www.womanofislam.com

Muslim women's online learning centre





முதுமைக்கு இஸ்லாம் அளிக்கும் கண்ணியம்


உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரணத்தை நோக்கிச் செல்கின்ற தன் பயணத்தின் இறுதியில் சந்திக்கின்ற காலகட்டம் தான் முதுமை! அதன் காரணமாகவே வயோதிகம் மரணத்தின் முன்னறிவிப்பு போன்றதாகும் என்றும் நரையும் மூப்பும் மரணத்தின் தூதுவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது. எல்லா நாடுகளிலும் பன்னெடுங்காலமாக முதுமைக்கும், முதியவர்களுக்கும் கொடுத்து வந்த முக்கியத்துவம், கண்ணியம், மரியாதை ஆகியவை நாகரீக உலகம் என்று சொல்லப்படுகிற இன்றைய அவசர காலகட்டத்தில் பெயரளவுக்குக் கூட கொடுக்கப்படாமல் முதியவர்கள் தங்களுடைய பிள்ளைகளாலேயே ஓரங்கட்டப்பட்டு, இறைவா! எங்களை சீக்கிரமாக அழைத்துக் கொள்! என்று மரணத்தை வேண்டி துஆச் செய்பவர்களாக இருப்பதைக் காணமுடிகிறது. பிள்ளைகளும், உற்றார் உறவினர்களும் கவனிக்காத காரணத்தால் ஏராளமான முதியவர்கள் பிச்சை எடுப்பவர்களாக மாறி வருவதும் நாம் அறிந்திருக்கின்ற எதார்த்த உண்மையாகும்.


பொருள் வசதி படைத்த பலர் தங்கள் பெற்றோர்களை முதியோர் காப்பகங்களில் சேர்த்துவிட்டு மாதா மாதம் காசெறிந்து தங்கள் கடமையினை நிறைவேற்றிக் கொள்வதையும் நாம் காண்கிறோம்.


இஸ்லாமிய சமுதாயத்தில் மட்டுமல்ல, எல்லா சமுதாயங்களிலும் நிலவி வருகின்ற இந்த அவல நிலை மனித சமுதாயத்தின் மீது விழும் வீழ்ச்சியினை தெள்ளென படம் பிடித்துக் காட்டுகிறது. முதிர்ந்த வயதினரை அனுபவத்தின் பெட்டகமாய், அறிவார்ந்த சான்றோர்களாய் வழிகாட்டிகளாய் எண்ணி அவர்களுக்கு உரிய மரியாதையை, கண்ணியத்தை அளிக்கும் பொழுது அவர்கள் நிச்சயமாக தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களின் நல்வாழ்வுக்கு பிரார்த்தனை செய்பவர்களாக இருப்பார்கள் என்பது திண்ணம். மாறாக, அவர்கள் அநீதி இழைக்கப்பட்டு வேதனை அடைந்தால் அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் இடையில் எவ்விதமான திரையும் இல்லை என்கிற நபிமொழி நமக்கு எச்சரிக்கையாக உள்ளது என்பது நம் அனைவரின் நினைவில் இருக்க வேண்டும்.


தாயின் காலடியில் தான் சுவர்க்கம் உள்ளது என்றார் தாஹா நபிகள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள். இதனை உதாசீனப்படுத்தி பணத்திமிறின் காரணமாக முதியோர் இல்லத்தில் முடக்கிப் போடப்பட்டிருக்கும் முதியவர்களின் ஒவ்வொரு வேதனை முனகலிலும் நரகத்தின் வாயில்கள் ஒவ்வொன்றாக திறக்கப்படுகின்றன என்பதை உணராதவராகவே செல்வந்தர் பலர் உள்ளனர்.


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்


“எதனை விதைக்கிறோமோ, அதைத்தானே நாம் அறுவடை செய்ய முடியும்” விதை ஒன்று விதைத்தால் சுரை ஒன்றா முளைக்கும் போன்ற முதுமொழிகள், மனிதர்கள் தம்முடைய இளமைப் பருவத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன. நாம் நம்முடைய பிள்ளைப் பருவத்தில் படித்த நீதிக் கதை ஒன்றை இங்கே நினைவுக்கு கொண்டு வருவது மிகப் பொருத்தமாக இருக்கும்.


