www.womanofislam.com

Muslim women's online learning centre

கணவன்மார்களே! மனைவி வீட்டு வேலை செய்யும் போது உதவுங்கள்


​கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பு அதிகரிக்க, மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவளுக்குத் துணையாக இருந்து உதவ வேண்டும். காய்கறி நறுக்கும் போது, ரொட்டி சுடும் போது இது போன்ற காரியங்களில் மனைவி ஈடுபடும் போது சிறு சிறு உதவிகளைச் செய்தால் கணவன் மீதுள்ள அன்பு மேலும் அதிகரிக்கும்.


​​​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்து வந்துள்ளார்கள்.


​நான் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம், "நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், "நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத், நூல்: புகாரீ


​​"நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வீட்டில் வேலை செய்வார்களா?'' என்று ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், "தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பை தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உர்வா நூல்: அஹ்மத்


​​அஹ்மதின் மற்றொரு அறிவிப்பில் ஆட்டின் பாலைக் கறப்பார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.


​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து தம் மனைவியருக்கு உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருந்தும் தம் குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்கியது அவர்களின் சிறந்த பண்பாட்டைக் காட்டுகிறது.


​​​​இறைத்தூதர் அவர்களே இவ்வாறு நடந்திருந்தால் நாம் எந்தளவிற்கு நடக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் சிறு சிறு உதவிகள் கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பையும் பாசத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்.


ஆனால் இன்றோ வீட்டு வேலைகள் பெண் தான் செய்ய வேண்டும் என்று பழக்கப்பட்டு விட்டார்கள். ஆண்களும் தங்கள் குடும்பத்துக்கு உதவும் விதத்தில் வீட்டு வேலையில் பங்கெடுத்துக் கொள்வது ஒன்றும் தகாத செயல் இல்லையே?


வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்வதில் தான் இனிமையான வாழ்க்கையே இருக்கிறது.​​​ வீட்டு வேலைகள் ஆண்களுக்கு பழக்கப்படாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு. குடும்ப சுமைகளில் தனக்கும் பங்கு இருக்கிறது என்ற மனிதாபிமான உணர்வு ஒரு ஆணிடம் இருக்குமானால் வீட்டு வேலைகள் ஒன்றும் கடினமில்லை.


பெரிய வேலைகள் செய்ய வேண்டியதில்லை. சிறு சிறு உதவிகளாவது செய்யலாம். சமைத்த உணவை டிபன் பாக்ஸில் போடலாம். குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்யலாம், காய்கறி நறுக்கலாம், துணி உலர்த்தலாம், துணிகளை இஸ்திரி போடலாம், சாப்பிட்ட பின் தட்டுகளை எடுத்து சமையலறையில் வைக்கலாம் இப்படி பல வேலைகள் செய்யலாம்.​​


அதே வேலை டீ, காப்பி போன்றவைகளை போடா கற்று கொள்ள வேண்டும். இது வீட்டில் பெண்கள் இல்லாத நேரத்தில் தனக்கு பயன்படும்.


வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள முடியாத, அல்லது போதுமான அவகாசம் இல்லாத ஆண்கள் குறைந்தபட்சம் தங்களுடைய வேலைகளை மட்டுமாவது தாங்களே செய்ய பழகிக்கொள்ள வேண்டும். அமைதியான குடும்ப வாழ்க்கைக்காக ஆண்கள் வீட்டு வேலைகளை செய்வது தவறொன்றும் இல்லையே!​​


குடும்பத்தில் அன்பும், நேசமும் ஏற்பட இந்த வழி முறைகளை கையாண்டு பாருங்கள். இஸ்லாம் போதிக்கும் இந்த சிறந்த வழிமுறைகள் உங்கள் குடும்பத்தில் நிச்சயம் மகிழ்ச்சியை தரும். ​​​