www.womanofislam.com

Muslim women's online learning centre

சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு.


பணம், பதவி, புகழ் இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது. தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடனும் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும்.


எதிலும் தனித்தன்மையுடன் விளங்குங்கள்;


ஒரு கருத்தினை இருவர் சொல்லும்போது ஒருவருடைய பேச்சில் சுவை இருக்காது. மற்றொருவர் பேச்சில் கவரும் தன்மை இருக்கும். ஒரு கருத்தரங்கில் ஒரு கருத்தினை இருவர் சொல்லும் விதத்தில் மாறுதலினைப் பார்க்கலாம். ஒருவர் கருத்தை நாம் ஏற்க முடியாதும் அடுத்தவர் கருத்து ஏற்கும்படியும் இருக்கும். ஒரு பள்ளிக்கூடத்தில் இரு ஆசிரியரிடையே வேற்றுமை இருக்கும். ஒரு ஆசிரியரை மாணவர்கள் மெய்ப்பார்கள், இன்னொருவரைப் பார்த்தால் மாணவர் ஒழுங்கிச் செல்வர். வீட்டில் ஒரு தந்தை நுழையும்போது அவருடைய மகன்கள் சிங்கம் புலியினைப் பார்த்ததுபோல் ஓடி ஒளிவார்கள். இன்னொரு தந்தையினைப் பார்த்தால் பாசத்துடன் குழந்தைகள் வந்து கழுத்தைக் கட்டிக்கொள்ளும். ஆகவே நீங்கள் ஓடி ஓடி உழைப்பதுடன் பாசத்துடனும் இருங்கள். “செல்வத்தினை பெறுவதற்காக பாசத்தினை இழந்து விடாதீர்கள்.”



அன்புடன் பழகுங்கள்;


நீங்கள் உங்கள் தாயாரின் அன்பு மழையில் நனையும்போது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும். ‘அதே பாசத்தினை நீங்கள் உங்கள் குடும்பத்தில் காட்டினால் நீங்கள் சிறந்த குடும்பத் தலைவனாக கருதப்படுவீர்கள். நீங்கள் ஒருவரை ஒரு இடத்தில் பார்க்க நேரிடுகிறது. அந்த ஒரு தடவையிலும் அவர் நேசிக்கும் நபராக இருக்க வேண்டும். வெளியில் அன்புடன் பழகும் நீங்கள் வீட்டில் கடுகடுப்பாக இருக்கக் கூடாது.



ஏழைகளிடம் அன்பு காட்டுங்கள்;


சிலர் ஏழைகளைக் கண்டால் காத தூரம் விலகிச் செல்வர். சிலர் ஒரு கூட்டத்தில் ஏழை ஒரு சிரிப்புச் சொன்னால் சிரிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு பணக்காரர் ஒரு செய்தியினைச் சொன்னால் விழுந்து விழுந்து சிரிப்பர். சிலர் ஏழைகள் சிறு தவறு செய்தாலும் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாக்குவர். ஆனால் அதே தவறை தன் உற்றார் உறவினர் செய்தால் மறைக்கப் பார்ப்பர். நீங்கள் ஏழையிடம் அன்பு செலுத்தினால் உங்கள் தரம் உயரும் அல்லவா?



வீட்டுப் பெண்களைக் கண்ணியமாக நடத்துங்கள்;


இன்று பெண்கள் வழி தவறும் பெரும்பாலான குடும்பங்களில் அவர்களுக்கு அன்பும் பாசமும் பரிவும் கிடைப்பதில்லை என்ற குற்றச் சாட்டினை சொல்கிறார்கள். வீட்டில் கணவன் மனைவியினைப் புறக்கணித்தால் மனைவி தடம் புரள வழிவகுத்தாகிவிடுமல்லவா? ஆண்கள் கட்டுமஸ்தான உடல்கள் கொண்டவர்கள் தான். ஆனால் பெண்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் தன் கணவனுடைய வறுமை, அழகின்மை, ஒய் வற்ற வேலை, அல்லது வேலையின்மை ஆகிய கஷ்ட நஷ்ட காலங்களில் உறுதுணையாக இருக்கும்போது, ஆண்கள் பணமும், புகழும் பெற்றால் பெண்களை கொடுமைப் படுத்துவதும், புறக்கணிப்பதும் எந்த வகையில் நியாயம்? பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும், ஆண்கள் பெண்களுக்கு ஆடையாகவும் இருக்கக் கூடாதா?



