www.womanofislam.com

Muslim women's online learning centre

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நரகத்தில் கண்ட பெண்கள்


விடிவிற்கும், அழிவுக்கும் பெண் காரணம் எனலாம். என்றாலும், எமது இன்றைய சமூக வாழ்க்கையில் பெண்களின் நிலைகள் பற்றி ஆராய்ந்து பார்க்கையில், அக்கூற்று உண்மையெனப் புலனாகின்றது. இன்று சமூகத்தின் ஆக்கத்திற்காக பெண்களின் பங்கு எவ்வாறு இருப்பினும் இன்று நாங்கள் பெண்களின் நிலைமைகளை இஸ்லாமிய கண்ணோட்டத்துடன் ஒப்புநோக்குகையில் மிகப் பின் தங்கியதாகவே காணப்படுகின்றன. எங்கள் அருமைச் சகோதரிகளின் ஆடை அலங்காரத்தைப் பார்க்கும் போது முற்றிலும் இஸ்லாத்திற்கு மாறு பட்டதாகவே காணப்படுகின்றது. இதனை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


அரைகுறையாக எத்தனையோ பேர் அணிகின்றார்கள், அதுமட்டுமன்றி ஆண்களைப் போன்று அணியும் பெண்களும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்களைப் பற்றி நமது கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.


இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்; “பெண்களைக் கொண்டு ஒப்பாகக் கூடிய ஆண்களையும், ஆண்களைக் கொண்டு ஒப்பாகக் கூடிய பெண்களையும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சாபம் செய்தார்கள்” எனச் சொன்னார்கள். (ஆதாரம்: புஹாரி)


இவ்வாறான பகிரங்க வழிகேடுகளில் செல்லக் காரணம் இஸ்லாத்தின் அடிப்படை அறிவின்மையென்றுதான் கூற முடியும். பெண்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாகக் கூறியிருக்க, இன்று மறைக்கக் கூடிய பகுதிகளை மறைக்காமலும், திறக்க வேண்டிய பகுதிகளை மறைத்தும் எமது மங்கையர்கள் உடையலங்காரம் செய்கின்றார்கள். பெண்மக்களாகிய நாங்கள் இவ்வாறான இழிசெயல்களிலிருந்து விடுபடுவதுடன் இஸ்லாம் கூறிய முறையில் நமது உடை, நடை, பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள எத்தனிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மிஃராஜ் சென்று வந்த விருத்தாந்தம் எமக்கு சான்றாக உள்ளது என்பதனை, சகோதரிகளே! சற்று கேளுங்களேன்!


ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: “நானும், பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களாரின் வீடு சென்றோம், அப்போது அன்னவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். காரணம் கேட்டபோது கவலையாய் கூறினார்கள், “மகனே! நான் மிஃராஜ் சென்றபோது நரகில் சில மங்கையர்களைக் கண்டேன், அவர்கள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.” எனக் கூறி பின்வருவனவற்றைச் சொன்னார்கள். (அல்லாஹ், அவ்வேதனையை விட்டும் எம்மைப் பாதுகாப்பானாக!)


“ஒரு பெண், அவளின் கூந்தலை இழுத்துக்கட்டி தலை கீழாக தொங்க விடப்பட்டிருந்தால், கீழே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் சூட்டால் அவளின் மூளை கொதித்து வடிந்து கொண்டிருந்தது. காரணம்:- இப்பெண் தன் கூந்தலை அந்நிய ஆடவர்களுக்கு மறைக்காதவள். இன்னுமொரு பெண் அவளின் நாவை வெளியே இழுத்து கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. காரணம்:- இவள் தனது கணவனை நாவால் துன்புறுத்தியவள். இன்னுமொரு பெண், அவளின் இரு மார்புகளையும் முதுகின் பக்கம் இழுத்துக் கட்டி தொங்கவிடப்பட்டு, அவளின் வாயில் கள்ளி மரத்தின் சாரும் ஊற்றப்படுகின்றது. காரணம்:- இவள் தன் கணவனின் உத்தரவின்றி அந்நிய குழந்தைக்குப் பாலூட்டியவள். மற்றுமொரு பெண், அவளின் இரு கால், இரு கைகளும் முன்னேற்றி உரோமத்தில் இழுத்துக் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது. பெரும் பெரும் பாம்புகளும், தேள்களும், நட்டுவக்காலிகளும் அவளைத் தீண்டிக்கொண்டிருந்தன. காரணம்:- அவள் தொழுவதற்கும், நோன்பு நோற்கவும் வசதியிருந்தும் அவைகளை நிறைவேற்றாமலும் பெரும் தொடக்கை நீக்கி குளிக்காமலும், கணவனின் உத்தரவின்றி வெளியில் செல்பவளாகவுமிருந்தாள். இன்னுமொரு பெண், அவளின் சரீரம் நெருப்புக் கத்தரியினால் துண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. காரணம்:- இவள் தன் உடலை அலங்கரித்து அந்நிய ஆடவர்களுக்குக் காட்டியவள். இன்னொருத்தி, முகம், கன்னம் கரீர் என்றுள்ளது தன்குடலை உருவித் தின்று கொண்டிருந்தாள். காரணம்:- இவள் பிற பெண்களின் குறைகளை அறிந்து அவைகளைப் பரப்பித் திரிந்தவள். இன்னொருத்தி, செவிடாகவும், ஊமையாகவும் நெருப்புப் பெட்டியில் போடப்பட்டு மூடப்பட்டிருந்தாள். அவளின் மூளை உருகி மூக்கின் வழியாக வழிந்து கொண்டிருந்தது. காரணம்:- அவளுக்கு விலக்கிய விடயங்களை விலகி நடக்காமலும் அந்நிய ஆடவர்களை பார்த்து பொய் பேசியவளுமாவாள். இன்னொரு பெண், அவளின் தலை மனிதனின் தலைபோன்றும் உடல் – கழுதையின் உடம்பைப் போன்றுமிருன்தது. அவளின் மீது இலட்சக்கணக்கான வேதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. காரணம்:- அவள் கோள் மூடுவதும் பொய் பேசுகிறவளாகவும் இருந்தாள், இன்னொருத்தி, நாயின் உருவத்திலிருந்தாள், அவளின் வாய் வழியாக பாம்புகளும். தேள்களும் உள்ளேயும் வெளியேயும் வந்து கொண்டிருந்தன. மலக்குகள் நெருப்பு சாட்டையினால் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். காரணம்:- அவள் குழப்பக்காரியாகவும், தன் கணவரிடம் கேவலமாக பேசியவளாகவும் அந்நிய உறவு வைத்தவளாகவும் இருந்தாள்” எனப் பதிலளிக்கப்பட்டது.


எனதன்பின் சகோதரிகளே! சற்று சிந்தனை செய்து பாருங்கள்! நாங்களும் மேற்கூறியவர்களைப் போல் இருந்தால் இறைவன் இத் தண்டனையை எமக்கும் தரக் காத்திருக்கின்றான். இதனால் நாமும் கெட்டு பிறரையும் கெடுக்க வழியமைத்துக் கொடுக்கின்றோம். ஆக, கெட்ட கொள்கைகளிலிருந்து விடுபட்டு, நல்ல கொள்கைகளைப் பின்பற்றும் நல்லோர்கூட்டத்தில், இறைவன் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக! (ஆமீன்)