www.womanofislam.com

Muslim women's online learning centre

பிரார்த்தனையும் இறை ஏற்பாடும்!


பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் பல்வேறு தேவைகள் உடையவனாகவே படைக்கப்பட்டுள்ளான். ஆன்மீக தேவைகள் லௌகீக தேவைகள் என அடிப்படையில் இரண்டாக பிரித்தாலும் இரண்டு வகை தேவைகளையும் நிறைவேற்றி தருபவன் இறைவன் ஒருவனே என்பதுதான் ஒவ்வொரு முஸ்லிமினதும் நம்பிக்கை.

​​

உலக பார்வையில் உலக விசயங்கள் மனிதர்கள் மூலம் பெறப்பட்டாலும் உண்மையில் தருபவன் அல்லாஹ்வே. எனவே சகல தேவைகளுக்கும் அல்லாஹ்வை நாடுமாறு இஸ்லாம் நமக்கு கூறுகிறது. பிரார்த்தனை கூட ஒரு வணக்கம் என்றும் ஒரு தேவைக்காக திருப்பித் திருப்பி இறைவனிடம் இறைஞ்சுபவர்களை அவன் விரும்புவதுடன் அவர்களை தன்னிடம் நெருக்கமாக்கிக் கொள்கிறான் என்றும் சொல்லப்படுகிறது.


​​“எனது அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் நான் நிச்சயமாக சமீபமாயுள்ளேன் எனக் கூறுவீராக!” என்று இறைவன் கூறுகிறான்.


​​பிரார்த்தனை புரியும்போது வெறுமனே நாவால் மாத்திரமல்லாது, உள்ளச்சத்தோடு உருகி இறைஞ்சுவதே உயிரோட்டமான பிரார்த்தனையாக இருக்கும். சிலவேளை எமது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுவது தாமதமாகிக்கொண்டே போகலாம். ஏனெனில் எம்மில் சிலருக்கு இன்னும் துஆ கேட்பதற்கான ஒழுங்கு முறை தெரியாமலிருக்கின்றது.


துஆ கேட்கும் (பிரார்த்தனை புரியும்) ஒழுங்குமுறை:

1. அல்லாஹ்வை புகழ்தல்.

2. கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லல்.

3. அல்லாஹ்வின் அருளுக்காக நன்றி செலுத்தல்.

4. தனது தேவைகளை முன்வைத்துக் கேட்டல்.

5. இறுதியாக ஸலவாத்துடனும் அல்லாஹ்வை புகழ்ந்தும் துஆவை முடித்தல்.


இவ்வாறான ஒழுங்குகளைப் பேணியும் எமது துஆ அங்கீகரிக்கப்படாமல் போவது ஏன்?

அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்:

1. அல்லாஹ் நமக்கு நலவை நாடுவதாலாகும்

அதாவது, சிலவேளை நாம் நாடுவது நமக்கு கிடைப்பது நமக்கே ஆபத்தானதாக இருக்கலாம். எனவே அவற்றை எமக்கு அல்லாஹ் தராமல் போகலாம். எனவேதான் துஆ கேட்கும்போது அல்லாஹ்விடம் தான் கேட்கும் விடயம் தனக்கு நன்மையாக இருந்தால் தனக்கு தந்து உதவி செய் என்றும் தீயதாக இருந்தால் தந்து விடாதே என்றும் பிரார்த்திக்க வேண்டும்.


​​

2. எமது தீய செயல்கள்

பாவங்கள் எமது துஆவிற்கு தடைக் கற்களாக இருக்கும் என்பதனை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். எனவே துஆ ஏற்றுக்கொள்ளப்பட எமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, மற்ற மனிதர்களுக்கு செய்த பாவங்களுக்காக, அநியாயங்களுக்காக அந்த மனிதர்களிடம் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில், பாவமிழைக்கப்பட்டவன் மன்னிக்கும் வரை பாவம் செய்தவனை அல்லாஹ் மன்னிப்பதில்லை என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறி உள்ளார்கள்.


​​

3. அல்லாஹ் எம்மீது கொண்டுள்ள ஆழிய அன்பு

துஆ அங்கீகரிக்கப்படாமல் போவது அல்லாஹ் நம் மீது கொண்டுள்ள வெறுப்பினால் அல்லது கோபத்தினால் என்று மட்டுமே தெரிந்து வைத்துள்ள உங்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் இதுவும் உண்மையே. அல்லாஹ் தன் நேசர்களை அதிகம் சோதிப்பான். அந்த சோதனையின்போது யார் பொறுமையை கொண்டு அல்லாஹ்வின் நாட்டத்தை பொருந்தி கொள்கிறார்கள் என்று பார்த்து அவர்களுக்கு நிரப்பமான நற்கூலிகளையும் உயர்ந்த அந்தஸ்த்துகளையும் அல்லாஹ் வழங்குவது வழமை. எனவே அந்த சோதனை காலத்தில் எதனை கொண்டு அந்த நல்லடியார் சோதிக்கப்படுகிறாரோ அந்த சோதனையை நீக்கும்படி எவ்வளவுதான் அவர் பிரார்தித்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அவர் அல்லாஹ்வின் அன்பு பிடியினால் பிடிக்கப்பட்டு இருக்கிறார். இத்தைகைய சூழ்நிலைகளில் “யா அல்லாஹ், எமது சோதனைகளை இலேசாக்குவாயாக. எமக்கு அழகிய பொறுமையையும் உன் மேலான அன்பையும் தந்து எமது உள்ளத்தை அமைதிப்படுத்துவாயாக.” என்று பிரார்த்திக்க வேண்டும்.


​​

எனவே எம்மை விட எமது இறைவன் எங்களை நன்கு அறிந்தவன். எமக்கான அல்லாஹ்வின் திட்டமிடல் எமது திட்டமிடலை விடச் சிறந்தது என்பதை பசுமரத்தாணி போல் மனதில் பதித்து பாவமென்னும் சாக்கடையிலிருந்து எழுந்து இஸ்திஃபார் எனும் நீரினால் உள்ளத்தை தூய்மைப்படுத்தி, பொறுமையென்னும் சிகரத்தில் அமர்ந்து இறைவன் எமக்கு ஏற்பாடாக்கியுள்ளதில் திருப்தி கண்டால் நடப்பதெல்லாம் எமக்கு நல்லதாகவே இருக்கும்.







தமிழ் பகுதி → பெண்கள் கல்வி