்கும். இவர்கள் வுளூ செய்வதன் மூலமோ தயம்மும் செய்வதன் மூலமோ இதிலிருந்து சுத்தமாகலாம்.





​♣ பெரும் தொடக்கு உள்ள ஒரு பெண் (குளிப்பு கடமையான ஒரு பெண்) செய்யக்கூடாத காரியங்கள் எவை?

தொழுதல், மஸ்ஜிதில் தங்குதல், குர்ஆனை ஓதுதல், குர்ஆனை தொடுதல், கஃபதுல்லாஹ்வை தவாபு செய்தல் போன்றவைகளை செய்யக்கூடாது. மேலும் குர்ஆனை கற்றுக்கொள்ள கூடாது. ஹதீஸ்களில் இடை இடையே வரக்கூடிய சிறிய ஆயத்துகளாக இருந்தாலும் கற்றுக்கொடுப்பதும் கற்றுக்கொள்வதும் ஓதுவதும் கூடாது. தூங்கும் போது வழக்கமாக ஓதி வரும் ஸுராக்களை ஓதக்கூடாது. குர்ஆன் ஓதும் நோக்கமின்றி பிஸ்மி ஓதலாம். திக்ரு, ஸலவாத்துகள், மஸ்னூன் துஆக்கள் ஓதுவது கூடும். குர்ஆன் வசனங்களில்லாத ஹதீஸ்களை ஓதலாம்.


மாதவிடாய், பிரசவ தீட்டு மூலம் பெரும் தொடக்காகி இருந்தால் பெண்கள் மேலே சொன்னவையுடன் நோன்பு நோற்கவும், உடலுறவு கொள்ளவும் கூடாது.


♣ மாதவிடாய், பிரசவ தீட்டு காலங்களில் விடுப்பட்ட வணக்கங்களை மீண்டும் செய்ய வேண்டுமா?

மாதவிடாய், பிரசவ தீட்டு காலங்களில் விடுப்பட்ட தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை. ஆனால், விடுபட்ட பர்ளான நோன்புகளை கணக்கு வைத்து பின்னர் நோற்க வேண்டும்.


குறிப்பு: மாதவிடாய், பிள்ளை பேறு உடையவர்கள் தொழுகையின் நேரம் வந்ததும் ஒழு செய்து, தொழுகும் நேர அளவு கலிமா, தஸ்பீஹ், இஸ்திஃபார் சொல்லி கொண்டு இருப்பது முஸ்தஹப்பாகும் (விரும்பத்தக்கது)


♣ சிறு தொடக்கு உள்ள ஒரு பெண் (வுளூ இல்லாத ஒரு பெண்) செய்யக்கூடாத காரியங்கள் எவை?

தொழுதல், குர்ஆனை தொடுதல் (குறிப்பு - வுளூ இல்லாதவர் குர்ஆனை மனனமாக ஓதலாம்)


குர்ஆனை ஒதுவதற்கும், தொடுவதற்கும் எந்த தொடக்குகளில் இருந்து சுத்தமாகி இருக்க வேண்டும்?

குளிப்பு கடமையானவர்கள் குர்ஆனை தொடவும் கூடாது. மனப்பாடமாக ஓதவும் கூடாது.

வுளூ  இல்லாதவர்கள் குர்ஆனை மனனமாக ஓதலாம். ஆனால் தொடக்கூடாது.


♣ சில பெண்கள் நகபொலிஷ் பயன்படுத்துகிறார்கள். வுழு செய்யும் போது தண்ணீர் நகத்தில் படமால் இது தடுக்கிறது. இப்படியான நிலையில் கடமையான குளிப்போ அல்லது வுழுவோ கூடுமா?

இல்லை, கடமையான குளிப்போ அல்லது வுழுவை நிறைவேறும் போது நக பொலிஷ் போன்றவற்றை நீக்கி விட்டு தான் இவைகளை செய்ய வேண்டும். அப்போது தான் இவைகள் நிறைவேறும். ​


​♣ பெண்கள் வுழு செய்த பின்பு பவுடர் அல்லது க்ரீம் போன்றவைகளை பூசலாமா? இது வுழுவை முறிக்குமா?

