www.womanofislam.com

Muslim women's online learning centre

இஸ்லாத்தில் சிறுவர் சிறுமியர் வளர்ப்பு


“தாயின் மடியே குழந்தையின் முதல் பள்ளி கூடம்” என்பது சான்றோர்களின் சொல். ஒரு குழந்தை பெற்றோர்களுக்கு இறைவனால் அளிக்கப்படும் அமானிதம். அதை நல்ல முறையில் வளர்த்து, நல்லொழுக்கமுள்ள மனிதனாக இந்த சமுதாயத்திற்கு அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அதிலும் ஒரு தகப்பனை விட தாய்க்கே வளர்ப்பு விடயத்தில் முதல் பொறுப்பு இருக்க வேண்டும். காரணம் தகப்பன் உழைப்பதற்காக வெளியே சென்று வருபவன். ஒரு தாயே 24 மணித்தியாலங்களும் குழந்தைகளை பராமரிக்கிறாள். எனவே தாயின் பங்களிப்பே மிக முக்கியமானது.


​​​சிறுவர் சிறுமியருக்குப் பயிற்சியளிப்பது மிகவும் முக்கியமான காரியமாகும். சிறுவனைப் பேணி வளர்த்துப் பண்பாடடையச் செய்வது பெற்றோரின் பொறுப்பு. சிறுவனின் உள்ளம் பரிசுத்தமானது, தெளிவானது, எந்தக் கருத்தையும் ஏற்கும் தன்மையுடையது, எந்த அறிவுக்கும் அதில் வித்திடலாம். நற்காரியங்களை அதில் விதைத்து அதைப் பற்றிய அறிவை அதில் தெளித்தால் இம்மை மறுமை இரண்டிலும் அவன் வெற்றிக் கொடி நாட்ட முடியும். இவனுக்கு அளிக்கப்படும் பெருமைகளில் இவன் பெற்றோருக்கும் பங்குண்டு. பெற்றோருக்கு மட்டுமல்ல, ஆசிரியருக்கும் உண்டு. அந்த உள்ளத்தில் தீமையை வித்தைத்தால் மிருகங்களை விடக் கேடுகெட்டவனாய் மாறிவிடுவான்.


“விசுவாசிகளே, உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்!” என்று இறைவன் கூறுகிறான்.


​தந்தை தன் மைந்தனை நெருப்பிலிருந்து காப்பாற்றுகிறான்! அவன் மீது நெருப்புப்படுவதை விரும்பமாட்டான். ஆனால் இது சாதாரண நெருப்பு. மறுமையின் நெருப்பிலிருந்து அவனைக் காப்பாற்றுவது தான் முக்கியம். படிப்பினையாலும் போதனையாலும் பயிற்சியாலும் மறுமை நெருப்பிலிருந்து காப்பாற்ற முடியும். இது தான் அதற்கு வழி!


​​சிறுவனின் உள்ளத்தில் தூய எண்ணங்களை உண்டாக்க வேண்டும். கெட்டவர்களோடு பழக விடக்கூடாது. அவனிடம் கேட்ட பழக்க வழக்கங்களை அனுமதிக்கக் கூடாது. இன்பத்திலும் மகிழ்ச்சியும் அவன் உள்ளம பற்றுதல் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீண்விரயம், அலங்காரம் முதலியவற்றை அவன் வெறுக்குமாறு செய்ய வேண்டும். இவற்றிலே தவறு நேர்ந்தால் அவன் ஆயுள் முழுவதும் பாழ்! அவன் வளர்ந்துவிட்ட பிறகு அவசியத்தை அவனால் உணர முடியாது. தவறான பாதையில் பாய்ந்து செல்வான். ஆகவே தான் எந்தப் பயிற்சியையும் பிஞ்சு மனத்திலேயே பதியவைக்க வேண்டுமென்று கருதுகிறேன்.

