www.womanofislam.com

Muslim women's online learning centre

சினம் கொள்ளாதீர்.


சினம் அடக்கி சமூகத்தில் அன்புடன் சங்கமமாக இஸ்லாம் எடுத்துரைக்கின்றது. கொலையும் கொடூர செயல்களும் சினத்தால் நிகழ்வதால் அதை தடுக்க சீரிய பாதை காட்டுகிறது. தீமை புரிந்தோரையும் மன்னிக்க கட்டளை இடுகிறது. சினம் பற்றியெழும் தீ அன்பதை உணர்தல் வேண்டும். இணைந்து வாழும் பறவைகளின் இனிய உறவை குலைக்கிறான் வேடன். கோபக்காரன் குவலயத்தை குழியில் புதைக்கிறான். புகை மண்டலம் மூச்சையும் அடைக்கும் கண்களையும் மறைக்கும் சினப்புகையும் அப்படித்தான்.


அளவிலா அருளும், அளவிலா அன்பும் உள்ளவன் இறைவன் என்று புகழ்கின்றவர்கள் என்ன செய்ய வேண்டும்? பண்முறைகள் உயிர்கள் பால் அருள் காட்டவேண்டும். அன்பு சொரிய வேண்டும். வணக்க வழிபாட்டில் இறையருளை புகழ்கின்ற மனிதன் சினந்து படமெடுத்து ஆடலாமா? முறைகேடான சினத்தை அடக்குவது மனிதனின் கம்பீரத்துக்கும் வெற்றிக்கும் காரணமாகிறது. இறைப்பண்பில் மிகச்சிறந்தது அன்பு, மனிதன் மனிதனுக்கு அன்பு செலுத்தி சினத் தீயை அணைக்க சொல்லுகிறது இஸ்லாம்.



"அன்பை இழப்பவன் அனைத்தையும் இழக்கிறான்" என்கிறார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள் என்றும் உபதேசம் புரிந்தார்கள். சினம் மிகுவதாலும் அன்பும் அருளும் குறைவதாலும் மனிதன் மதிக்கப்படுவதில்லை. அப்படியானால் நன்னடத்தைக்குரியவனா அவன்? தவறிழைத்துக்கொண்டிருக்கும் பெரியவரையும்வேருக்கும் சொற்களை விரும்பி பேசுகின்றவர்களையும் அறிவுள்ளார் அணுகார் என்று திருகுர்ஆன் உரைக்கிறது.


மன்னிக்கும் மனப்பான்மை நன்னடத்தைக்கு உயிர் போன்றுள்ளது. மற்றவரை போரிட்டு வெல்வது வீரமல்ல சினம் கொன்று மன்னிப்பதே வீரம்! காயம் சிறிதெனினும் தூசி பட்டால் சீழ் பிடிக்கும். ஆமாம் சிறிய கோபம் தான் என்று இடம் கொடுத்தால் வாழ்வையே நாற்றம் எடுக்க செய்து விடும் சிந்திப்பது நல்லது செயல்படுவது அதைவிட நல்லது.


சினம் கொள்க!


மார்க்க விரோதமான செயலை கண்டால் கையால் தடுக்க வேண்டும். முடியாது போயின் நாவால் சொல்லி தடுக்க வேண்டும். அதுவும் முடியாது என்றால் மனத்தால் சினந்து வெறுக்க வேண்டும். அது நபி மொழி கொண்டு இஸ்லாம் காட்டும் நல்வழி. ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் இதில் பொறுப்புண்டு. தவறு காணும் இடத்தில் தட்டிக்கேட்டு திருத்துவது கடமை. மார்க்கம் பேணி தீர்க்கமாய் நடப்பது எல்லோருக்கும் கடன்.


ஆட்சியாளர்கள் குடிமக்களின் மீது அன்பும் நீதியும் செலுத்த வேண்டும். குடும்பத் தலைவன் தன் குடும்பத்திற்கு பொறுப்பேற்று நீதி செலுத்த வேண்டும். குடும்பத் தலைவி வீட்டை காத்து தலைவனுக்கு பணிந்து நடந்து மக்களை நேர் வழிபடுத்தி நீதி செலுத்த வேண்டும். பணியாட்கள் தன் எஜமானின் பொருளை பாதுகாத்தளிக்க வேண்டும்.


இவ்வாறு ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து நடக்க இஸ்லாம் நெறிபகர்கின்றது. முழுமை பெரும் வாழ்க்கைக்கு இஸ்லாம் பாதை வகுக்கின்றது. வணக்க வழிபாடுகளுடன் வாழும் முறைகள் அனைத்தையும் அறிந்து பின்பற்றி வாழ இஸ்லாம் அறங்கூறுகிறது. சொல்லுங்கள் நீதியோடு சொல்லுங்கள். செய்யுங்கள் நீதியோடு செய்யுங்கள். நீதி புரியும் இறைவன் நீதியை எல்லோரிடத்திலும் எதிர்பார்க்கிறான்.