இல்லை, இது வுழுவை முறிக்காது. அதேநேரம், அவை ஹராமான சேர்வைகள் கலக்காத பொருட்களாக இருக்க வேண்டும். முடிந்தவரை இப்படி பூசாமல் தவிர்ப்பது நல்லது.


♣ வுழு செய்த பின்பு ஏதேனும் சாப்பிட அல்லது குடிக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?

சாப்பிடுதல் அல்லது குடித்தல் போன்றவை வுழுவை முறிக்காது. ஆனாலும், சாப்பிட்ட பின் மூன்று முறை வாயை கொப்பளித்து விட்டு தொழுதல் நல்லது.

ஹைளு


♣ ​ஹைளு என்றால் என்ன?

பெண்களுக்கு மாதாந்தம் இடம்பெறக்கூடிய மாதத்தீட்டுக்கு அரபியில் ஹைளு என்று சொல்லப்படும். இந்த நேரத்தில் பெண்கள் தொழவோ, நோன்பு நோற்கவோ கூடாது.


♣மாதத்தீட்டு ஏற்பட்டுள்ள பெண்களை தொடக்கூடாதா? அப்பெண்கள் சமைத்தல், உணவு பரிமாறல் போன்ற வேலைகளை செய்யலாமா? தொழுகை விரிப்பு மற்றும் இதர பொருட்களை தொடலாமா?

இல்லை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மாதத்தீட்டு ஏற்பட்டுள்ள பெண்கள் குர்ஆனை மட்டுமே தொடக்கூடாது, அவற்றை தவிர ஏனையவற்றை தொடலாம், சமைக்கலாம், உணவு பரிமாறலாம். இவை எல்லாம் தாராளமாக கூடும்.


♣​சூரிய மறைவிற்கு முன் (மக்ரிபுக்கு முன்) ஒரு பெண்ணுடைய மாதத்தீட்டு இரத்தம் வெளியேறுவது நின்றுவிட்டால் அதற்கான சட்டம் என்ன?

மீதமுள்ள நேரத்தில் நோன்பாளி போல் உண்ணாமலும் குடிக்காமலும் இருப்பது சுன்னத். (ஹனபி மத்ஹப்படி வாஜிப்) ஆனாலும், இவை நோன்பு கணக்கில் சேர்க்கப்பட மாட்டாது. எனவே, அன்றைய நோன்பை ரமளானுக்கு பின்னர் களா செய்ய வேண்டும்.


♣ நோன்பு துறக்க முன்னர் நோன்பு நோற்றுள்ள ஒரு பெண்ணுக்கு ஹைளு ஏற்பட்டால் என்ன சட்டம்?

அவளது நோன்பு முறிந்துவிடும். அந்த நோன்பை மீண்டும் ரமளானுக்கு பின்னர் களா செய்ய வேண்டும்.


நிபாஸ்​


♣​ நிபாஸ் என்றால் என்ன?

பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கிற்கு அரபியில் நிபாஸ் என்று பெயர்.

​​​​​​​​​​

♣ நிபாஸின் (பிரசவத்தீட்டின்) காலம் எவ்வளவு?

40 நாட்கள்.


♣ 40 நாட்களுக்கு மேலாக ஒரு பெண்ணுக்கு பிரசவத்தீட்டு தொடர்ந்தால் என்ன செய்வது?

40 நாட்களுக்கு மேலாக பிரசவ இரத்தம் தொடர்ந்தால், அது பிரசவ தீட்டு அல்ல. இஸ்திஹாஸா என்னும் நோயாகும். அப்போது இஸ்திஹாஸாவின் சட்டம் அமுல்படுத்த வேண்டும்.


♣ ​​40 நாட்களுக்குள் ஒரு பெண்ணின் பிரசவ தீட்டு நின்று விட்டால் என்ன செய்வது?

உடனே அவள் கடமையான குளிப்பை குளித்துவிட்டு தமது தொழுகை, நோன்பு போன்றவற்றை ஆரம்பிக்க வேண்டும். 40 நாட்கள் முடியும் வரை காத்திருக்க கூடாது. இது நிறைய பேர் செய்யும் தவறாகும்.

​​

இஸ்திஹாஸா


♣ இஸ்திஹாஸா என்றால் என்ன?

