www.womanofislam.com

Muslim women's online learning centre

புறம் நீங்கிய வாழ்வமைப்போம்.


புறம் பேசுவது இஸ்லாம் தடுத்துள்ள பாவச் செயலாகும். கோள் என அழைக்கப்படும் இப்பாவச் செயல் சமூகத்தின் கட்டுப்பாட்டையே குலைக்கின்ற பண்பற்ற செயலாகும். மனிதனும் சமூகத்தினதும் ஒற்றுமையை தகர்த்து வஞ்சகம் குரோதம் அவநம்பிக்கை போன்ற தீமைகளை ஏற்படுத்தும் இயல்பைக் கொண்டதாக புறம் காணப்படுகின்றது.


ஒரு சமயம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் புறத்தைப் பற்றி கூறுகையில் புறம் என்றால் உன் சகோதரன் வெறுக்கக் கூடிய ஒன்றைப் பற்றி நினைவூட்டுவதாகும் என்றார்கள். அக் குறைபாடு இருந்தாலும் அதை கூறுவது புறமாகுமா? என ஒரு ஸஹாபி கேட்க அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீர் கூறுவது இருக்கப் போய்த்தான் புறம் பேசியுள்ளாய், ஒருவரிடம் காணப்படாததை கூறுவது பழிச்சொல் கூறுவது அல்லவா? எனப் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்; அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு (முஸ்லிம்)


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியுள்ள ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். நம்மில் சிலர் ஒருவரிடம் காணப்படுவதைத் தானே கூறினோம் இல்லாததைக் கூறவில்லையே எனப் பிறரைப் பற்றி கதைத்து விட்டு தமக்கு நியாயம் கூறிக் கொள்வதைக் காண்கிறோம்.


ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி குறை கூறிப் பேசுவது புறம் என்ற பாவத்திலேயே சேர்க்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் குறைபாடு இல்லாத ஒருவரைப் பற்றி காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசுவது அபாண்டம் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


இன்றைய காலகட்டங்களிலே கூட்டங்களிலும் மேடைகளிலும் கலந்துரையாடல்களிலும் நடைபாதை உரையாடல்களில் புறம் கோலோச்சி நிற்பதைப் பார்க்கின்றோம். பாரதூரம் தெரியாமலே பெரும் பாவத்தை செய்து கொண்டிருக்கின்றோம். மேலும் எமது சமூகத்திலே சிலர் கர்வம் காரணமாக புறம் பேசித் திரிவதைக் காண்கிறோம். தனக்குத் தான் அனைத்தும் தெரியும் தன்னை விட்டால் உலக விஷயங்களை கூற வேறு ஆள் இல்லை. என்ற மமதையில் பலர் கூடும் இடங்களில் பள்ளிவாயலில், சந்தைகளில் வயல் வெளிகளில் குளிக்கும் இடங்களில் என பல இடங்களில் தம்பட்டம் அடித்து கொண்டிருப்பார்கள். இவர்களின் கதைகளில் உண்மைகளை விட புறம் பேசுவதே கூடுதலாக இருக்கும். ஆயிரக்கணக்கான பொய்களை அவிழ்த்து விட்டு தன்னை அந்த இடத்தின் கதாநாயகனாக காட்ட முயல்வார்கள். மற்றவர்களின் கதைகள் அவருக்கு அத்துப்படியாக இருக்கும். பிறர் வாழ்வை சந்திக்க இழுத்த அதில் சுகம் காணும் பொடுபோக்காளர்களால் என்றுமே சமூகம் நன்மை அடையாது. இத்தகையவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சாபத்துக்குரியவர்கள் ஆவார்கள்.


புறம் பேசித் திரியும் தீயவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கிறது. விசுவாசிகளே! பாஸிக் என்றும் தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால் அதனை அங்கீகரித்து அறியாமல் குற்றமற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதிருப்பதற்காக அதனை விசாரணை செய்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்யாவிடின் பின்னர். நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே கைசேதப்படக் கூடியவர்களாக ஆகி விடுவீர்கள் (49.6)



புறம் பேசுபவர்கள் நாம் அவர்கள் வழியிலேயே விட்டு விடக் கூடாது அவர்களுக்கு புறம் பேசுவதின் தீங்குகளை எடுத்துச் சொல்ல வேண்டும். “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பது போல எம்மிடம் காணப்படும் ஒற்றுமையை புறம் பேசுவது தகர்த்து விடும். பிளவுகள் பிரிவினைகள் தான் ஒரு சமூகம் அழிவதற்கு காரணங்களாகும்.


ஒற்றுமை என்னும் கயிற்றைப் பலமாக பிடித்துக் கொள்ளுங்கள் உங்களுக்குள் பிரிந்து விடாதீர்கள். என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறிய வார்த்தைகள் எமது சமூகத்தின் ஆணி வேறாக இருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் அதனை தெளிவாக உணர வேண்டிய சம்பவங்களை நாம் அனுபவித்து அறிந்திருக்கின்றோம்.


எனவே புறம் பேசுபவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அச்சமூட்டி அவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். அல்லாஹ்வின் சாபத்துக்கு நாம் ஆளாகக் கூடாது நல்லவர்களாக நற்பண்புகளை வெளிப்படுத்துபவர்களாக எமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய புரிந்துணர்வையும் புறம் நீங்கிய வாழ்வையும் அல்லாஹ் தமக்குத் தந்தருள்வானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

.