www.womanofislam.com

Muslim women's online learning centre

புறங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.


மனிதனின் இதயங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம் மனிதன் அடுத்தவர்களின் நல்வாழ்வுக்காக உழைக்கவில்லையென்றாலும் குறைந்தபட்சம் அடுத்தவர்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டவனாகவாவது இருந்திட வேண்டும் என்பதாகும் ஒரு மனிதனிடம் எந்தக் குறைகளையேனும் இட்டுக்கட்டி வீண் விவாதத்தில் அவரை ஈடுபடுத்தினால் அப்படிச் செய்பவர் ஒரு பொய்யன், மோசடிக்காரன், வெட்கங்கெட்ட வீண் மனிதன் இதையே இறை மறையில் இப்படிச் சுட்டிக்காட்டுகிறான்.


எவர்கள் இதற்குப் பின்னரும் நம்பிக்கை கொண்டவர்களுக்கிடையே (இத்தகைய) மானக்கேடான விஷயங்களைப் பரப்ப விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24;10)


ஒருவரிடம் உண்மையிலே ஒரு குறை இருப்பதாகத் தெரிந்தாலும் அதனை மறைத்துவிடுகின்ற விதத்திலேயே ஒரு முஸ்லிம் செயல்பட்டிருக்க வேண்டும். இதையே இறைவன் தன்னுடைய படைப்பினங்கள் மீது சொரிந்த அருட் கொடைகளுள் ஒன்றாகும். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை குறை காண்பதில் திருப்தி கொள்ளக்கூடாது. இது அவருக்கு அனுமதியில்லாத ஒரு செயல் ஆகும். ஏனெனில் நல் மனங்கொண்ட பெரியவர்கள் அடுத்தவர்கள் துன்பப்படுவதை பார்த்து மணம் பொறுக்க மாட்டார்கள். அந்தத் துன்பத்தில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்றே விரும்புவார்கள். அடுத்தவர்களிடம் காணப்படும் குறைகள் உண்மையாகவே இருந்தாலும் சரியே! அடுத்தவர்களிடம் குறை காண்பது அதை பிரஸ்தாபிப்பதில் திருப்தி காண்பது அவை ஓர் முஸ்லிமிடம் இருக்கவே கூடாத குணங்களாகும்.


இதனால் தான் இஸ்லாம் புறங் கூறுவது கூடாத செயல் எனக் குறிப்பிடுகிறது. ஏனெனில் இது ஒன்றை நிறுத்திவிட்டாலே பல தீமைகளின் வாயில்கள் அடைபட்டுவிடுகின்றன. மாறாக இதில் ஒருவன் ஈடுபடுவானேயானால் அவனுக்கு அல்லாஹ்வின் அருளும் ஆசியும் கிடைக்காமல் போய்விடுகின்றன.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் அறிவித்ததாக பின்வருமாறு அறிவிக்கின்றார்கள். “புறங்கூறுவது என்றால் என்ன? என்பதை நீங்கள் அறிவீர்களா?” என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் தன்னைச் சுற்றி இருந்தவர்களைக் கேட்டார்கள். குழுமி இருந்தோர் சொன்னார்கள். “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவார்கள்” இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் சொன்னார்கள் “நீங்கள் உங்கள் சகோதரரை அவர் வெறுக்கும் விதத்தில் நினைவுகூறுகின்றீர்கள். “குழுமி இருந்தோர் கேட்டார்கள். “நாங்கள் சொல்லும் குறை எங்களுடைய சகோதரரிடத்திலும் இருந்தாலும் நான் அதை சொல்லுவது புறங்கூருவதாகுமா?” பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் பதிலைத்தார். “நீங்கள் கூறும் குறை அவரிடத்தில் இருந்தால் அது புறங்கூறலாகும். நீங்கள் சொன்ன குறை அவரிடத்தில் இல்லையெனில் பின்னர் அதை நீங்கள் சொல்லும் தவறான குற்றச்சாட்டாகும்” (முஸ்லிம்)


நட்புகளைப் பாதுகாத்திடவும் சமுதாயத்தில் பிளவுகளை உண்டு பண்ணிடும் தீயசக்திகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றிடவும் இஸ்லாம் அமைத்துத் தந்த அரண் புறங்கூறுவதை விட்டொழியுங்கள்’ என்ற நல்ல பண்பாகும்.


ஒருவர் இன்னொருவரைப் பற்றி தவறானதொரு செய்தியைக் கேட்டால் அதனை மேலும் பெரிதுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டாம். இது சிறு துவாரம் வீழ்ந்த துணியில் விரலை நுழைத்து மேலும் அந்தத் துவாரத்தை பெரிதுபடுத்தும் செயலுக்கு ஒப்பானதாகும்.


பல தீய பேச்சுகள் தாங்களாகவே அழிந்துபோய் விடுகின்றன. நம் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றை அவ்வாறே விட்டு விட வேண்டியதுதான். சில சிறிய செய்திகள் போர்களுக்கே இட்டுச் சென்றிக்குகின்றன. காரணம் அவற்றை மக்கள் பேசிப் பேசி பூதாகரமாக்கி பூகம்பமாக உருப்பெறச் செய்து விடுகின்றன. அவை எளிதில் பற்றி எறிந்திடும் தீப்பொறிகளாகச் செயல்பட்டிருக்கின்றன.