www.womanofislam.com

Muslim women's online learning centre

கண்ணியம் மிகுந்த முஹர்ரம் மாதம்


நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என, வானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நாளிலேயே எழுதப்பட்டு விட்டது. அவற்றுள் நான்கு புனித மிக்கவை. என்று கூறுகிறது திருக்குர்ஆன். இஸ்லாமிய ஆண்டின் ஆரம்ப மாதமாகிய முஹர்ரம் மாதமும் புனிதமிக்க 4 மாதங்களில் ஒன்றேயாகும்.


மேலும் முபஸ்ஸிரீன்கள் கூறுகையில் அந்த 4 மாதங்கள் ஆகிறது துல் கஃதா, துல் ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய 4 மாதங்களாகும். இந்த 4 மாதங்களும் எந்தளவுக்கு கண்ணியமானதென்றால் ஜாஹிலியா காலத்து மக்கள் கூட இதை கண்ணியப்படுத்தியிருக்கின்றார்கள். அதாவது அந்த மாதத்தில் போர் செய்ய மாட்டார்கள். இந்த 4 மாதங்களில் ஒன்றுதான் இப்போது நாம் இருக்கும் முஹர்ரம் மாதமாகும்.


இந்த மாதத்தைப் பற்றி ரஹ்மத்துலில் ஆலமீன், ஸபீஉல் முத்னிபீன், பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறும்போது, (அக்ரிமூ ஸஹரல்லாஹில் முஹர்ரம்) “அல்லாஹ்வுடைய முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துங்கள். ஏனென்றால், யார்? முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துகிறார்களோ, அவருக்கு சுவர்க்கத்தில் பெரிய நிஃமத்தும், நரகத்தை விட்டும் பாதுகாப்பு கொடுக்கப்படும். இந்த ஹதீஸுக்கு விளக்கம் கொடுக்கும் முஹத்திஸீன்கள் கூறுகின்றார்கள். முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவதென்றால், முஹர்ரம் உடைய மாதத்தில் அமல், இபாதத் போன்றவற்றில் அதிகம் அதிகம் ஈடுபடுவதாகும்.


1. மேலும் பெருமானார் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். யார் தன் மீது நரகத்தை ஹராமாக்க விரும்புகின்றானோ? அவன் முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்தவும்.


2. இந்த மாதத்திலே ஒரு தினம் இருக்கின்றது. அதற்கு ஆஷுரா என்று சொல்லப்படும். அந்த தினத்திலே பல அற்புத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.



மெய் நிலை கண்ட ஞானி, மாநபியின் திருபேரர், கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் கூறினார்கள்:


இம்மாதத்தின் சிறப்பான ஆஷுராவுடைய நாளில்தான்,


1. ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களின் துஆ ஒப்பு கொள்ளப்பட்டது.


2. ஹஸ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களுக்கு சுவனப் பெருவாழ்வு கிட்டியது.


3. ஆறுமாத கடலில் அலைக்கழிந்த பின்னர் ஹஸ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களின் கப்பல் ‘ஜூதி’ மலையில் ஒதுங்கியது.


4. ஹஸ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் பிறந்ததும், அல்லாஹ் அவர்களை தன் கலீலாக ஏற்றதும், நம்ரூதுடைய நெருப்பு குண்டம் அவர்களுக்கு சுவனப் பூங்காவாக மலர்ந்ததும் அன்றேயாகும்.


5. ஹஸ்ரத் தாவூத் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களின் பிழை பொறுக்கப்பட்டதும் இந்நாளிலே.


6. ஹஸ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் இழந்த ஆட்சியை அன்றை தினமே மீண்டும் அடையப் பெற்றார்கள்.


7. சோதனை வயப்பட்ட ஹஸ்ரத் அய்யுப் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் நோய் நீங்கி நலம் பெற்றதும் இன்றேதான்.


