www.womanofislam.com

Muslim women's online learning centre

சூனியம் செய்வது பாவமாகும்.


மதீனாவிலே லபீத் இப்னு அஃஸம் என்னும் யூதன் ஒருவன் இருந்தான். அவன் சூனியம் செய்யும் முறையை நன்றாக அறிந்திருந்தான். அவனுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அளவற்ற கோபம் இருந்தது. அன்னவர்கள் இஸ்லாத்தை போதனை செய்வதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று பல முயற்சிகளை செய்தான்.


கடைசியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைச் சூனியம் செய்து கொடுமைப்படுத்த நினைத்தான். ஒரு நாள் அவனுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களது தலைமுடியும் சீப்புத் துண்டுகளும் கிடைத்தன. அவன் அவர்களைக் கொண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு சூனியம் செய்தான். அப்பொருள்களோடு ஒரு நூலும் வைத்திருந்தான். அந்த நூலில் பதினொரு முடிச்சுகள் போட்டிருந்தன.


அப்பொருட்கள் தர்வான் என்னும் கிணற்றில் ஒரு கல்லின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. லபீத் சூனியம் செய்த பின்பு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு சிறிது சுகவீனம் ஏற்பட்டது.


யூதன் சூனியம் செய்ததை அல்லாஹுத் தஆலா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு அறிவித்தான். அன்னவர்கள் தம் தோழர்கள் சிலரை அனுப்பி அந்த பொருள்களைத் தம்மிடம் எடுத்து வரச் சொன்னார்கள். தோழர்களும் அப்படியே செய்தார்கள்.


அச்சமயத்தில் ஸூரத்துல் பலக், ஸூரத்துல் நாஸ் ஆகிய 11 வசனங்களைக் கொண்ட 2 ஸூரத்துகளை அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு இறக்கினான். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அந்த 11 வசனங்களையும் ஓதினார்கள். ஒவ்வொரு வசனத்தையும் ஓதும் போதும் நூலில் இருந்த ஒவ்வொரு முடிச்சும் அவிழ்ந்தது. எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்த பின்னர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நோய் நீங்கி சுகமடைந்தார்கள். எனவே தான் சூனியம் செய்வது கொடிய பாவமாகும்.


எனவே அவ்விதமான காரியங்களில் நாம் ஈடுபடக்கூடாது. அவ்வாறான வீண் காரியங்களுக்கு இன்று அனேகமானவர்கள் அதிக பணத்தை செலவு செய்கின்றனர். ஒருவருக்குத் தீங்கு செய்தால் நமக்கும் தீங்கு ஏற்படும் என்பதை மனதில் கொண்டு செயற்படுவோம்.