www.womanofislam.com

Muslim women's online learning centre

மற்றவர்களை மதிப்போம்


​​​இஸ்லாம் மனிதாபிமானத்தை வளர்க்கும் ஒரு மார்க்கம் என்ற அடிப்படையில் அதிகாரம், ஆதிக்கம் உடையோர், செருக்குடைய தனவந்தர் நல்லோர்களையும் சக்தியற்றோரையும் கஷ்டத்துக்குள்ளாக்குவது கூடாது. அவ்வாறு செய்வோர் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியோராவார்கள்.


அல்லாஹ்  பாவம் செய்வோரை பற்றி குர்ஆனில் பின்வருமாறு இவ்வாறு குறிப்பிடுகின்றான். “மேலும் விசுவாசம் கொண்ட ஆண்களையும் விசுவாசம் கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை (ச் செய்ததாக)க் கூறி துன்புறுத்துகிறார்களே, அத்தகையவர்கள் நிச்சயமாக பெரும் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொண்டார்கள்.” (33.58)


எமது சமுதாயத்தில் நல்லவர்களை நோவினை செய்யும் தீயவர்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர். இவர்கள் தமது அதிகாரத்தால் நல்லவர்களுக்குத் துன்பம் விளைவிக்கின்றனர். அவர்களின் உரிமைகளை மறுக்கின்றனர். அவர்கள் மீது பொய்க குற்றச்சாட்டைக் கூறி அவமானப்படுத்துகின்றனர். இச்செயல் மிகவும் தீங்கானது. அல்லாஹ்வின் தண்டனைக்கு உரித்தானது.


அத்துடன் அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: “ஆகவே அனாதையை நீர் கடிந்து கொள்ளாதீர் இன்னும் நீர் தர்மம் கேட்பவரை விரட்டாதீர்.” (அல் குர்ஆன் 93. 9- 10)


​இக்குர்ஆன் வசனங்களிலிருந்து அனாதைகள், அனுதாபத்துக்குரியவர்களை அன்புடன் நடத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. அவர்களை எச்சந்தர்ப்பத்திலும் கடிந்து, கோபித்து கதைக்கக் கூடாது என அல்லாஹ் எச்சரிக்கின்றான். பெற்றோரை இழந்து, வாழ்க்கை வசதியற்றிருக்கும் அனாதைகள் அல்லாஹ்வின் அருளுக்கும் உரியவர்களாவார்கள். எனவே, அவ்வனாதைகளை நாம் இரக்கக் கண்ணோட்டத்துடனேயே கவனித்து உதவ வேண்டும்.


அதேவேளை, எமது இல்லங்களை வரும் ஏழை எளியோர், இரப்போர் அனைவருக்கும் எம்மால் இயன்ற தர்மம் வழங்கி அன்புடன் கவனித்து வழியனுப்ப வேண்டும். அதுமட்டுமின்றி, பிச்சைக்காரர்கள் என்ற இழிவான நோக்கில் அவர்களை விரட்டக்கூடாது. அவர்களுக்கு நாம் ஒரு சிறு தர்மம் செய்தாலும் அல்லாஹ்விடத்தில் பெரும் கூலி கிடைப்பதோடு எமக்கு சுவர்க்கம் நுழையவும் அது ஏதுவாகின்றது.


மேலும் ஹதீஸ் குத்ஸியிலுள்ள பின்வரும் எச்சரிக்கை எமது கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். “எனது நேசனைப் பகைத்துக் கொள்பவனுடன் நான் யுத்தப் பிரகடனம் செய்கிறேன்.”


இந்தக் கூற்றின்படி ஏழைகளை விரட்டுவது அல்லாஹ்வுக்கு பெருங்கோபத்தை உண்டாக்கக் கூடியது என்பது புலனாகிறது அல்லவா?


அநாதைகளைப் பற்றி கூறும்பொழுது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து பின்வருமாரு கூறினார்கள்: “நீங்கள் அவர்களை கோபப்படுத்தினால் உங்கள் இரட்சகனைக் கோபப்படுத்தி விட்டீர்கள்.” எனவே அனாதைகளை அன்பு கூர்ந்து கவனிக்க வேண்டும்.