www.womanofislam.com

Muslim women's online learning centre

பெண்ணுரிமை பேணிய பெருமைமிகு இஸ்லாம்


நன்றி : “வெற்றி” இஸ்லாமிய சஞ்சிகை ​​​

​இஸ்லாம் தன் உன்னத கொள்கையாலும் உயரிய நடைமுறைகளாலும் உலக மக்களை தன் பால் ஈர்த்து வருவதை பொறுக்கவியலாத சில புத்தி ஜீவிகள் புனித இஸ்லாத்தின் மீது புழுதி வாரி தூற்ற முற்பட்டு முடியாமல் தமது பேச்சை ஓரளவு அடக்க முயலுகின்றனர். அறிவியல் உலகிற்கு அப்பாற்பட்டது இஸ்லாம் என்று ஒப்பாரி வைத்தவர்கள் உண்மையை உணர்ந்த பின்னர் ஒதுங்கிவிட்டனர். வாளால் பரப்பப்பட்ட வன்முறை நெறி இஸ்லாம் என்று வக்கனை பேசியவர்கள் வரலாற்றை ஆராய்ந்துவிட்டு வாய்மூடி விட்டனர். இப்போது, பாவையர் உரிமைகளைப் பறித்தது இஸ்லாம் என்று சிலர் பகிரங்கமான ஒரு பொய்யைப் பரப்பி வருகின்றனர்.


​​ஆனால் உண்மையில் இஸ்லாம், பிற சமயங்கள் அனைத்தையும்விட பெண்ணினத்தைக் கண்ணென மதித்துக் கண்ணியப்படுத்தியிருக்கிறது. பொன்னெனப் போற்றிப் பெருமைப்படுத்துகிறது. பெண்களைக் குறித்து:


பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசாம்

கண்ணால் வெருட்டி.... யால் மயக்கி


என்றெல்லாம் அன்றைய சித்தர்கள் சித்தரித்துக்காட்டிய கால கட்டத்திலேயே உலக செல்வங்களிலேயே உன்னதமானது, “கைறு மாதா இத்துன்யா அல் – மர்அத்துஸ் ஸாலிஹா” என்றுரைத்து பாவையர் பெருமையை பாரினில் பறைசாற்றியது இஸ்லாம் அல்லவா?

பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகத் தாய்க்குலம், உயிரோடு குழிதோண்டி புதைக்கப்பட்ட காலத்தில் இந்த தாய்க்குலத்தின் காலடியில் தான் பிள்ளைகளின் சுவனமே இருக்கிறது என்று பிரகடனம் செய்த மார்க்கம் இஸ்லாம் அல்லவா! பாவமறியாப் பச்சிளம் பருவத்தில் தாய்க்குலம், சுவனத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டபோது அந்த சுவனத்தையே கொண்டு வந்து தாய்க்குலத்தின் காலடியில் இறக்குமதி செய்த மார்க்கம் இஸ்லாம் அல்லவா? 


​ஆண்களின் இன்பக் கேளிக்கைகளுக்காகவே படைக்கப்பட்ட ஆட்டக்காய்கள் தான் பெண்கள் என்றும், ஆடவும், பாடவும் அறையிலே கூடவும் பயன்படுத்தப்படும் வெறும் போகப் பொருட்கள் தான் பெண்கள் என்று தந்தையின் சொத்தாகக் கருதப்பட்டு பிள்ளைகளுக்காக வாரிசுரிமையாக்கப்படும் பொருள் தான் பெண்கள் என்றும் கன்னியர் குலம் கருதப்பட்ட காலத்திலேயே பெண்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு என்று உலகிலேயே முதலில் முழங்கிய மார்க்கம் இஸ்லாம் அல்லவா?


யஜூர் வேதத்தின் ஒரு பகுதியாக தைத்திரிய சம்ஹித் என்ற நூலின் படி சொத்துரிமை இழந்திருந்த இந்துப் பெண்கள் 1929 –ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்துவாரிசு வழி சொத்துரிமைச் சட்டத்தின் மூலம் சகோதரிகளும், பேத்திகளும் மட்டுமே சொத்துரிமைப் பெற்றனர்.