இஸ்திஹாஸா என்பது ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பில் இருந்து மாதவிலக்கு, பிரசவ கழிவு ஆகியவை அல்லாமல் வெளியேறும் இரத்தத்தை குறிக்கும். இது நோய்க் காரணமாக ஏற்படலாம். ​​


♣ ​இஸ்திஹாஸா நிலையில் விடுப்பட்ட தொழுகை, நோன்புகளை களா செய்ய வேண்டும்?

ஆம், இஸ்திஹாஸா நிலையில் விடுப்பட்ட தொழுகை நோன்புகளை மீண்டும் களா செய்ய வேண்டும்.

​​


​​​​கடமையான குளிப்பு


♣ குளிப்பை கடமையாக்கும் காரியங்கள்

ஆண், பெண் உடல் உறவு கொள்ளல், மாதவிடாய் (ஹைலு) தொடக்கு ஏற்பட்டு முழுமையாக நின்ற பின், பிரசவ தீட்டு (நிபாஸ்) ஏற்பட்டு முழுமையாக நின்ற பின், தூக்கத்திலோ அல்லது விழிப்பிலோ விந்து வெளியாவதால் குளிப்பு கடமையாகும்.



♣ குளிப்பின் பர்ளுகள் - 2

1. "பெருந்தொடக்கை விட்டு நான் நீங்குகிறேன்" என்று மனத்தால் நிய்யத் செய்து கொள்ளுதல்

2. அந்த நிய்யத்தோடு உடல் முழுவதும் தண்ணீரால் நனையும் படி குளித்துக்கொள்ளுதல்.



♣ குளிப்பின் ஸுன்னத்துகள் - 11

முதலாவது பிஸ்மி சொல்வது, இரு மணிக்கட்டு வரை கழுவ வேண்டும், வாய் கொப்பளிப்பது, மூக்கை சுத்தம் செய்தல், உடையில் அல்லது உடலில் நஜீஸ் பட்டு இருந்தால் கழுவுதல், குளிக்கும் முன் சிறுநீர் கழிப்பது, பூரணமான முறையில் வுழு செய்வது, கிப்லாவை முன்னோக்குவது, உடலை நன்றாக தேய்த்து குளிப்பது, ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை செய்வது.



♣ கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது கவனிக்கவேண்டிய முக்கிய விடயங்கள்

தலையில் மூன்று தடவைகள் தண்ணீரை ஊற்ற வேண்டும். உடலை நன்றாக தேய்த்து குளித்தல், மூக்குத்தி, மோதிரம், தோடு போன்ற நகைகள் அணிந்துள்ள பெண்கள் அவற்றை நகர்த்தி அவற்றினுள் தண்ணீர் புகும்படி கழுவ வேண்டும். உதட்டு சாயம், நகப் போலிஷ் போட்டு இருந்தால் அவற்றை அகற்றி விட்டு குளிக்க வேண்டும். குளிக்கும் போது காதுகளையும், மூக்கையும், தொப்புளையும், மலம் சிறுநீர் கழிக்கும் பாகத்தையும் நன்றாக கழுவுவது கடமையாகும். இப்பகுதிகளுக்கு தண்ணீர் செலுத்தி சுத்தப்படுத்தவில்லையானால் குளிப்பு நிறைவேறாது. ஒரு முடி நனையாமல் இருந்தாலும் குளிப்பு  நிறைவேறாது.  வாஸ்லைன், ஹேர்டை போன்றவைகள் தலை முடியில் பூசப்பட்டு இருந்தால் அவற்றை சோப்பு அல்லது ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு கழுவ வேண்டும்.



வுழு


♣ பெண்கள் வுழு செய்யும் முறை என்ன?

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பின்வரும் முறையில்தான் வுழு செய்ய வேண்டும். இவற்றில் சிலது பர்ளாகும். சிலது சுன்னத்தாகும்.