8. நைல் நதி பிளந்து பனீ இஸ்ராயீல்கள் தப்பி செல்ல வழிவிட்டு பிர்அவ்னை விழுங்க, அல்லாஹ் ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களுக்கு ஆஷுராவுடைய அந்த நாளிலேயே வெற்றியை தந்தான்.


9. கடும் இருட்டில், மீனின் வயிற்றில் 40 நாட்கள் கிடந்தது அழுது புலம்பிய ஹஸ்ரத் யூனுஸ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் மீண்டும் வெளியானது ஆஷுராவுடைய நாளில் தான்.


10. கொலைகாரர்களிடம் இருந்து ஹஸ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களை காப்பாற்றி அல்லாஹ் தன் பால் உயர்த்திக் கொண்டதும் ஆஷுராவுடைய நாளில்தான்.


மேற்கண்ட பத்து காரணங்களுக்காக புனிதம் பெற்ற ஆஷுராவுடைய நாள் இஸ்லாத்துக்கு முந்திய அரபிகளால் மட்டுமல்ல யூதர்களாலும் கண்ணியப்படுத்தப்பட்டே வந்துள்ளது.


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள், துல்ஹஜ்ஜுடைய இறுதி நாளும், முஹர்ரம்முடைய முதல் நாளும் யார் நோன்பு நோற்பார்களோ அவர்களுக்கு முழு வருடமும் நோன்பு நோற்ற நன்மைக்கிடைக்கும். மேலும் கூறினார்கள், யார் முஹர்ரம் உடைய முதல் பிறையிலிருந்து 10ம் பிறை வரைக்கும் நோன்பு நோற்பாரோ அவருக்கு 10 வருடம் நோன்பு நோற்ற நன்மையும், 10 வருடம் இரவு விழித்து வணங்கிய நன்மையும் கிடைக்கும்.


மேலும் ஒரு ஹதீஸில் வருகின்றது, யார் ஒருவன் முஹர்ரமில் 3 நோன்பு நோற்பானோ அவனுக்கு 9 வருடங்கள் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும்.



அந்த அழகிய நாளில் நோன்பிருந்தவர் வருடம் முழுவதும் தவறிவிட்ட தன்னுடைய நோன்புகளை பெற்று கொண்டார் என்று எம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக ஹஸ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள்.


ஒரு சமயம் அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சமூகமளித்து, யா ரஸுலல்லாஹ்! அன்றைய தினத்திலே நம்மீது அல்லாஹ் பேரருள் புரிந்துள்ளானா! என்று கேட்டார்கள். அதற்கு ஆம் அதில் சந்தேகமே இல்லை. என்ற நபிகள் கோமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், “விண்ணையும், மண்ணையும், மலை, கடல், கோள்களையும், அர்ஷ் என்னும் கண்ணியமிக்க அவனுடைய மணிமண்டபத்தையும், குர்ஸீ என்னும் அரியாசனத்தையும் லவ்ஹ் என்னும் பலகையையும், கலம் என்னும் எழுதுகோலையும் அல்லாஹ் அந்நாளிலேயே படைத்தான். ஜிப்ரீலையும், மீக்காஈலையும் மற்ற மலக்குமார்களையும் அன்றே படைத்தான். ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களையும் அன்றே படைத்தான். அன்றைய தினமே அல்லாஹ் அஸ்ஸவஜல் அரசின் மீது நிலை கொண்டான். வானத்தில் இருந்து முதன் முதலாக மழை பொழிந்ததும் அன்றே. அல்லாஹ் அஸ்ஸவஜலின் ரஹ்மத் இந்த பூமிக்கு பொழிந்ததும் அன்றே. மேலும் அழிவு நாளும் அன்றே வரும்.” என்று கோமான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அருளினார்கள்.



ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே அறிவித்த, பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஹதீஸ் ஒன்றை மைமூன் இப்னு மெஹ்ரான் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்ற பெரியார் எழுதுகிறார்கள். ‘ஆஷுராவுடைய நாளில் நோன்பு இருப்பவருக்கு பதினாயிரம் ஸுஹதாக்களுடையவும், பதினாயிரம் ஹஜ்ஜாஜிகளுடையவும் நன்மைகள் அளிக்கப்படும். அன்றை தினம் ஒரு அனாதையின் தலையை பரிவுடன் தடவியவருக்கு அத்தலையின் முடிகளின் எண்ணிக்கையளவு சுவர்க்கத்தில் தரஜாக்கள் அருளப்படும். ஆஷுராவுடைய இரவில் ஒரு முஃமீனுக்கு உணவளித்தவர் என் சமுதாயம் முழுவதுக்கும் உணவளித்தவர் போன்றவராவார். என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஷுராவுடைய இரவை ரஹ்மத் நிறைந்த ஒரு இரவாக கணித்து கூறும், அறிவுலக மாமேதை, ஹஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நபிலான அதாவது அதிகப்படியான வணக்கங்களால் இந்த இரவை ஹயாத்தாக்கும் படி தங்களின் உலகப் புகல் பெற்ற ‘இஹ்யா’ வில் நினைவூட்டுகிறார்கள்.



ஆஷுராவுடைய இரவில் விளித்து, வணங்கி அன்றைய பகலில் நோன்பு நோற்றவருக்கு 60 வருடம் அமல் செய்த நன்மை கிடைக்கும் என்று காருண்ய கடல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அறிவித்ததாக ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஆஷுராவுடைய இரவில் விழித்து வணங்கும் வழக்கமுடையவன் மௌதாகுவதற்கு முன் அவன் மௌத்தைப்பற்றி அறிவிக்கப்படுவான். என்று ஜீலானின் கோமான் தீனுக்கு ஜீவனளித்த சீமான் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள். மேலும் ஒருவன் விரும்பும் காலம் வரை அல்லாஹ் அஸ்ஸவஜல் அவனை உயிர் வாழ செய்வான் என்று தம் பாட்டனார் கருணை கடல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.



அன்றைய தினம் தன குடுபத்துக்காக மனந்திறந்து செலவழித்தவர் அவ் வருடம் முழுவதும் பெரும் செல்வசீமானாக இருப்பார். என்று கூறிய ஹஸ்ரத் ஸுப்யான் இப்னு அஃயீனா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அது உண்மையிலும் உண்மையே என்பதை என் 50 ஆண்டுகால அனுபவத்தில் நான் அறிந்து கொண்டேன். என்றார்கள்.



ஆஷுராவுடைய நாளில் நோன்பு நோற்பது கட்டாய கடமையே என்று ஹஸ்ரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இந்த செய்தி அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு எட்டியதும், இவ்வாறு கட்டளை இட்டவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ரத் இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான். என்று பதில் கூறப்பட்டதும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வழிமுறையில் வந்தவர்கள் அறிவில் பெரியார்களே என்று அன்னை ஆயிஷா ஸித்திகா அவர்கள் புகழ்ந்தார்கள்.



நாம் யூதர்கள் போன்று முஹர்ரம் 10 ஆம் நாள் மட்டும் நோன்பு நோற்காமல் 9ஆம், 10 ஆம் அல்லது 10 ஆம், 11 ஆம் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்பது விரும்பத்தக்கது. ஆனால் 9ம் நாளிலும், 11ம் நாளிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அதாவது நோய் ஏற்பட்டு அல்லது பிரயாணம் போக கூடிய சூழ்நிலைக்காக நோன்பு நோற்க முடியாதவர்கள் 10 ம் நாள் நோன்பை நோற்றாலும் அதற்கான நன்மைகள் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்!


நபிமார்கள் பலரும் ஈடேற்றமும் வெற்றியும் பெற்ற இந்நாளிலே தான் நபிமார்களுக்கு அரசர், அண்ணல் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திருப்பேரர் ஸெய்யது ஸுஹதா இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் கர்பலா மைதானத்தில் ஷஹீதானார்கள்.


