www.womanofislam.com

Muslim women's online learning centre

ஒரு முஸ்லிம் ஆணின் கடமைகள்.


​இஸ்லாத்தில் பெண்களுடைய உரிமைகள், கடமைகளை பற்றியே பேசி கொண்டு இருக்கிறோம். ஆனால் அதில் ஆண்களுடைய கடமைகளும், பெண்களுக்கு அவர்கள் மேல் உள்ள உள்ள உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் வீட்டிலிருக்கும் போது என்ன செய்வார்கள் தெரியுமா? மனித குலம் அத்தனைக்கும் மிகப்பெரிய தூது செய்தியைக்கொண்டு வந்து நமது அன்பு நபியவர்கள் வீட்டிலிருக்கும்போது, வீட்டை பெருக்குவதிலும், துணிகளை தைப்பதிலும் ஆட்டிடம் பால் கறப்பதிலும் உதவி செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?! “உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே” என்ற ஹதீஸை எல்லோருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்!


ஆனா எத்தனை பேர் இதை கடைப்பிடிக்கிறார்கள்? வீட்டுக்கு வந்தவுடன், “நானே டயர்டா ஆஃபீஸ்ல இருந்து வந்திருக்கேன், என்னை தொந்தரவு பண்ணாத”ன்னு சொல்லாத ஆண்களை காட்டுங்க பாப்போம்! குளு குளுன்னு ஏஸியில உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நீங்க, பொறுக்க முடியாத வெயிலில், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன?



வீட்டை நிர்வகிப்பதில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் கடமை, ஆணுக்கு அதில சம்பந்தமே இல்லைன்னு நினைப்பவர்கள் கொஞ்சம் நபி வழியையும் கடைப்பிட்க்கட்டும். இஸ்லாத்தை பொறுத்த வரை உங்கள் வேலையும் வீட்டில் தான் துவங்குகிறது. அந்த வீட்டை நடத்துவதற்க்கு தான் நீங்கள் வெளியே சென்று சம்பாதிக்கிறீர்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். அதுவும் பிள்ளை கொஞ்சம் அழுதாலும் போதும், எரிச்சல் வந்து விடுகிறது.



ஒரு வீட்டில் உள்ள ஆண் தனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பொறுப்பாளி ஆகிறார். அவர்களின் உணவு, உடைமை, அனைத்திலும் செலவழிக்க வேண்டியது அவரது கடமையாகிறது. தனது தந்தை, மகன், கணவர், சகோதரர், இவர்களின் சம்பாத்தியத்தில் அப்பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. மாறாக, அப்பெண் எவ்வளவு தான் செல்வம் படைத்தவள் என்றாலும், வீட்டின்மீது செலவழிக்க அவளுக்கு கடமையில்லை, அவர்களுக்கு உரிமையும் இல்லை. எத்தகைய சூழ்நிலையிலும், ஒரு வீட்டுக்காக உழைத்து கொண்டு வருவது ஆணின் கடமையே. இதனால் தான் பெண்களுக்கு ஆண்களை அல்லாஹ் பொறுப்பாளி ஆக்கியுள்ளான்.



கணவன் கஷ்டப்பட்டு உழைத்துக்கொண்டு வந்த பணத்தை வீணடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இதையும் பெண்கள் கருத்தில் கொண்டு கவனித்து தன்னை திருத்தி கொள்ள வேண்டும்.



பெரும்பாலான முஸ்லிம் வீடுகள் பெற்றோர்கள் எப்படி இருக்காங்க தெரியுமா? தன் மகள் பத்தாவது, பனிரென்டாவதோட படிப்ப நிறுத்தினா போதும்னு சொல்லுவாங்க. என்ன காரணம்னு கேட்டா: “வீட்டு வேலைகளை பழகணுமே, ஆம்பளைங்க எப்படி போனாலும் பரவாயில்லை, ஆனா பொம்பளை புள்ளைக்கு கட்டாயம் வீட்டு வேலைகள் தெரிந்து இருக்க வேண்டும்”னு வீட்டு பெரியவங்க சொல்வாங்க.


பெண் பிள்ளைகளையும் ஆண் பிள்ளைகளையும் சரி சமமாக நடத்தும் படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறி இருக்க இது எவ்வளவு பெரிய தவறு.



எப்படி பெண் பிள்ளைகளுக்கு வீட்டு வேலைகளை கற்று கொடுக்கிறீர்களோ அது போலவே ஆண் பிள்ளைகளுக்கும் கற்று கொடுங்கள். அப்போது தான் அவர் திருமணம் முடித்து ஒரு பெண்ணோடு வாழும் பொழுது பொறுப்புணர்வோடு நடந்து கொள்வார்.



அதே போன்று கற்பு பேணி நடப்பதிலும் ஒரு பெண் பிள்ளை ஒழுக்கத்துடன் இருப்பது போலவே ஒரு ஆணும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லி கொடுங்கள். பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கனும், ஆம்பளை எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு பேசுவது வெட்ககேடு இல்லையா?



ஒரு பெண் தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டுதான் ஆடை அணிய வேண்டும் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை; அதற்கு நாம் அடிபணிகிறோம். இதையல்லாது வேறு எந்த காரணம் சொன்னாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா? பெண்கள் கட்டுக்கோப்பாக இருக்கனும்னு கட்டளை போடும் ஆண்கள், தங்களுடைய ஒழுக்கத்தை பேணுவதில் கவனமா இருக்காங்களா? அவர்களின் பார்வைகளில் தவறிருந்து அதை சுட்டிக்காட்டினால் உடனே “ஆமா, அவ ட்ரெஸ் பண்ணினா, நாங்க அபப்டித்தான் பார்ப்போம், அதுக்குத்தானே பெண்களை புர்கா போட சொல்லிருக்கு?”ன்னு தெனாவெட்டா ஒரு பதில் வரும். அப்படியா? பெண்களை மட்டும்தான் புர்கா போட சொல்லிருக்கானா அல்லாஹ்? உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லையா?



“நம்பிக்கை கொண்ட ஆண்களே, உங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள்” (அந்நூர், 24:30)



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் வழிபடி தான் நடந்துக்கொள்கிறோமா? அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடந்துக்கொள்கிறோமா என! உங்களை நோக்கி கேள்விகணைகள் வரும் முன்பே உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்! ஒரு முஸ்லிம் ஆண் தன் ஒவ்வொரு செயலிலும் நபிவழியை கடைப்பிடித்தால் மட்டுமே அவன் உண்மையான முஸ்லிமாகிறான்.


மார்க்கத்தில் பெண், ஆணுக்கு அடிமையில்லை, ஆண், பெண்ணுக்கு அடிமையில்லை. இதை புரிந்து கொண்டு, நமது வீடுகளிலும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அல்லாஹ் ஒருவனுக்காக அன்றி வேறெதற்காகவும் இல்லை என்ற நிய்யத்தின் படி நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.

. ​​​