♦ முடிந்தால் கிப்லாவை முன்னோக்கி இருக்கவேண்டும். (சுன்னத்)

♦ அஹூது, பிஸ்மி, ஸலவாத்து சொல்லுதல். (சுன்னத்)

♦ இரு கைகளையும் மணிக்கட்டுவரை கோதி மூன்று முறை கழுவுதல். (சுன்னத்)

♦ பல் துலக்குதல் (மிஸ்வாக்) செய்தல். (சுன்னத்)

♦ வாய்க்கும், நாசிக்கும் சேர்த்து மூன்று தடவைகள் தண்ணீர் செலுத்த வேண்டும். (சுன்னத்)

♦ வுளுவுடைய பர்லை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத்து செய்துக்கொள்ளல். (பர்ளு)

♦ இரு கைகளினால் தண்ணீரை எடுத்து முகத்தை மூன்று தடவைகள் கழுவுதல். (பர்ளு)

♦ வலது கையை முழங்கை வரை மூன்று முறை கழுவுதல். பின்னர் இடது கையை முழங்கை வரை மூன்று முறை கழுவுதல். (பர்ளு)

♦ இரு கைகளின் உட்புறத்தால் தண்ணீரை தொட்டு தலை முழுவதையும் அல்லது சிறிது பகுதியை மஸ்ஹு செய்தல் (தடவுதல்). (பர்ளு)

♦ இரு கைகளின் உட்புறத்தால் தண்ணீரை தொட்டு இரு காதுகளுக்கும் மஸ்ஹு செய்தல். (சுன்னத்)

♦ வலது காலின் விரல்களை கோதி கரண்டை கால் வரை மூன்று முறை கழுவுதல். பின்னர் இவ்வாறே இடது காலை மூன்று முறை கழுவுதல். (பர்ளு)

♦ மேலே சொன்ன ஒழுங்கில் வரிசையாக எல்லாவற்றையும் செய்து முடித்தல். (பர்ளு)

♦ எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் சொன்ன எண்ணிக்கையில் செய்தல். (அதாவது மூன்று முறை என்றால் மூன்று முறை செய்தல். மூன்றை விட குறைத்தோ கூட்டியோ செய்வது மக்ரூஃ (வெறுக்கத்தக்கது) ஆகும்.

♦ உடல் உறுப்புக்களில் தண்ணீர்படும்போது அதிக இடத்தில் படும்படி நீட்டி கழுவுதல். (உதாரணமாக, கைகளை கழுவும்போது முழங்கை வரை கழுவுதல் கட்டாயம். ஆனால், அதைவிட எவ்வளவு நீட்டி கழுவுறோமோ, அவ்வளவுக்கு நல்லது. ஏனென்றால் வுழு தண்ணீர் பட்ட இந்த உறுப்புகள் எல்லாம் நாளை மறுமையில் பொன்னை போன்று பிரகாசிக்கும் என ஹதீஸில் வந்துள்ளது)


♦ வுழு செய்து முடித்த பின் கிப்லாவை நோக்கி கீழ் காணும் துஆவை ஓத வேண்டும். (வுளு செய்த பின் ஓதும் துஆ) (சுன்னத்)


அஷ்ஹது அன்லாஹிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு வஅஷ்அது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு அல்லாஹுமஜ்ஹல்னி மினத் தவ்வாபீன வஜ்அல்னி மினல் முததஹரீன வஜ்அல்னி மின் இபாதிகஸ் ஸாலிஹீன். ஸுப்ஹானகல்லாஹும்மா வபிஹம்திக அஷ்ஹது அ(ன்)ல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்.


மேற்கூறப்பட்ட துஆவை ஓதுபவருக்கு, அவருக்காக சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவற்றில் எதில் அவர் புக விரும்புகிறாரோ, அதில் அவர் நுழைவார் என ஹதீஸில் வந்துள்ளது.



♣ வுழுவை முறிக்கும் காரியங்கள் எவை?

♦ அந்நிய ஆணை (திருமணம் செய்ய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஆணை) திரையின்றி தொடுதல்,

♦ முன் துவாரத்தால் அல்லது பின் துவாரத்தால் இந்திரியம் நீங்கலாக மற்றதேனும் வெளியாகுதல்

   (உதாரணம் - காற்று வெளியாதல், மலசலம் கழித்தல்)

♦ பித்தட்டு பூமியில் நன்கு சரியாக அமையாமல் நித்திரை செய்தல்

♦ அபத்தில் (மர்ம ஸ்தானத்தில்) கையின் உட்புறம் படுதல்

♦ சுய உணர்வு இல்லாமல் போகுதல்






தமிழ் பகுதி → பெண்கள் சுத்தம்