www.womanofislam.com

Muslim women's online learning centre

மனைவி மீது கணவனுக்குள்ள உரிமைகள்


ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மரணம் வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. அவளின் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பது ஒரு கணவனின் கடமை. 


ஆனால் சில கணவர்களின் கடமை தவறுதல் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.


"பெண்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்"  (புகாரி, முஸ்லிம்).

"நீ உண்ணும்போது அவளுக்கு உணவு கொடு. நீ (உடை) உடுக்கும்போது அவளுக்கும் உடை கொடு. அவர்களை முகத்தில் அடிக்காதே. இழிவாகப் பேசாதே. வீட்டிலே தவிர (பொது இடத்தில்) அவளைக் கண்டிக்காதே" என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கணவன்மார்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். (அபூதாவூது) 



மனைவிக்காக செலவு செய்தல் மனைவிக்கு உணவு கொடுப்பது, உடை கொடுப்பது, உறையுள் கொடுப்பது, போஷிப்பது உட்பட இஸ்லாம் ஆகுமாக்கியிருக்கின்ற அனைத்து செலவுகளும் கணவனுக்குரிய பொறுப்பாகும். இந்த பொறுப்பிலிருந்து கணவன் ஒருபோதும் ஒதுங்கிவிட முடியாது. 


மனைவியிடம் செல்வம் இருக்கின்றது. அவளது செலவுகளை அவளது செல்வத்திலிருந்து பார்த்துக் கொள்ளட்டும் என கணவன் சொல்ல முடியாது. அல்லது மனைவி சம்பாதிக்கின்றாள், அவளது சம்பாத்தியத்திலிருந்து அவளது செலவுகளை கவனித்துக் கொள்ளட்டும் என்றும் சொல்ல முடியாது. 


கணவன் தன்னுடைய நண்பர்களுடன் வெளியில் சுற்றி வயிறாற உண்டுவிட்டு, மனைவியை பட்டினியில் போடக் கூடாது. தனக்கென புத்தாடையொன்றை வாங்கி விட்டு மனைவிக்குக் கொடுக்காது விட்டு விடக் கூடாது. தன்னுடைய சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுபோல் மனைவியின் தேவைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.


​​பெண்கள் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்கள். ஆண்தான் பெண்ணை நிர்வகிக்கும் கடமையைப் பெற்றிருப்பவன். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியதும் அவனே. குடும்பத்திற்குச் செலவிட வேண்டியது ஆணுக்குத்தான் கட்டாயம். ஒரு கணவன் தன் மனைவிக்குரிய கண்ணியத்தைக் கொடுக்க வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள். பலவீனமான அவர்கள் விஷயத்தைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அதிகம் எச்சரித்துள்ளார்கள். 


இறுதிய ஹஜ்ஜின்போது நான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் உரையைக் கேட்டேன். அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து உபதேசம் செய்தார்கள். அப்போது அறிந்து கொள்ளுங்கள். மனைவியரிடம் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் உங்களிடம் கட்டுப்பட்டு உள்ளவர்களாவர். அது அல்லாத எதையும் நீங்கள் அவர்களிடமிருந்து சொந்தமாக்கிக் கொள்ளாதீர்கள். எனினும் அவர்கள் தெளிவான மானக்கேடான காரியத்தைச் செய்தாலே தவிர.


அவர்கள் பாவம் செய்தால் அவர்களை படுக்கையிலிருந்தும் ஒதுக்கி விடுங்கள். கடுமையாக இல்லாமல் லேசாக அடியுங்கள். (அதன் மூலம் அவர்கள்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.


அறிந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியரிடம் உங்களுக்கு உரிமை உண்டு, அவர்களிடம் உங்களை உரிமை என்பது, உங்கள் விரிப்பில் நீங்கள் விரும்பாதவர்களை உட்காராமலிருக்கச் செய்வதும் உங்கள் வீடுகளில் நீங்கள் விரும்பாதவர்களை அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும்.


அறிந்துகொள்ளுங்கள். உங்களிடம் அவர்களுக்குரிய உரிமைகள் என்பது அவர்களுக்கு உடையும் உணவும் தருவதும் நல்ல முறையில் நடந்து கொள்வதுமாகும் எனக் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு), நூல்: திர்மிதி) 


மனைவியை தலாக் கூறிய சந்தர்ப் பத்தில் பால் குடிக்கும் பருவத்தில் குழந்தை இருந்தால் அக்குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கும் உணவளிப்பதும் உடையளிப்பதும் கணவனின் கடமையாகும். அக்குழந்தையின் பராமரிப்புக்கான முழுமையான செலவுகளும் கணவனையே சாரும். 


போதுமான செலவுகளை கணவன் தராது விட்டால் அவனது பணத்திலிருந்து அவனுக்கு தெரியாமல் போதுமான அளவு பணத்தை எடுத்துக் கொள்வதற்கு மனைவிக்கு தடையேதுமில்லை. இவ்வாறான அனுமதியை ஹின்தா (ரழியல்லாஹு அன்ஹு) அவர் களுக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வழங்கினார்கள்.


இப்படிப்பட்ட அழகிய முன்மாதிரி ஒவ்வொரு முஸ்லிம் கணவரும் பின்பற்றுவதற்குத் தக்கதாய் இருக்கிறது.


​​