இளம் தம்பதியினர் தங்களுடைய வயது முதிர்ந்த பெற்றோருக்கு அன்னம் அளிப்பதற்காக பழைய மட்பாண்டங்களையே உபயோகித்து வந்தனர். இதனை கவனித்துக் கொண்டே வந்தான் அத்தம்பதியினரின் மகன். ஒரு நாள் பெற்றோருக்கு சோறு போடுவதற்காக வைத்திருந்த மண் பாண்டங்கள் காணவில்லை. கவலையடைந்த தம்பதியினர் எல்லோரையும் அதைப் பற்றிக் கேட்டனர். கடைசியாக தங்கள் மகனிடமும் விசாரித்தனர். அதற்கு அச்சிறுவன் அம்மா! அந்த மண் பாத்திரங்களை நான் எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன். ஏனென்றால், நீங்கள் வயதானபோது உங்களுக்கு சோறு போடுவதற்கு அது தேவைப்படும் அல்லவா! அச்சிறுவனின் பதில் பெற்றோர்களின் மனநிலையை மாற்றி மனித பண்போடு வாழ்வதற்கு வழிவகுத்தது. இது ஒரு கதைதான் என்றாலும், வாழ்க்கைக்குத் தேவையான பெரும் பாடத்தையே நமக்குப் போதிப்பதாக உள்ளது.


இதனையே 14 – நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஐந்து நிலை வரும் முன்னர் ஐந்தை நல்வழியில் செலவு செய்யுங்கள் என்றும், அதில் ஒன்றுதான் முதுமைக்காக இளமையை நல்வழியில் பயன்படுத்துதல் எனக் கூறியுள்ளார்கள்.


நாம் வாலிபத்தில் செய்யும் நற்காரியங்களுக்கு பிரதிபலனாக வயோதிகத்தில் அதன் பயனை அடைய முடியும். அவ்வாறு இல்லாது நாம் வாலிபத்தை வீணான செயல்களில் கண்மூடித்தனமாகவும், அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய ரஸுலுக்கும் மாற்றமாகக் கழித்ததால், இன்று உடல் தளர்ந்து வறுமைப் பிணியால் பீடிக்கப்பட்டு பிறருடைய கேலிக்கும், பரிகாசத்திற்கும் ஆதரவற்ற நிலைக்கும் ஆளாக நேரிடும் என்பது நிச்சயம்.


இறைவனுக்கு, அவனுடைய திருத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களும் முதுமைக்கு கண்ணியம் அளிப்பதின் சிறப்பைப் பற்றி நிறைவாகச் சொல்லியுள்ளனர். பெற்றோரை நோவினை செய்யலாகாது, அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், சீ... என்று கூட அவர்களைப் பார்த்து கூறக் கூடாது. அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றெல்லாம் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.


இறைவனுக்கு இணைவைத்தலும், பெற்றோர்களை நோவினை செய்வதுமே பெரும் பாவம் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளியுள்ளார்கள் என அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு தடவை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளியதாக கஃப் இப்னு உஜ்ரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்; எங்களை நோக்கி அனைவரும் மிம்பருக்கருகில் வாருங்கள்! என்று கூறினார்கள். நாங்கள் அங்கு ஓடினோம். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மிம்பரின் முதல் படியில் கால்வைத்து ஏறியவுடன் ஆமீன் என்று கூறினார்கள். பிறகு இரண்டாவது படியில் எரிய பிறகும் ஆமீன் என்று கூறினார்கள். பின்னர் மூன்றாவது படியில் ஏறிய போதும் ஆமீன் என்று கூறினார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்களுடைய உபதேசத்தை முடித்துக்கொண்டு கீழே இறங்கிய போது, யா ரஸுலுல்லாஹ்! இன்று நாங்கள் தங்களிடமிருந்து என்றும் செவியுறாத ஒரு விஷயத்தை செவியுற்றோமே! என்று கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நான் முதற்படியில் கால்வைத்து ஏறியபோது ஹஸ்ரத் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் என் முன்தோற்றமளித்து, எந்த மனிதன் ரமழான் மாதத்தை அடைந்தும் தன் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறவில்லையோ, அவன் நாசமடைவானாக! என்று கூறினார்கள். நான் ஆமீன் என்று கூறினேன். பிறகு இரண்டாவது படியில் ஏறிய போது (நபியே!) தங்களின் திருநாமம் கூறப்பட்டு தங்களின் மீது ஸலவாத்துச் சொல்லாத மனிதன் நாசமடைவானாக! என்று கூறினார்கள். நான் ஆமீன் என்றேன். மூன்றாவது படியில் ஏறிய போது எந்த மனிதன் வயோதிகம் அடைந்த தன் தாய், தந்தை இருவரையோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்திருந்து அவர்கள் அவனை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யவில்லையோ அவன் நாசமடைவானாக! என்று கூறினார்கள். நான் ஆமீன் என்று கூறினேன் எனப் பதிலளித்தார்கள். (நூல்: தர்க்கீப்) அதே நேரத்தில், முதியவர்களுக்கு பணிவிடை செய்பவர்களுக்கு சுபச் செய்தியையும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.


அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ள நன்மாராயம் பற்றி ஹஸ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: வயது முதிர்ந்தவரை கண்ணியப்படுத்தும் ஒவ்வொரு வாலிபருக்கும் அவர் வயது முதிரும் போது அவரை கண்ணியப்படுத்துபவரை அல்லாஹ் ஏற்படுத்தியே தவிர வேறில்லை. (நூல்: திர்மிதி)


முதியவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கண்ணியம் அளிக்க வேண்டும். ஊழியஞ் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துவது இஸ்லாமியருக்கு மட்டுமே இதனைச் செய்ய வேண்டுமென்பதல்ல. மாறாக, அவர்கள் மனித சமுதாய முழுமைக்கும் இத்தகைய நற்செயல்களைச் செய்ய வேண்டுமென்று பணிப்பதை கீழ்க்கண்ட ஹதீஸ்களின் மூலம் விளங்க முடியும்.


ஒரு நாள் ஹஸ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்த பொழுது அவருடைய முகம் சற்று மாறுதல் ஏற்பட்டுள்ளதே! என்ன காரணம்? என்று கேட்டார்கள். ஒன்றுமில்லையே இறைவனின் தூதரே! என்றார்கள் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். இல்லை! ஏதோ ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது போன்று தெரிகிறதே! என்ன அது? என்று மீண்டும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கேட்ட பொழுது அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்: நான் இங்கு வந்து கொண்டிருக்கும் பொழுது வழியில் எனக்கு முன்னாள் ஒரு யூதப் பெரியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். முஸ்லிமல்லாத இந்த யூதருக்குப் பின்னால் எவ்வளவு நேரம் சென்று கொண்டிருப்பது என்று நினைத்து அவரை முந்திக் கொண்டு வந்தேன். வழி குறுகலாக இருந்ததால் அவர் மீது என் உடல் மோதிவிட்டது. இதுதான் நடந்தது என்று கூறினார்கள்.


இதனைக் கேட்ட அவர்கள் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்; அலியே! நீர் பெரிய தவறு செய்து விட்டீர். உம்மை விட வயதில் மூத்தவருக்கு மரியாதை தராமல் அவரை உராய்ந்து கொண்டு முந்தி வந்திருக்கிறீர்கள். அந்த நேரத்தில் அவருடைய மனம் வருத்தமடைந்திருக்கும் எனவே, உடனே அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டு வருவீராக! என்று பணித்தார்கள்.


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் வரலாற்றில் இன்னொரு சம்பவம், மக்கமா நகரில் நடைபெற்றது. ஒரு நாள் காலைப் பொழுதில் ஒரு பெரிய மூட்டையை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மூதாட்டியாரை பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மக்கமா நகரின் ஓர் ஓரத்தில் காண்கிறார்கள். அம்மூதாட்டியை அணுகி ஏதாவது உதவி வேண்டுமா? என வினவ அம்மூதாட்டி மக்கமா நகரில் முஹம்மது என்கின்ற ஒரு மனிதர் புதிய புதிய செய்திகளைச் சொல்லி மக்களையெல்லாம் அவர்களுடைய பழைய மார்க்கத்திலிருந்து புதிய மார்க்கத்திற்குத் திருப்புகிறாராம். அவருக்குப் பயந்தே இவ்வூரை விட்டே செல்வதற்கு முடிவு செய்துள்ளதாகவும். தான் கொண்டு செல்ல இருக்கும் சாமான்களின் சுமை அதிகமாக இருப்பதால் உதவிக்கு யாராவது கிடைப்பார்களா? எனக் காத்திருப்பதாகவும் கூறினார்கள். அதைக் கெட்ட பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தாம் அவருக்கு உதவுவதாகக் கூறி அம்மூட்டையை அம்மூதாட்டி சொல்லிய இடத்துக்கு தாங்களே சுமந்து சென்று இறக்கினார்கள். மிகவும் மகிழ்ச்சியடைந்த அம்மூதாட்டி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வாழ்த்தி அவர்கள் யார்? என்று கேட்க, பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் யாருடைய போதனைக்குப் பயந்து ஊரைவிட்டு காலி செய்கிறீர்களோ, அந்த முஹம்மதுவேதான் என்று கூறிய பொழுது இப்பெரிய சுமையை மனமுவந்து தமக்காக நெடுந்தூரம் சுமந்து வந்த மனிதர் நிச்சயமாக வழிகெடுப்பவராக இருக்க முடியாது என்பதை உணர்ந்து இஸ்லாத்தைத் தழுவினார் என்பது வரலாறு.


இன்று இளைஞர்களாக இருக்கும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத ஆண், பெண் அனைவரும் நாமும் ஒரு நாள் முதுமை என்னும் நிலையை அடைத்தான் போகிறோம். முதுமையில் நம்மிடம் பிள்ளைகளும், உறவினரும் எவ்விதமாக நடந்து கொள்ள வேண்டுமென்று விரும்புவோமோ, அதையே இன்று நாம் முதியவர்களாக இருக்கும் நம் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டும்! என்ற எண்ணத்தைப் பற்றிப் பிடித்து செயல்பட்டால், இம்மை மறுமை நற்பலன்களுக்கு நிச்சயமாக சொந்தக்காரர்கள் ஆவர் என்பது திண்ணம்!.