www.womanofislam.com

Muslim women's online learning centre

இஸ்லாம் விரும்பும் பெண்ணின் ஆடை 


இஸ்லாம் எனும் இவ் இனிய மார்க்கம் பெண்களை அதிகமாக கண்ணியப்படுத்துகின்றது. அதேபோல் அவள் ஓர் பொக்கிஷமாகவும் கருதப்படுகிறாள். ஒரு பெண் தனது வாழ்வில் எத்தனையோ நிலைகளை தாண்டுகின்றாள். அந்த ஒவ்வொரு நிலையிலும் ஓர் பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் காட்டித் தரத் தவறவில்லை. இன்று நம் பெண்கள் இஸ்லாம் காட்டித் தந்த முறையிலா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்? ஒவ்வொருவரும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


இஸ்லாம் ஓர் பெண்ணின் கண்ணியத்திற்காகவும் பாதுகாப்பிற்ககவுமே பல வரையறைகளை விதித்திருக்கின்றது. மாறாக பெண்களை கட்டுப்படுத்துவதற்காகவும் அவர்களின் சுதந்திரத்தை பறிப்பதற்காகவும் இடப்பட்டவை அல்ல. ஒரு பெண் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை ஸஹாபாப் பெண்மணிகள் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கின்றார்கள். ஒரு பெண்ணின் நடை, உடை, பாவனை அனைத்திலும் இஸ்லாம் கவனம் செலுத்துகின்றது. ஒரு பெண்னின் நடை எப்போதும் பணிவானதாக இருக்க வேண்டும். கர்வத்துடனும் பெருமையுடனும் குதிகால் உயர்ந்த செருப்புகளை அணிந்து கொண்டு நடப்பதை இஸ்லாம் வெறுக்கின்றது.



அல்லாஹ் அழகையும் சுத்தத்தையும் விரும்புகின்றான். அதற்காக தன் அழகை பிற ஆண்கள் மத்தியில் காட்டுமாறு இஸ்லாம் கூறவில்லை. மாறாக ஓர் பெண் தன் கணவனிடத்திலேயே தன் அழகை வெளிக்காட்ட வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் கூறுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக இன்று நம் பெண்கள் வீட்டில் வியர்வை நாற்றத்துடனும் எண்ணெய் காணாத கூந்தலுமாக இருப்பார்கள். வெளியில் செல்லும் போது தன்னை அலங்கரித்துக் கொண்டும் வாசனைத் திரவியங்களை பூசிக் கொண்டும் செல்கின்றனர். இதனையா இஸ்லாம் கூறுகின்றது? ஒரு பெண்ணின் ஆடை இஸ்லாம் வரையறுத்துக் கூறப்பட்டதற்கு அமையவும் தனது அவ்ரத்தையும் உடல் அமைப்பையும் அலங்காரத்தையும் மறைக்கும் வகையிலும் அமைய வேண்டும்.



நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறுகின்றார்கள் சில பெண்கள் ஆடை அணிந்திருந்தும் நிர்வாணமாகவும் ஆண்களை தன்பக்கம் சுண்டி இழுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது தலைமுடி ஒட்டகத்தின் திமில் போன்று இருக்கும். இப்படி ஒரு கூட்டம் இனி தோன்றுவார்கள். அவர்கள் நரகவாதிகளாக இருப்பார்கள். இவ் ஹதீஸில் ஆடை அணிந்தும் நிர்வாணமானவர்கள் என்று கூறப்படுவது ஆடைகளை மெல்லியதாகவும் இறுக்கமானதாகவும் தன் அழகை வெளிக்காட்டும் வகையிலும் அணிபவர்களைத்தான். இன்று சில பெண்கள் துணி பஞ்சமானவர்களை போல் இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு சிரமப்படுகின்றார்கள். இஸ்லாமிய ஆடை எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் இஸ்லாமிய ஆடையாக இருக்கும் அபாயா, பர்தா காலம் செல்லச் செல்ல அதுவும் மாறிக் கொண்டே செல்கின்றது. இன்று அதனை அலங்காரத்திற்காகவே பெண்கள் அணிகின்றார்கள். இறுக்கமான அபாயாக்களை அணிந்து கொண்டு ஒரு சிறிய முந்தானையை அல்லது ஸ்காபை மாட்டிக் கொண்டு கழுத்தில் போட்டிருக்கும் நகைகளை காட்டிக்கொண்டு திரிகின்றனர். இன்னும் சிலர் கழுத்தில் உள்ள நகைகளை விற்று கைகளுக்கு நகை செய்கின்றனர். ஏனெனில் கழுத்தில் இருப்பவை தெரிவதில்லை என்று. எதற்காக இந்த வீண் பெருமை? அதேபோல் பெண்கள் பேசும் போதும் அவர்களின் பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவனுடைய உள்ளத்தில் பாவநோய் இருக்கின்றதோ அத்தகையவன் தவறான விருப்பங்களில் ஆசை கொள்வான். (அல் அஹ்ஜாப் -32)


மேலும் மஹ்ரம், அஜ்னபி விடயத்தில் இஸ்லாம் அதிகமாக கவனம் செலுத்துகின்றது. ஏனெனில் அதிகமான பிரச்சினைகளுக்கு இவ்விடயத்தில் கவனமில்லாமல் இருப்பதும் காரணமாக அமைகின்றது. அனைவருடனும் சகஜமாக பேசிக் பழகக்கூடியவர்களாகவே இன்று பெண்கள் காணப்படுகின்றார்கள். இவ்வாறான பெண்களின் ஒழுங்கற்ற நடத்தைகளினால் இன்றைய காலத்தில் அதிகமான தலாக்குகள் இடம் பெறுவதை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. மனிதனானவன் தவறு செய்யக் கூடியவன் தான். அத்தவறு எப்போது எமக்கு தவறு என்று தெரிகின்றதோ அந் நம்மிடத்திலிருந்தே நாம் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஸஹாபாப் பெண் மணிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து அதன் மூலம் படிப்பினைகளை எடுத்து ஒரு முன்மாதிரி முஸ்லிம் பெண் மணியாக வாழ்ந்து சுவனத்தை அடைந்து கொள்ள ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். தான் மாற வேண்டும் என்ற ஒருவன் நினைக்காதவரை அல்லாஹ் அவனை மாற்ற மாட்டான்.

.