அவனை வளர்ப்பதற்கும் பால் ஊட்டுவதற்கும் நற்பண்புள்ள பெண்மணியை அமர்த்த வேண்டும். அவள் நல்ல உணவை – ஹலாலான உணவை – உட்கொள்ள வேண்டும். ஏனெனில் தவறான – ஹராமான உணவிலிருந்து உற்பத்தியாகும் பாலில் மங்களத் தன்மை கிடையாது. அந்தப் பால் வளர்ந்து வரும் குழந்தையின் உள்ளத்தில் தன்னாலியன்ற ‘கைவரிசை’ யைச் செய்யும். ஆரம்பமே இப்படியாகி விட்டால் முடிவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்!

சிறுவன் வளர்ந்து கருத்தறியும் பிராயத்தை அடையும்போது நற்பண்புகளை அவன் மனத்தில் பதிய வைக்க வேண்டும்! இந்தச் சமயத்தில் அவனிடம் ‘வெட்கம்’ தலைத்தூக்கும்! ஏதேனும் ஒரு செயலை அவன் வெட்கத்தின் காரணமாய்ச் செய்யாது விட்டுவிட்டான் என்றால், அப்போது தான் அறிவொளி பளிச்சிடுகிறது என்று புரிந்து கொள்ளலாம். அதன் பிறகு வேறு சிலவற்றைக் ‘கேவலமானவை’ என்று எண்ணுவான்: வேறு சிலவற்றை ‘மேலானவை’ என்று கருதுவான். எனவே சிலவற்றை வெறுக்கும் அவன் வேறு சிலவற்றை விரும்புவான். வெறுப்பிற்குறியதைச் செய்வதற்கு அவன் வெட்கப்படுவான். இதை இறையருள் என்றுதான் குறிப்பிட வேண்டும். தன்மைகள் நடுநிலையில் இயங்க ஆரம்பித்து விட்டன என்பதற்கு இது ஓர் அறிகுறி.


இப்படி ஒரு சிறுவனிடம் கேட்ட மனப்பான்மையைக் கண்டால் அவனை அப்படியே விட்டுவிடக் கூடாது. மேலும் மேலும் போதிக்க வேண்டும், சீர்திருத்த வேண்டும். முதலில் ஏற்படுவது உணவாசை, இதன் விஷயத்தில் நடுநிலையையும் பண்பாட்டையும் போதிக்க வேண்டும். ‘வலக் கரத்தால் தான் உணவை எடுத்து உண்ண வேண்டும்!” என்று கூற வேண்டும். உட்கொள்ளத் துவங்கும் போது ‘பிஸ்மில்லாஹி’ சொல்ல வேண்டும் என்றும், சாப்பாட்டின் விஷயத்தில் மற்றவர்களை முந்திக் கொண்டு பாயக் கூடாது என்றும் அவனுக்குப் போதிக்க வேண்டும். உணவையோ அதை உட்கொள்ளும் மற்றவர்களையோ முறைத்துப் பார்க்கக் கூடாது. விரைவாகப் புசிக்கக் கூடாது – இப்படியெல்லாம் போதிக்க வேண்டும். அதிகமாய்ப் புசிக்கும் குழந்தைகளை அவனுக்கெதிரில் இகழ்வதால் – குறைவாய்ப் புசிக்கும் குழந்தைகளைப் பாராட்டுவதால் நல்ல பலனை அடையலாம். அவன் உள்ளத்தில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை விளைவித்து விடும்.


உடையின் விஷயம் அடுத்து வருகிறது. வர்ண உடைகளை விடுத்து வெண்மையான ஆடைகளில் அவனுக்குப் பிரியத்தை உண்டாக்க வேண்டும். பட்டை அவன் கண்களில் காட்டக் கூடாது. வர்ணத் துணி, பட்டாடை முதலியவை பெண்களுக்குரியவை என்று அவன் மனத்தில் பதியுமாறு கூறவேண்டும். வீண் விளையாட்டுகளிலும், உடையின் விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்துவதிலும் பழக்கப்பட்ட சிறுவர்களுடன் அவனைக் கலந்துறவாட விடக் கூடாது.


