www.womanofislam.com

Muslim women's online learning centre

குழந்தைக்கு முதலில் கற்றுக்கொடுக்க வேண்டியவை


“தாயின் மடியே குழந்தையின் முதல் பள்ளி கூடம்” என்பது சான்றோர்களின் சொல். ஒரு குழந்தை பெற்றோர்களுக்கு இறைவனால் அளிக்கப்படும் அமானிதம். அதை நல்ல முறையில் வளர்த்து, நல்லொழுக்கமுள்ள மனிதனாக இந்த சமுதாயத்திற்கு அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அதிலும் ஒரு தகப்பனை விட தாய்க்கே வளர்ப்பு விடயத்தில் முதல் பொறுப்பு இருக்க வேண்டும். காரணம் தகப்பன் உழைப்பதற்காக வெளியே சென்று வருபவன். ஒரு தாயே 24 மணித்தியாலங்களும் குழந்தைகளை பராமரிக்கிறாள். எனவே தாயின் பங்களிப்பே மிக முக்கியமானது.


ஒரு தாய் முதலில் குழந்தைக்கு கற்றுகொடுக்க வேண்டிய பாடம் அல்லாஹ்வையும் அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும் நேசம் வைப்பது ஆகும்.


கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

“உங்களின் குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களின் மீது ஒழுக்கம் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தார்கள் மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஷரீஃப் ஓதி வருதல்”

நூல்: திர்மிதி, தைலமி


இங்கே நாங்கள் யோசிக்க வேண்டியது. ஒரு பிள்ளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அன்பு வைத்து விட்டால் அந்த குழந்தை அவர்களை தனது வாழ்க்கையின் முன்மாதிரியாக எடுத்து நடப்பான். அப்படியானால் அவனிடம் அத்தனை நல்ல குணங்களும் நிறைந்து விடும். அவன் புனிதனாக மாறிவிடுவான்.


அடுத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் குடும்பத்தினரான அஹ்லுல் பைத்துகள் மீது அன்பு செலுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களை கண்ணியம் செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும்.

பின்னர் அல் குர்ஆனை நியமமாக ஓதிவரும்படி செய்ய வேண்டும். அதன் ஒழுக்க விழுமியங்களை கற்றுக்கொள்ள செய்ய வேண்டும். இப்படி செய்வதால் அக்குழந்தை நல்ல குழந்தையாக மாறும்.

அடுத்தது குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை சொல்லி கொடுப்பது மிக முக்கியம். முதலில் நடைமுறை பண்புகளை சொல்லி கொடுப்பது அவசியம். சாப்பிடும் முறை, மற்றவர்களுடன் உறவாடும் முறை, ஸலாம் சொல்வது, வீட்டிற்கு வந்தவர்களுடன் பேசும் முறைகள், பொது இடங்களில் நடப்பது போன்ற விஷயங்களை சொல்லி கொடுப்பது மிக அவசியமானது. ஒவ்வொரு குழந்தைகளும் பண்புள்ளவர்களாக சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்பது ஒரு தாய்க்கு பெருமை ஆகும். அவள் வளர்ப்பில் ஒரு பண்பாளர் உருவாகுவது பெரும் பெருமை அல்லவா!


எத்தனை பட்டப்படிப்புகள் கற்று டாக்டர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் என்று பட்டங்களை பெற்றாலும் ஒரு பண்பாளர் என்ற பட்டமே மிக சிறந்தது. ஒரு பண்பாளரை உருவாக்குவது மிக கடினமே! அது சிறு வயது முதல் அழகிய வளர்ப்பில் மட்டுமே சாலும். எனவே ஒரு தாயானவள் இந்த விடயத்தில் அக்கறை கொண்டு தன் குழந்தைகளை மிக பேணுதலுடன் வளர்ப்பதானது மிக முக்கியமானது. இஸ்லாமிய வரலாறுகளில் நமது ஸஹாபா பெண்மணிகள், சிறந்த ஒரு சமுதாயத்தை அழகிய வளர்ப்பின் மூலம் உருவாக்கினார்கள். அதுபோலவே இன்றைய தாய்மார்களும் வளரும் சமுதாயத்தை பண்புள்ள சமுதாயமாக உருவாக்க கடமைபட்டுள்ளார்கள்.


​​