www.womanofislam.com

Muslim women's online learning centre

பரிகாசம் செய்வது பாவம்


​​​“விசுவாசிகளே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம்; அவர்கள் (அல்லாஹுவிடத்தில்) இவர்களைவிட மேலானவர்களாய் இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்ணும் மற்ற எந்தப் பெண்ணையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்.) அவர்கள் இவர்களைவிட மேலானவர்களாய் இருக்கலாம். உங்களில் ஒருவர் மற்றொருவரை இழிவாகக் கருதவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றொருவருக்கு (தீய) பட்டப் பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான) தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக்கொள்ள வில்லையோ, அவர்கள் அக்கிரமக்காரர்களாவார்கள்.” (49 – 11)


​ஒருவர் மற்றொருவரை பரிகாசம் செய்து, கிண்டல் பண்ணுவதும், அதனால் அவருக்கு மனம் புன்படுவதும் கூடாத காரியமாகும். இதனை நமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கண்டித்து விலக்கியிருக்கிறார்கள்.


ஒரு மனிதனின் அந்தரங்கத்தை அல்லாஹ்வே அறிய கூடியவனாக இருக்கிறான். ஒருவன் இந்த உலகத்தில் வெளி பார்வையில் சாதாரண மனிதனாக தெரிய கூடும். ஆனால் அவன் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் உயர்வுள்ளவனாக காணப்படுவான். எனவே ஒருவனை இழிவாக மதிப்பதும், பேசுவதும் முஃமின்களின் பண்பல்ல. அதுபோலவே ஒரு பெண்ணானவளை இழிவுபடுத்துவது, தரைகுறைவாக பேசுவது போன்றவை நல்ல பண்புகளல்ல.

குறிப்பாக, இந்த குணம் பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இன்னொரு பெண்ணின் அழகை பற்றியோ, உடல் உருவ அமைப்பை பற்றியோ, கல்வி அறிவு போன்றவற்றை பற்றியோ, அவர்களின் குண நலன்களை பற்றியோ கிண்டல் செய்வதும் கேலி பண்ணுவதுமாக உள்ளனர்.


ஒன்றை மறந்து விடக்கூடாது. இன்று கிண்டல் செய்பவர் நாளை பிறரால் கிண்டல் செய்யப்படும் நிலைக்கு ஆக்கப்படுவது அவ்வளவு பெரிதான காரியமல்ல இறைவனுக்கு. எனவே அந்த நிலை வராத அளவுக்கு புத்தியை பாவித்து நடந்து கொள்ளல் அனைவருக்கும் நலம்.


ஒரு சமயம் ஆயிஷா ஸித்தீகா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் ஒரு பெண்பிள்ளையைக் குறித்து “இவள் அதிகப் பேச்சுக்காரி” என்று சொன்னதற்கு ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், “நீ அவள் மனம் புண்படப் பேசுகிறாய். அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்” என்று கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.


அதிக பேச்சுக்காரி என்ற சாதாரண வார்த்தைக்கே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வளவு கண்டிப்பு காட்டினார்கள் என்றால் இன்று எமது பெண்மணிகள் பேசும் பேச்சுக்கு என்னவென்று சொல்வது?

எனவே மற்றவர்களை பரிகாசம் செய்வதன் விடயத்தில் மிகக் கவனமாக நாம் நடந்துக்கொள்ள வேண்டும். இது அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளையாகும். இந்த கட்டளைகளை புறக்கணிப்பது பெரும் பாவமாகும்.