பின்னர் பள்ளிப் பருவம், திருமறை, நபிமணி மொழி, பெரியோர் வரலாறு, முன்னோர் கருத்து – இப்படி ஒவ்வொன்றையும் போதிக்க வேண்டும். அதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். நற்போதனை தரும் கவிதைகளை அந்த இளம் உள்ளத்தில் தூவ வேண்டும். இதனால் அவன் நல்லவர்களையும், அறிஞர்களையும் விரும்பும் சுபாவத்தைப் பெறுவான். அவனிடமிருந்து நற்செயல் வெளிப்பட்டால் அவனைப் பாராட்ட வேண்டும். இதனால் அவனுடைய நல்லுணர்வு வலுவடைகிறது. அப்படி அவன் தப்பித் தவறி ஒரு தடவை தவறிழைத்து விட்டால் அதை மன்னித்து விட வேண்டும், மறந்து விட வேண்டும், கிண்டிக் கிளறி அந்தப் பிஞ்சு உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது. ஆனால் அதே தவறை அவன் மறுதடவை செய்தால் இரகசியமாய்க் கண்டிக்கலாம். “இதோ பார்! மறுபடியும் இந்த வேலையைச் செய்தாயோ நான் சும்மா இருக்க மாட்டேன். இதை மக்கள் அறிந்தால் நீ மிகவும் கேவலப்படுவாய்!” என்று எச்சரித்தாள் போதும். அதற்குமேல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

இப்படிச் செய்தால் அவனுக்கு உண்மை தெரிந்து விடும். நன்மைக்குப் பாராட்டுக் கிடைப்பதுபோல் தீமைக்கு தண்டனை கிடைக்கிறது என்று உணர்ந்து கொள்வான்.


தந்தை தன் மைந்தனோடு அதிகமாய்ப் பேசக் கூடாது. மதிப்போடு நடந்து கொள்ள வேண்டும். அவனுடைய போதனைக் கென்று குறிப்பிட்ட நேரத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் தன் தனயனைத் தந்தையைக் காட்டிப்பயமுறுத்த வேண்டும். அவனைப் பகலில் தூங்க விடக் கூடாது. ஏனெனில் இது சோம்பேறித் தனத்தை இழுத்துவருகிறது. இரவில் அவன் தாராளமாய்த் தூங்கட்டும். அவன் உடலை அளவுக்கதிகமாய்ப் பொறுக்காமல் கவனித்துக் கொள்வது அவசியம். பெற்றோருக்குத் தெரியாமல் அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் தடுக்க வேண்டும். ஏனெனில் ஒன்றைக் கேவலமானது – செய்யத் தகாதது என்று அவன் கருதினால் தான் அதை மறைவிடத்தில் செய்ய முற்படுகிறான். இப்படிச் செய்யப்படுபவை பெரும்பாலும் செய்யத் தகாதவையே! சோம்பேறித்தனத்தைத் தடுப்பதற்காக அவனை பகல் நேரத்தில் பயிற்சி, நடை முதலியவற்றில் ஈடுபடுத்தலாம், சற்றுத் தூரம் காலார நடக்கச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம்.

தன்னிடமுள்ள பொருள்களைக் காட்டித் தன் நண்பர்களுக்கு மத்தியில் அவன் பெருமையடித்துக் கொள்கிறானோ என்று ஊன்றிக் கவனிக்க வேண்டும். தன் பெற்றோர்களின் உடைமைகள், தான் புசிக்கும் உணவு வகைகள், தான் அணியும் ஆடைகள் முதலியவை அவன் பெருமையடித்துக் கொள்வதற்குப் பயன்படுகின்றன. இப்படியெல்லாம் அவனைச் செய்யவிடக்கூடாது. நண்பர்களோடு எப்படிப் பழக வேண்டும். அவர்களிடம் எந்த முறையில் உரையாட வேண்டும் என்றெல்லாம் போதிக்க வேண்டும்.