1937 –ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டப்படி மணமாகாத பெண்கள் மட்டும் சொத்துரிமை பெற்றனர். 1956-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் கூட தந்தையின் சொத்தில் மகளுக்கு முழுமையான வாரிசுரிமை இருக்கவில்லை. அதேநேரத்தில் 14-ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு கணவனின் மனைவியாய் தாய் – தந்தையின் மகளாய் பிள்ளைகளின் அன்னையாய் அண்ணனின் தங்கையாய், பாட்டன், பாட்டியின் பேத்தியாய் பல்வேறு உரிமையை வழங்கி மகிழ்ந்த வளமார் மார்க்கம் இஸ்லாம் அல்லவா?


பாலுக்கு மூடியிருப்பதால்

பாலின் தரம் தாழ்ந்துவிடுமா?

செங்கற்களுக்கு இல்லாத மூடி

தங்கக் கட்டிகளுக்கு மட்டுமே

இருப்பதால் தங்கத்தின் தரம்

குறைந்து விடுமா?


பூமணம் கமழ, புன்னகை தவழ, பொன்னகை இளங்க, புதுவாழ்வு சோலையில் அடியெடுத்து வைத்த பூவையொருத்தி தன் கணவனை இழக்க நேரிட்டால் அவளை மொட்டையடித்து மூலையில் உட்கார வைத்து அறுதளியாக, அமங்களியாக, அபசகுணமாக அவள் கருதப்பட்ட காலத்தில் விதவைகளுக்கும் விடிவு வேண்டும் என்ற வியத்தகு திட்டமாகிய விதவைகள் மறுமண திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்ததே உன்னத மார்க்கம் இஸ்லாம் அல்லவா? 

வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள், மணவாளன் இறந்தால் பின் மணத்தால் தீதோ? பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ! என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 20- ஆம் நூற்றாண்டில் வினாவெழுப்பி தமிழ் மக்களை விழிப்படையச் செய்திருக்கிறார். பாவேந்தரின் இந்த ஆதங்க வினாவிற்கு விடையாக மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதல்ல! நன்று! என 6-வது நூற்றாண்டிலேயே அகிலத்திற்கு அறிவித்த மார்க்கம் இஸ்லாம் அல்லவா? 


கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றும், கணவனே கண்கண்ட தெய்வம் என்றும், பத்தாம் பசலித்தனமாக பதிவிரதத் தத்துவம் பூவையர்க்குப் போதிக்கப்பட்டு வந்தமையால் கணவன் எத்துனை கொடியவனாக இருந்தாலும் அவனுடைய சித்திரவதைகள் எல்லாம் தாங்கி சித்தம் குலைந்து தவிர்க்கும் நிலை பல்வேறு மதங்களில் நிலவி வந்தபோது தகுதியற்ற கணவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் குல்உ என்ற உரிமையை உலகிற்கு அறிமுகம் செய்ததே உன்னத மார்க்கம் இஸ்லாம் அல்லவா?


ஒரு சமுதாயத்தில் பிறந்த பெண்கள் கடவுளுக்கென்றே காணிக்கையாக்கப்பட்டு பொட்டுத்தாலி சடங்கு நடத்தி ஆலயத்திலேயே விடப்பட்டனர். இதனால் அந்த செல்விகள் செல்வச் சீமான்களின் செல்லக்கிளிகள் ஆக்கப்பட்டனர். தேவதாசி முறை என்ற பெயரில் நடைபெற்று வந்த இந்த திருவிளையாடல் மூலம் பூவையர் பலர் பொதுவுடமையாக்கப்பட்டு பொழிவிழந்தார்கள். இன்னொரு சமுதாயத்தைச் சார்ந்த வனிதையருள் சிலர் வாழ்க்கைத் துணைவர்களுடன் வாழ வேண்டிய வாய்ப்பை இழக்கச் செய்து கடவுளின் சேவைக்கு என்று காரணம் காட்டப்பட்டு காலமெல்லாம் கன்னிகளாகவே மடாலயங்களில் வாழ்வை கரைய வைத்துக் கொள்ளும் கதிக்கு ஆளாக்கப்பட்டனர்.