குழந்தைகளின் செயல்களுக்கு உங்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்;


உங்களது குழந்தை வீட்டில் சுட்டி செய்யும்போது, பள்ளியில் சண்டையிட்டு புகார் வரும்போது நீங்கள் அடிக்கப் பாய்வீர்கள். ஆனால் நீங்கள் பள்ளியில் படிக்கும் போது செய்த சுட்டிகளையும் வீட்டில் பிடித்த அடத்தினையும் எண்ணி சாந்தம் அடையுங்கள். குழந்தைகள் களிமண் போன்றவர்கள். ஒரு குயவன் எவ்வாறு களிமண்ணைப் பிடித்து உருளையில் வைத்துச் சுற்றுகிறானோ அது போன்றுதான் நீங்கள் உங்கள் குழந்தைகளை எவ்வாறு உருவாக நினைகின்றீர்களோ அதேபோன்று தான் அவர்கள் உருவாவர்.



மக்கள் மனதினைக் கவரும் விதம்;


மனிதர்கள் ஒரு விதம். ஆனால் மக்கள் மனதினை கவருவது பல விதம். ஒரு வியாபாரி தன் பொருளை விற்பனை செய்வதற்கு பல விதத்தில் விளம்பரம் செய்வார். அதேபோன்றுதான் மனிதர்களின் மனதினைக் கவருவதும் ஒரு கலையென்றால் மிகையாகாது. நீங்கள் ஒரு சபைக்குள் நுழையும்போது தெரிந்த முதலாமவருக்குக் கை கொடுக்கிறீர்கள். அவர் விருப்பமில்லாமல் கை கொடுக்கிறார். இரண்டாமவருக்கு கை கொடுக்கும்போது அவர் செல் போனில் பேசிக்கொண்டே கை கொடுக்கிறார். மூன்றாமவர் அடுத்தவரிடம் பேசிக்கொண்டே கை கொடுப்பார். ஆனால் நான்காமவர் உங்களுக்குத் தெரியாத நபராக இருந்தாலும் தனது இருக்கையிலிருந்து எழுந்து உங்களுக்கு கை கொடுத்து நீங்கள் உட்கார இடம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் யார் இடம் பிடிப்பார். உங்களுக்கு அறிமுகமில்லாத நபரினைதான் பிடிக்குமல்லவா. ஆகவே அடுத்தவர் உள்ளத்தில் இடம் பிடிக்க உங்கள் செல்வத்தாலோ, பதவியாலோ அல்லது அதிகாரத்தாலோ முடியாது. மாறாக அன்பினாலேதான் முடியும். ஒரு செல்வந்தர் தனது செல்வத்தின் மூலம் மனைவி, மக்களுக்கு நல்ல உணவினைக் கொடுத்ததின் மூலம் அவர்களுடைய வயிற்றினை நிரப்பலாம். ஆனால் அவர்களை கீழ்த்தரமாக நடத்தினால் அவர்களின் அன்பைப் பெற முடியுமா?


பொருத்தமான விஷயங்கள் தெரிந்து பேசுங்கள்;


பேசும் போது சரியான தலைப்பினை எடுத்துப் பேசுங்கள். ஒருவரிடம் பேசும்போது அவருக்குப் பொருத்தமான விஷயத்தை அறிந்து பேசுங்கள். ஒரு அறிஞரிடம் பேசுவதை போல மனைவியிடம் பேசாதீர்கள். மனைவியிடம் பேசும் தகவல்களை சகோதரர்களிடம் பேசாதீர்கள். இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை வயதானவர்களிடம் சொல்லாதீர்கள். அதேபோல் குழந்தைகளிடம் சிரிப்பான செய்திகள் சொன்னால் அவர்களை சந்தோஷப்படுத்தலாம்.



கலந்துரையாடலில் அன்பாக இருங்கள்;


உங்களில் பலர் நிறுவன மேலாளராக இருப்பீர்கள். அல்லது கல்வி நிலையங்களில் ஆசிரியராக இருப்பீர்கள். உங்களிடம் இருக்கும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அன்பாக இருங்கள்.



மனநிலை அறிந்து செயலாற்றுங்கள்;


ஒரு மனிதனுடைய மனநிலை அவனுடைய இன்பம், துன்பம், செல்வம், வறுமை ஆகியவையினைப் பொறுத்தே அமையும். ஒரு மனிதன் ஒரு ஜோக்கினைக் கேட்டால் அவன் சிரிப்பது அவன் மன நிலையினைப் பொறுத்தே அமையும். அவன் வருத்தத்தில் இருந்தால் சிரிக்க மாட்டான். அவன் சந்தோஷத்தில் இருந்தால் சிரிப்பான். நாம் மனிதர்களின் இதயங்களுடன் பேச வேண்டுமே ஒழிய அவர்களின் உடல்களிடம் பேசக் கூடாது.