பிறருடைய உடைமையை அவன் விரும்பக் கூடாது. “இதில் பெருமையில்லை. உன் உடைமையைப் பிறருக்குக் கொடு. அதில் தான் பெருமையுண்டு!” என்று அவனிடம் கூற வேண்டும். ஏழைச் சிறுவர்களுடைய மனப்பான்மை பிறர் உடைமையைப் பார்த்து ஆசைப்படுவதில் ஆர்வங் கொண்டது. “பிறருடைய பொருளை விரும்புவதும், அதைப் பறித்துக் கொள்வதும் நாயின் குணங்கள்.... மனிதனாகிய நீ உயர்ந்தவனாயிருக்க வேண்டும்” என்று போதிக்கலாம்.


பொதுவாய்க் கூறினால், தங்கம், வெள்ளி முதலியவற்றின் மீது ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் எனலாம். பாம்பு, தேள் ஆகியவற்றைவிடக் கடினமான முறையில் அவற்றைப் பார்த்து அவனை நடுங்கச் செய்ய வேண்டும். பாம்பினால், தேளினால் ஏற்படும் நச்சு விபரீதத்தை விடக் கொடிய விளைவு பொன், வெள்ளி மோகத்தால் சிறுவர்களுக்கு ஏற்பட முடியும்! இது சிறுவர்களுக்கு மட்டும்தானா? இல்லை? பெரியோரும் இதனால் பாதிக்கபடுகிறார்கள்!


மற்றவர்களுக்கு முன்னிலையில் எச்சில் துப்புவது. மூக்குச் சிந்துவது முதலியவற்றைத் தடுக்க வேண்டும். கால்மேல் கால் போட்டுக் கொள்வதோ, முதுகுப் புறத்தைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதோ கூடாது என்று சொல்ல வேண்டும்! கையைத் தாடையில் வைத்துக் கொள்வதும், தலையை முழங்காலில் சாய்த்துக் கொள்வதும் தகாதவை என்று எச்சரிக்க வேண்டும். “இவை இரண்டும் சோம்பேறித் தனத்தின் அறிகுறிகள்” என்று கூற வேண்டும்!


பெரியோர் முன்னிலையில் எப்படி அமர்ந்திருக்க வேண்டும் என்று போதிக்க வேண்டும். “அதிகமாய்ப் பேசாதே! உண்மையோ, பொய்யோ – எதுவாயிருந்தாலும் தலையிலடித்துச் சத்தியம் செய்யாதே! இது கேட்ட பழக்கம், பேச்சை நீயே ஆரம்பிக்காதே. பிறர் உன்னிடம் கேட்கும் கேள்விக்குப் பதில் கொடுத்தால் போதும்!” – இப்படியெல்லாம் விளக்க வேண்டும். வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர்களின் பேச்சை உற்றுக் கேட்க வேண்டும். அவர்களுக்காக இடம் விட்டு வசதி பண்ண வேண்டும். பெரியார்களுடன் பழகும் சந்தர்ப்பங்களில் கேட்ட வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது.


கெட்டவர்களோடு பழகவிடாமல் சிறுவனைத் தடுத்து வைப்பது தான் மிகவும் முக்கியமான காரியம். மீறினால் அடித்துப் பயமுறுத்த வேண்டும்! பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு அவனுக்குப் பள்ளியின் களைப்புத் திரும்பும் படியான விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்க வேண்டும். விளையாட்டினால் களைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டை முற்றிலும் தடுத்து முழுக்க முழுக்க அவனைக் கல்வியில் ஈடுபடச் செய்வது சரஇயலல. இதனால் அவன் உள்ளம மாண்டு போகிறது! அப்போது அவனுடைய கூர்மதி மழுங்கிப் போய்விடும். இன்பத்தையும், ஆடம்பரத்தையும், விளையாட்டையும் அது விரும்ப ஆரம்பித்துவிடும். கல்வியின் பிடியிலிருந்து மீட்சி பெற வேண்டும் என்று அவன் துடிக்க ஆரம்பித்துவிடுவான். பின்னர் ஏற்படுவது விபரீதமே!