மாதர் தம்மை இழிவுபடுத்தும் மடமையை கொளுத்துவோம் என்று தீர முழக்கம் செய்யும் தேசிய கவிஞர்கள் ஒரு புறம் மதத்தின் பெயரால், மரபுகளின் பெயரால் மாதர்களின் மானத்தை கொளுத்தும் மடமைச் செயல் மறுபுறம் என்று நிலைமை இருக்கும் போது பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்றுரைத்து மங்கையர் அருமையை உலகிற்கு அறிவித்தது இஸ்லாம் அல்லவா? 


அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்று கேட்டு கல்வியை ஆடவர் என்ற ஒரு பாலாரின் தனியுடமையாக்காமல் அறிவைத் தேடுவது முஸ்லிமான ஆண், பெண் இருபாலார் மீதும் கடமையாகும். (தலபுல் இல்மி ஃபரீளத்துன் அலா குல்லி முஸ்லிமின்) என்று ஆறாவது நூற்றாண்டிலேயே அறிவித்து அறிவை பொதுவுடமையாக்கியது இஸ்லாமல்லவா! ஆம்! இன்றைய இளைஞர்களுக்குப் புரியும் விதத்தில் சொல்வதனால் பெண்களைப் பார்த்து உன் சமயலறையில் நான் உப்பா சர்க்கரையா என்று மட்டும் கேட்கப்பட்ட காலத்திலேயே உன்பள்ளியரையில் நான் கண்களா? புத்தகமா? என்று கேட்கும் சிந்தனையைத் தூண்டிய மார்க்கம் இஸ்லாம் அல்லவா?


கற்பதற்கு மட்டுமல்ல! கற்ற கல்வியின் துணைகொண்டு முறையான தொழில் செய்து பொருளீட்டுவதற்கும் இஸ்லாம் பெண்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறதே! பெண்களுக்கு அவர்கள் உழைத்தவற்றில் உரிமை இருக்கிறது என்ற திருமறை வசனம் மூலம் உழைப்புரிமையையும் பெண்களுக்கு உவந்து வழங்கிய மார்க்கம் இஸ்லாம் அல்லவா?


இவ்வாறு இஸ்லாம் பேச்சுரிமை, சொத்துரிமை, மறுதார மண உரிமை, தகுதியற்ற கணவனின் இல்லறப்பிடியிலிருந்து விடுதலைப் பெற்றிடும் உரிமை, பதிப்புரிமை, தொழில் உரிமை போன்ற எண்ணற்ற உரிமைகளை ஆறாவது நூற்றாண்டிலேயே பெண்ணினத்திற்கு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. எனவேதான் கியரி பிரைட்டஸ் என்ற ஆங்கில அறிஞர் இது குறித்துச் சொல்லும் போது மேற்கத்திய சட்டங்களால் உறுதிசெய்யப்படாத உரிமைகளை இஸ்லாம் தன்னை ஏற்றுக் கொண்ட தாய்மார்கள், சகோதரிகள், துணைவியர் மற்றும் புதல்வியர்களுக்காக உறுதி செய்திருக்கிறது எனும் பொருளில்;

Islam assured to the mother sisters, wives and daughters of Islam some rights which are not assured to them by the western laws  என்று குறிப்பிட்டுள்ளார்.


பாலுக்கு மூடியிருப்பதால் பாலின் தரம் தாழ்ந்து விடுமா?

செங்கற்களுக்கு இல்லாத மூடி தங்கக்கட்டிகளுக்கு மட்டுமே இருப்பதால்

​தங்கத்தின் தரம் குறைந்து விடுமா?

ஐம்புலன்களிலேயே கண்ணுக்கு மட்டும் இமை எனும் மூடி இருப்பதால்

​கண்ணின் கண்ணியம் குன்றிவிடுமா?

இதுபோல ஆணுக்கில்லாத பர்தா மூடி பெண்ணுக்கு மட்டும் தேவையென இஸ்லாம் இயம்புவதால் பெண்களின் உரிமை உருக்குலையுமா?

உண்மையை உய்த்துணர்வீர்! அதற்கு வல்ல நாயன் அருள் புரிவானாக!