www.womanofislam.com

Muslim women's online learning centre

குர்ஆன் ஷரீபை பேணுதலாக ஓதுவோம்


“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக ஓர் நல்லுபதேசம் வந்திருக்கிறது; அது (குர்ஆனாகும்) உங்கள் இருதயங்களிலுள்ள நோய்களுக்கு அட் ஒரு சஞ்சீவியாகவும், விசுவாசம் கொண்டவர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், ஒரு அருளாகவும் இருக்கிறது” (10 – 57)


“நிச்சயமாக இந்தக் குர்ஆன் (மனிதர்களுக்கு) நேரான வழியை அறிவிக்கின்றது; அன்றி விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்வோர்களுக்கு மிகப் பெரிய கூலியுண்டு என்றும் நன்மாராயம் கூறுகிறது.”


“மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனில் சகல உதாரணங்களையும் நாம் கூறியிருக்கிறோம்; அன்றி (அல்லாஹ்வுக்கு) பயந்துகொள்ளும் பொருட்டு, களங்கமற்ற இந்தத் திருமறையை (தெளிவான) அரபி மொழியில் வெளியாக்கினோம்.” (39- 27; 28)


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

இரும்பில் துரு பிடிப்பது போன்று இருதயத்திலும் துரு பிடிக்கும். ஸஹாபாக்கள் கேட்டார்கள். யா ரஸுலல்லாஹு! அந்த துரு எதனால் நீங்கும்? அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: திருகுர்ஆன் ஓதுவதாலும், எப்போதும் மரணத்தை நினைப்பதாலும் நீங்கி விடும்.


மனிதர்களுக்கு இறைவனால் அளிக்கப்பட அருட்கொடை திருகுர்ஆன் ஆகும். இந்த குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கு மாபெரும் வழிகாட்டியாக இருக்கிறது. எனவே பயபக்தியாக இதை ஒவ்வொருவரும் ஓதுவதும், ஓதுவதை செவி சாய்த்து கேட்பதும் குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதும் மிக சிறந்தது.


“உங்கள் குழந்தைகளுக்குக் குர்ஆன் கற்பிக்க வேண்டியதைக் கட்டாயக் கல்வியாக ஆக்கிக்கொள்ளுங்கள். குழந்தைகள் முதலாவதாகக் குர்ஆன் கற்கத் தொடங்கும்போது, அவர்களின் பெற்றோர்களது பாவங்கள் உடனே மன்னிக்கப்படும்; தீங்குகள் அகலும்.”


இதனால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருக்குர்ஆனைக் கற்பிக்கக் கடமைப்பட்டிருப்பதால், இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதனால், குழந்தைகளுக்குப் பிரயோசனமும், பெற்றோருக்கு நன்மையும் உண்டாகின்றன.


“நீங்கள் குர்ஆன் ஷரீபை பயபக்தியுடன் ஓதுங்கள். ஒவ்வொரு ஹர்புக்கும் தனித்தனி பத்து நன்மைகளுண்டு” என்று இப்னு மஸ்ஊது (ரலியல்லாஹு அன்ஹு) கூறியுள்ளார்கள்.


ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் குர்ஆன் ஷரீபை எடுத்துத் திறந்தவுடன் (ஹாதா கலாமு ரப்பீ) ‘இது என் ரப்பின் வசனமாகும்’, என்று முத்தமிட்டுக் கொள்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


“(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப் பெற்றால் வாய் மூடி செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள்.” (அல் குர்ஆன் 7 – 204)


நண்பர்களே! குர்ஆன் ஷரீபை விரைவாக ஓதாமல் நிறுத்தி இனிமையாக ஓதுதல் வேண்டும். ஓதக் கற்றுக் கொள்ளும் பாக்கியமிழந்தவர்கள், அது ஓதப்படுமிடங்களிலாவது தூய்மையோடு அமர்ந்து, செவி சாய்த்துக் கேட்பது நலவாக இருக்கும்.







தமிழ் பகுதி → பெண்கள் கல்வி