பெற்றோர், சகோதரர்கள், ஆசிரியர்கள் மற்றும் வயதில் உயர்ந்த அனைவரின் வழிபாட்டுணர்ச்சியையும் அவன் பார்த்தறிய வேண்டும். பெற்றோருக்கெதிரில் அவனை விளையாட அனுமதிக்கக் கூடாது. கருத்தறியும் பிராயம் வரும்போது பரிசுத்தம், தொழுகை முதலியவற்றில் அவன் கவனத்தைத் திருப்ப வேண்டும்.


ரமழான் மாதத்தில் சில தினங்களுக்கேனும் நோன்பு நோற்குமாறு அவனிடம் கூற வேண்டும். கட்டளையிட வேண்டும். பட்டாடை, பொன்னகை முதலியவற்றைத் தடை செய்ய வேண்டும்.

மார்க்கத்தின் வரம்புகளையும் மனிதன் நடக்க வேண்டியவற்றையும் எடுத்துரைக்க வேண்டும். திருடு, ஹராமான உணவு, மோசடி, பொய், இழிவார்த்தை இன்னும் சிறுவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் துர்க்குணங்கள் முதலியவற்றின் மீது அவனுடைய உள்ளத்தில் தனிப்பட்ட வெறுப்பையுண்டாக்க வேண்டும். சிறு வயதில் இத்தகைய எண்ணங்களை விதைத்துவிட்டால் அவன் பிராயத்தை அடையும் போது அவற்றின் அந்தரங்கங்களையும் மர்மங்களையும் அவனால் அறிந்து கொள்ள முடியும்! உணவு என்பது மருந்து. இறை வழிபாட்டில் சோர்வு ஏற்படாமல் தடுப்பதற்கு இந்த மருந்து பயன்படுகிறது. அந்த அளவுக்குத் தான் நாம் உணவை விரும்ப வேண்டும் என்று எடுத்துரைக்க வேண்டும்.

மேலும் அவனுக்குப் போதிக்க வேண்டும். “இந்த உலகம் இருக்கிறதே, இது அடிப்படையற்றது: ஸ்திரமில்லாதது. இது நிரந்தரமாய் இருக்குமென்றா எண்ணுகிறாய்! நிரந்தரத்துவம் இம்மைக்குக் கிடையாது! இம்மையின் இன்பங்கள் அனைத்தையும் மரணம் வெட்டி வீழ்த்திவிடுகிறது. இது நிலையற்ற உலகம்! ஆம், மறுமை தான் நிலையான இன்ப உலகம்! அது என்றைக்கும் அழியாது. அதன் நிலை என்றைக்கும் குலையாது. மரணம் ஒவ்வொரு வினாடியும் நம்மை அணுகிக் கொண்டிருக்கிறது. இம்மையை நல்ல முறையில் பயன்படுத்தி மறுமைக்கு வேண்டிய நன்மைகளைச் சேர்த்துக் கொள்பவனே உண்மையான அறிவாளி! இதனால் இறைவனிடத்தில் அவன் மதிப்பு உயரும், சுவனத்தில் அவனுக்கு அளிக்கப்படும் இன்பங்கள் விரியும்!”


சிறுவன் நல்ல பண்புள்ளவனாயிருந்தால், இந்தப் போதனை அவன் உள்ளத்தில் குறிப்பிடத்தக்க பயனை விளைத்துவிடும். கல்லில் செதுக்கிய உருவத்தைப் போன்று அவன் மனத்தில் இக்கருத்துக்கள் செவ்வையாய்ப் பதிந்து விடும்.