இமாம் ஹுஸைன் ஸஹீதாக்கப்படுவார்கள் என்று இப்புவியில் வாழ்ந்த போதே நபிகள் கோமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன்னறிவித்தார்கள். ஹஸ்ரத் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி அவர்கள் ஒரு சம்பவத்தை எடுத்துரைக்கிறார்கள்.


ஒரு நாள் நான் ஹுஸைனை சுமந்த வண்ணம் ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வீட்டுக்கு சென்றேன். அன்னவர்கள் ஹுஸைனை என்னிடம் இருந்து ஏற்று கொண்டார்கள். பின்பு நான் அன்னவர்களை திரும்ப பார்த்த போது நாயகத்தின் கண்களில் நீர் வடிவத்தை கண்டேன். உடனே நான், “என் தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம் யா ரஸுலல்லாஹ்! தாங்கள் அழக் காரணம் என்ன?” என கேட்டேன். நாயக பெருமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோ, “ஜிப்ரீல் இப்போது வந்து இந்த என் பேரரை என் உம்மத்தார் கொல்லுவார்கள் என்று அறிவித்து இவரின் இரத்தம் படிந்த செந்நிற மண்ணையும் காட்டி விட்டு சென்றார்.” என்றார்கள். அதனால் நாம் நம்முடைய ஒவ்வொரு அமல்களிலும் நம்முடைய ஸுஹதா அவர்களை கொண்டு வஸீலா தேட வேண்டும். அஹ்லுல் பைத்துகளையும் சேர்த்து வஸீலா கேட்க வேண்டும்.


இத்தகைய சிறப்புகளை பெற்ற ஆஷுராவுடைய நாளில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை பார்ப்போம். சில முஸ்தஹ்பான அமல்களை உலமா பெருமக்கள் கிதாபுகளில் எழுதியுள்ளார்கள். அவர்கள்:


1. ஆஷுராவுடைய தினத்தில் குளிப்பது. இதனுடைய பலன் என்னவென்றால் அந்த வருடம் முழுவதும் நோய் நொம்பலங்கள் ஏற்படாது.


2. கண்ணுக்கு சுர்மா இடுவது. இதனுடைய பலன் கண் நோய் வராது.


3. ஸதகா செய்வது. ஏனென்றால் ஹதீஸில் வருகிறது. எவரொருவர் ஒரு திர்ஹம் ஸதகா செய்தால் எழுநூறு ஆயிரம் திர்ஹம் ஸதகா செய்த நன்மை கிடைக்கும்.


4. அனாதைகளின் மீது இரக்கம் காட்டுவது. யாரொருவன் ஆஷுராவுடைய தினத்தில் அநாதைக்கு இரக்கம் காட்டுவானோ அந்த அனாதையின் ஒவ்வொரு தலைமுடியின் அளவுக்கு ஸவாபு கிடைக்கும்.


5. நோயாளிகளை சந்திப்பது. நோயாளிகளை சந்திப்பதனால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும்.


6. அதிகமான நபிலான தொழுகைகளை தொழுந்து கொள்ளுங்கள்.


7. உறவை துண்டித்தவர்களுடன் சேர்ந்து நடக்க வேண்டும்.


8. குடும்பத்தார்களுக்கு செலவழிப்பது


9. துஆ கேட்பது மிகுதியாக பாவ மன்னிப்பு கேட்பது.



எனவே இந்த புனித மாதத்தையும், புனித ஆஷுரா தினத்தையும் கண்ணியப்படுத்தி, நாம் நல்ல அமல்கள் செய்து ஹயாதாக்குவோமாக. இந்த புனித மாதத்தின் பரகத்தால் வல்ல அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக ஆமீன்








தமிழ் பகுதி → பெண்கள் கல்வி