www.womanofislam.com

Muslim women's online learning centre

ரமழான்: மாண்புகள் நிறைந்த மாதம்


இதயத்தையும், பார்வையையும், செயல்களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமழான். வான்மறை வழங்கப்பட்ட வளமான மாதம். நன்மைகள் நிறைந்த புனிதமான மாதம், அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நிறைந்த மாதம்.


எந்த மாதத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஷஹ்ரே அஜீம், ஷஹ்ரே முபாரக் என்று வர்ணித்துச் சொன்னார்களோ அந்த மாதம். உண்மையில் இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் புனிதமான தூய்மையான நாளாகும். இந்த மாதத்தின் ஒவ்வொரு இரவும் அருள் நிறைந்த, பாக்கியம் நிறைந்த இரவாகும்.





நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறுகிறார்கள்:


ரமழான் மாதம் வருகிறது.


வானத்துக் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன.


அருள் வளங்கள் மழையாய் பொழிகின்றன.


சுவனத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன.


நற்செயல்கள் நன்மைகளுக்கான பாதைகள் எளிதாக்கப்பட்டு விடுகின்றன.


எல்லோருக்குமே நன்மை செய்வதற்கான வாய்ப்பும், அருளும் கிட்டுகிறது.


நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன.


தீமைகளின் பாதையில் முட்டுக்கட்டையாக நோன்பு வழி மறித்து நிற்கின்றது.


ஷைத்தான்கள் விலங்குகளால் பூட்டப்பட்டு விடுகிறார்கள்.


தீமைகளைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விடுகின்றன என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)


இத்துனை அருள் வளங்கள் நிறைந்த புனித ரமழான் மாதம் நம்மை நோக்கி இதோ வந்து விட்டது. இறை கருணையும், அருள் வனங்களும், கிருபைகளும், இறை திருப்தியும், இறை மன்னிப்பும் பொதிந்து கிடக்கும். இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும். எனதருமை சகோதரிகளே! நம்முடைய பாத்திரம் காலியாக இருக்கிறதே. இந்த நிலை நமக்கு வேண்டாம். ஏதாவது நாம் செய்ய வேண்டும் நமக்குரிய இறையருள் பங்கை சேகரித்துக் கொள்ள நாம் உறுதியான எண்ணம் கொண்டு எழ வேண்டும். அப்பொழுதுதான் அதன் முழுப்பயனை அடைய முடியும்.


நபித்தோழர் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்: முஸ்லிம் ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டதை கவனித்தீர்களா? இறைவன் என்ன சொல்கிறான்.... அவனை நோக்கி ஓர் அடி முன்னேறினால் அவன் உங்களை நோக்கி இரண்டு அடி எடுத்து வைக்கிறான். நீங்கள் அவனை (இறைவனை) நோக்கி நடந்து சென்றால் அவன் உங்களிடம் ஓடோடி வருகிறான் என்று இறைவனே சொல்கிறான். எனவே நாம் ஒவ்வொருவரும் எதிர்நோக்கியுள்ள ரமழானை சிறப்பாகவும் சரியாகவும் பயன்படுத்துவேன் என்ற திடமான (நிய்யத்) எண்ணம் கொள்ள வேண்டும்.


எனவே இந்த புனித மாதத்தை கண்ணியப்படுத்தி, நாம் நல்ல அமல்கள் செய்து நிறைய நன்மைகளை பெற்றுகொள்வோமாக. இந்த புனித மாதத்தின் பரகத்தால் வல்ல அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக ஆமீன்








தமிழ் பகுதி → பெண்கள் கல்வி