www.womanofislam.com

Muslim women's online learning centre

ஷரீஆ - மத்ஹப் (இஸ்லாமிய சட்ட நிபுணர்களின் கருத்துகள்)


ஷரிஆ என்றால் என்ன?


ஷரீஆ என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட திட்டங்களை குறிக்கும். இஸ்லாமிய சட்டங்கள் அல்லாஹ்வினால் மனிதர்கள் நேர்வழி பெறுவதற்காக வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் ஆகும்.


ஷரீஆ என்பது இஸ்லாத்தில் எவற்றை எல்லாம் செய்ய வேண்டும்? எவற்றை எல்லாம் செய்ய கூடாது என்பதை போதனை செய்கிறது.


தெளிவாக கூறுவதானால், ஷரீஆ என்பது இஸ்லாமிய வெளிப்புற சட்ட திட்டங்களை குறிக்கும்.​​  ​​ 


​​

​​​மத்ஹப் என்றால் என்ன?


மத்ஹப் என்பது அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய சட்ட பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய மார்க்க மேதைகளால் எழுதப்பட்ட மார்க்க சட்ட திட்டங்களை குறிக்கும்.


மிக நுணுக்கமான மற்றும் புதிய பிரச்சினைகளுக்குரிய மார்க்க சட்ட திட்டங்களை ஒவ்வொரு பாமர முஸ்லிமாலும் அல் குர்ஆனை மற்றும் அல் ஹதீஸை ஆய்வு செய்து பெற முடியாது. காரணம் ஒவ்வொருவரும் அத்தகைய அறிவையும் நிபுணத்துவத்தையும் பெற்றிருப்பதில்லை. எனவே, அத்தகைய சட்ட திட்டங்களை மார்க்க மேதைகள் அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து தொகுத்து சட்டங்களாக இயற்றி பாமர மக்களுக்கு இலகுவாக விளங்கி கொள்ளக்கூடிய விதத்தில் அமைத்து கொடுத்துள்ளார்கள். அவையே மத்ஹப்கள் எனப்படுகிறது.


முழு உலகில் உள்ள முஸ்லிம்களாலும் நான்கு மத்ஹப்கள் பின்பற்றப்படுகின்றன. மத்ஹப் சட்டங்களுக்கிடையே சிறிது வித்தியாசங்கள் காணப்பட்டாலும் அனைத்துமே அல் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வழிமுறை ஆகியவைகளை கொண்டு பெறப்பட்ட சட்டங்கள் என்பதால் அவற்றில் ஏதேனும் ஒரு மத்ஹபை தாராளமாக பின்பற்றலாம்.


நான்கு  மத்ஹப்களின் பெயர்களும் அதனை உருவாக்கிய இமாம்களும் வருமாறு:


மத்ஹப்                                                                     உருவாக்கிய இமாம்

ஹனபி மத்ஹப்                                                      இமாம் அபூ ஹனிபா (ரலியல்லாஹு அன்ஹு)

மாலிகி மத்ஹப்                                                       இமாம் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

ஷாபியீ மத்ஹப்                                                      இமாம் அல் ஷாபியீ (ரலியல்லாஹு அன்ஹு)

ஹன்பலி மத்ஹப்                                                   இமாம் அஹ்மத் இப்ன் ஹன்பல் (ரலியல்லாஹு அன்ஹு)   



நாம் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும்?​​​ 


குறிப்பிட்ட ஒரு மத்ஹபைதான் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால், இதில் ஏதேனும் ஒரு மத்ஹபை பின்பற்றி ஒழுக வேண்டும். குறிப்பாக உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் தாம் வாழும் நாட்டிலோ அல்லது பிரதேசத்திலோ பெரும்பான்மையாக வாழும் மக்கள் பின்பற்றும் மத்ஹபையே பின்பற்றுகின்றுனர்.​ வட இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, மற்றும் சில அரபு நாடுகளில் பெரும்பாலான மக்கள் ஹனபி மத்ஹபை பின்பற்றுகின்றனர். அதேபோல் இலங்கை, தென் இந்தியா, யேமன், பாலஸ்தீன், சிரியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஷாபியீ மத்ஹப் பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), குவைத், வட ஆபிரிக்கா, மேற்கு ஆபிரிக்கா போன்ற நாடுகளில் மாலிக்கி மத்ஹப் பின்பற்றப்படுகிறது. சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளில் ஹன்பலி மத்ஹப் பின்பற்றப்படுகிறது. எனவே, தத்தம் பிரதேசங்களில் மக்களால் பெரும்பாலும் பின்பற்றப்படும் மத்ஹபை பின்பற்றுவது சால சிறந்தது.


அதேநேரம், ஏதேனும் ஒரு மத்ஹபை பின்பற்றுவது என்று முடிவு செய்தால், அந்த மத்ஹபின் சட்ட திட்டங்களை கற்று அதனையே தொடர்ந்து பின்பற்றல் வேண்டும். அடிக்கடி மாறிக்கொண்டு இருக்க கூடாது. அது சட்டதிட்டங்களில் விளையாடுவது போன்றதாகும்.  


​​ ​​






தமிழ் பகுதி → ஷரீஆ - மத்ஹப்