இதற்கு மாற்றமாய்ச் சிறுவன் வளர்ந்தால் – வீண் விளையாட்டு, ஆடம்பரம், உணவாசை, உடையாசை, பெருமை முதலியவற்றின் மீது அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டால், அவன் உள்ளம உண்மையை ஒப்புக் கொள்ளத் தயங்குகிறது என்று புரிந்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் நாம் போதித்த போதனைகளின் விளைவு தான் இது! எனவே முதலில் நாம் மிகவும் நிதானத்துடன் செயலாற்ற வேண்டும். குழந்தை என்னவோ பரிசுத்தமாயத் தான் பிறக்கிறது. நல்லது, கேட்டது ஆகிய இரண்டையும் அது ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையது. ஆனால் பெற்றோர்களே இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார்கள்!


அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:


​“ஒவ்வொரு குழந்தையும் முஸ்லிமாகத்தான் பிறக்கிறது. அதன் பெற்றோர்கள்தான் அதனை இறை நிராகரிப்பாளராக அல்லது நெருப்பு ஆராதனைக்காரனாக மாற்றிவிடுகிறார்கள்!”


ஸஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்:


​“அப்போது எனக்கு வயது மூன்று. அப்போதிருந்தே இரவில் வணகும் பழக்கம் என்னிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. என் மாமா முஹம்மத் பின் ஸவார் அவர்களைப் பார்த்து வணங்குவேன். ஒரு நாள் அவர்கள் என்னிடம் உன்னைப் படைத்த ஆண்டவனை நீ தியானிக்க வேண்டாமா?” என்றார்கள். இது ஆரம்பத்தில் நடந்தது. அப்போதெல்லாம் என் உள்ளத்தில் வணக்கத்தின் தித்திப்பு உண்டாகவில்லை. ‘அவனை எப்படி நான் தியானிப்பேன்?’ என்று நான் கேட்டேன். தியானத்தைப் பற்றி அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. “நீ உடையணியும் போது மனத்துக்குள்ளேயே ‘இறைவன் என்னோடிருக்கிறான்: அவன் எல்லாவற்றையும் பார்க்கிறான்: என் சாட்சியங்கள் அவனிடமே செல்கின்றன!’ என்று சொல்லிக் கொள்! நாவு அசையக் கூடாது! தெரிந்ததா என்று விடையிருத்தார்கள்.”


“அவர்கள் கூறியதுபோல் சில நாட்கள் நடந்து வந்தேன். பின்னர் அவர்களை மறுபடியும் அணுகினேன். ‘தினம் ஏழுதடவை அவ்வாறு கூறிவா!’ என்றார்கள். “அப்படியே சில நாட்கள் நடந்தேன். பின்னர் மறுபடியும் அவர்களை அணுகினேன். “தினம் பதினோரு தடவை சொல்லுவா!” என்று கட்டளையிட்டார்கள். இப்படி என்னை அவர்கள் பழக்கப் படுத்தினார்கள். அதன்படி நானும் செயலாற்றினேன். அப்போது அந்தப் பயிற்சியில் நான் இனிப்பைக் கண்டேன். அந்தத் தியானத்தில் என்னுள்ளம் இனிமை கண்டது. இப்படியே ஓராண்டு கழிந்தது.


“ஒருநாள் மாமா என்னைக் கூப்பிட்டார்கள். “நான் உனக்குச் சொல்லிக் கொடுத்ததை நினைவில் வைத்துக்கொள். அதை எப்போதும் ஓதிக் கொண்டுவா. நீ மண்ணறையில் புகும்வரை தொடர்ந்து செயல்படுத்து. ஏனெனில், அது இம்மையிலும், மறுமையிலும் உனக்குப் பலனளிக்கும்” என்றார்கள். “பல்லாண்டுகள் அதைத் தொடர்ந்து செய்தேன். என் உள்ளத்திலே இனிமையை உணர்ந்தேன். “பின்னர் மறுபடியும் ஒருநாள் மாமா என்னைக் கூப்பிட்டார்கள்.‘ஸஹ்ல்! இறைவன் உன்னோடிருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பார்க்கிறான். அவனிடம் உன் சாட்சியம் செல்கிறது. அப்படியிருக்க நீ அவனுக்கு முரண் செய்யலாமா? அவனுடைய கட்டளைக்கு எதிராய் நடக்கலாமா? தீய செயல்கள் குறித்து உன்னை எச்சரிக்கிறேன்” என்றார்கள்.



