www.womanofislam.com

Muslim women's online learning centre

கொடிய பாவங்களிலிருந்து விலகிக் கொள்வோம்.


அல்லாஹுத்தஆலா மனிதர்களை ஏனைய படைப்புகளைவிட மிக மேலாக படைத்திருக்கின்றான். அதனால் நாம் அவனுக்கு நன் செயல்களை செய்து அவனது அன்பைப் பெறவேண்டும். பொய், களவு, சூது, விபச்சாரம், கொலை ஆகியன மிகவும் கொடிய பாவங்களாகும்.


பொய், நாவினால் ஏற்படக்கூடிய பாவங்களில் ஒன்றாகும். பொய் சொல்பவனை எவரும் பதிக்க மாட்டார்கள். அவனை நம்பவும் மாட்டார்கள். பொய் சொல்வது உணவுச் செல்வத்தை குறைத்துவிடும்! என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியுள்ளார்கள். நம்மிற் சிலர் உண்மையான சம்பவத்தோடு பொய்யையும் சேர்த்துப் பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பார்கள். இவ்வாறு செய்பவர்களையும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கண்டித்துள்ளார்கள். அதனால் நாங்கள் பொய் சொல்லாமல் இருப்போம். 


திருடுவதால் பல பாவங்கள் ஏற்படுகின்றன. அதனாலேயே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் திருட்டை வெறுத்தார்கள். அல்லாஹுத்தஆலா நமக்கு பல வசதிகளை செய்து தந்துள்ளான். அவைகளைப் பயன்படுத்தி நாங்கள் நல்ல முறையில் உழைத்து வாழ வேண்டும். எங்களுக்குச் சொந்தமான ஒரு பொருளை நாங்கள் களவு கொடுத்தால் மிகவும் வேதனைப்படுவோம். அதேபோலத்தான், களவு கொடுத்த மற்றவர்களும் வேதனைப்படுவார்கள். ஒருவன் முஃமினாக இருக்கும் நிலையில் களவு எடுக்க மாட்டான் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.


திருட்டை போலவே சூதாடுவதும் பெரிய தீமையாகும். சூதாடுபவனை அல்லாஹ் எச்சரித்துள்ளான். சூதினால் பல கேடுகள் விளைகின்றன. சூதாடுபவன் பணத்தை சிலவேளை இழந்திடுவான். அதன் பின் அவன் பலரிடம் கடன் வாங்க நேரிடும். கடன் கிடைக்காவிட்டால் களவு எடுக்க நேரிடும், சூதாடுபவனுக்கு சமூகத்தில் எவ்வித மதிப்பும் கிடைக்காது.


கொலை செய்வது முன்னைய பாவங்களை விட மிகக் கொடியதாகும். பொய், களவு, சூது போன்ற காரணங்களால் உலகில் கொலைகள் நடைபெறுகின்றன. ‘வேண்டுமென்று ஒரு முஃமினை கொலை செய்தால் அவனுக்கு கூலியாக நரகமே கிடைக்கும். அல்லாஹ் அவனை சபிக்கின்றான். கோபிக்கின்றான். அவனுக்குக் கோடி வேதனையையும் ஆயத்தம் செய்கின்றான்’ என்று அல்குர்ஆன் கொலை செய்தல் பற்றி எம்மை எச்சரிக்கின்றது.


ஆகையால், முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹுத்தஆலாவின் எச்சரிக்கைகளை அறிந்து நன்மையான காரியங்களைச் செய்வோம். தீமையான காரியங்களைச் செய்யாது விலை இருப்போம்.