“இதன் பின்னர் என்னுள்ளத்தில் இனமரியாத பேரூக்கம் பிறந்தது. என் உள்ளத்தோடு நான் தனித்து உரையாட ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். ஆனால் நான் மறுத்தேன். மாமாவிடம் முறையிட்டேன். “எல்லா நேரமும் பள்ளியிலேயே இருப்பதால் ஆர்வம குறையுமோ?” என்று வாசித்தேன். “மாமா சலுகை தந்தார்கள். ஆசிரியரிடம் தக்க ஏற்பாடு செய்தார்கள். அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் பாடம் படித்துக் கொண்டு வீடு திரும்பிவிடுவேன். குர் ஆன் ஓதினேன்: மனனம் செய்தேன். அப்போது எனக்கு வயது ஆறு அல்லது ஏழு! காலமெல்லாம் நோன்பு நோற்றேன். பன்னிரண்டு ஆண்டுகள் வரை என் உணவு தொலிக் கோதுமை- அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ரொட்டி!


“எனக்கு வயது பதின்மூன்றான போது என் உள்ளத்தில் புதியதொரு பிரச்சினை தலை தூக்கிற்று. என் உறவினர்களிடம் அதைக் கூறினேன். என்னுடைய பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக ‘பஸ்ரா’ விற்குப் புறப்பட்டேன். அங்கேயும் திருப்தியில்லை, என் வினாவிற்கு விடை கிடைக்கவில்லை. அங்குள்ள அறிஞர்கள் அனைவரிடமும் கேட்டுப் பார்த்தாகிவிட்டது.


“கடைசியாக அபூஹபீப் ஹம்ஸா அவர்களிடம் வந்தேன்: அவர்கள் தாம் என் பிரச்சினையைத் தீர்த்தார்கள், என் வினாவிற்கு விடையிருத்தார்கள். பழ நாட்கள் அவர்கள் அண்மையிலேயேயிருந்து, அவர்களது நடையிலிருந்து என் நடையைத் திருத்திக் கொண்டேன். “பின்னர் ஊர் திரும்பி எளிய முறையில் வாழ்க்கையைத் துவங்கினேன். ஒரு தங்கக் காசுக்குக் கோதுமையை வாங்கி அதை இடித்து ரொட்டி தயாரித்துப் புசிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டேன். இந்த ரொட்டியில் உப்பும் போட்டுக் கொள்வது கிடையாது. இது எனக்குப் போதுமானது. இவ்வாறு நான் இருபது ஆண்டுகள் கழித்தேன். இதன் பிறகு பல்லாண்டுகள் பல இடங்களையும் சுற்றிப் பார்த்து இறைவனின் மகிமையை அறியும் பணியில் ஈடுபட்டேன். பின்னர் மறுபடியும் ஊர் திரும்பினேன். இப்போது இரவெல்லாம் நின்று வணங்கும் பழக்கம் தானாகவே எனக்கு வந்துவிட்டது.”

இப்படிக் கூறுகிறார்கள் ஸஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், இவர்களைப் பற்றி, “அவர்கள் உப்பு உட்கொள்ள நான் பார்த்ததில்லை. இறக்கும்வரை அவர்கள் அப்படிச் செயலாற்றி விட்டார்கள்!” என்று அஹ்மத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) கூறுகிறார்கள். எல்லாம் இறைவனின் பேரருள்!

​​