www.womanofislam.com

Muslim women's online learning centre

ஹலால் ஹராம் பேணுவோம்


​​​அல்லாஹுதஆலா இந்த உலகத்தை படைத்து அதிலே மனிதனை அவனுடைய பிரதிநிதியாக படைத்தான். அந்த மனிதனுக்கு எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது, எப்படி வாழ்ந்தால் இந்த உலகத்திலும் நாளை மறுமையிலும் வெற்றி பெறலாம் என்று அல்குர்ஆன் மூலமாகவும், காலத்துக்கு காலம் நபிமார்களை இந்த உலகத்துக்கு அனுப்பியும் மனிதர்களுக்கு சொல்லி கொடுத்தான்.

​இப்படி சொல்லிக் கொடுத்த அல்லாஹ் யார் அவனுடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்களுக்கு சுவர்க்கத்தை தருவதாக கூறியுள்ளான். அதே நேரம் யார் அவனுடைய பேச்சுக்கு கட்டுப்படாமல் தங்களுடைய விருப்பப்படி நடக்கிறார்களோ அவர்களுக்கு நரகத்தில் பயங்கரமான வேதனை கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்கிறான்.



எனவே முஸ்லிமான நாங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் ஹலால், ஹராமை பேணி நடக்க வேண்டும். ஒவ்வொரு விஷயம் என்று சொல்லும் போது எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் உணவாக இருக்கலாம், உடுக்கும் உடுப்பாக இருக்கலாம், செய்யும் தொழிலாக அல்லது வியாபாரமாக இருக்கலாம், தாய், தகப்பர்களோடு நடந்துக்கொள்ளும் முறையாக இருக்கலாம், பிள்ளைகளை வளர்க்கும் முறையாக இருக்கலாம், அடுத்த வீட்டுக்காரர்கள், சொந்தக்காரர்கள் இவர்களோடு நடந்துக்கொள்கிற முறையாக இருக்கலாம் இப்படி வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு விஷயங்களை பற்றியும் இஸ்லாம் எங்களுக்கு சொல்லித்தந்திருக்கிறது. அதில் எது எல்லாம் ஹலால், எது எல்லாம் ஹராம் என்று எங்களுக்கு தெளிவாக சொல்லித்தந்திருக்கிறது. இஸ்லாம் இப்படி எங்களுக்கு சொல்லித்தந்த பின்பும் நாங்கள் அதனை படித்து எங்களுடைய வாழ்க்கையில் ஹலால், ஹராமை பேணி நடக்காமல் ஏதோ எங்களுடைய விருப்பப்படி வாழ்ந்தால், நாங்கள் நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய கோபத்துக்கு ஆளாகி நரக வேதனையை அனுபவிக்க வேண்டி வரும். மஆதல்லாஹ். அல்லாஹ் எங்கள் அனைவரையும் பாதுகாப்பானாக!


நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம் இஸ்லாம் என்றால் 5 நேரம் தொழுவதும், நோன்பு நோற்பதும், ஸகாத் கொடுப்பதும், ஹஜ்ஜு செய்வதும், குர்ஆன் ஓதுவதும் இது மட்டும்தான் இஸ்லாம் என்று. நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் இது மட்டுமல்ல இஸ்லாம். இஸ்லாத்தின் முக்கியமான அம்சமே நல்ல ஒழுக்கங்களையும், நல்ல பழக்க வழக்கங்களையும், நல்ல குணங்களையும் ஒரு மனிதன் ஏற்படுத்தி கொள்வதுதான்.


ஐந்து நேரம் தொழுவது, நோன்பு நோற்பது, ஸகாத் கொடுப்பது, ஹஜ்ஜு செய்வது போன்ற இந்த கடமைகளெல்லாம் ஏற்படுத்தப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமே மனிதன் நல்ல ஒழுக்கங்களோடும், நல்ல பழக்க வழக்கங்களோடும், நல்ல குணங்களோடும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். அதுமட்டுமல்ல நாங்கள் செய்யும் இந்த இபாதத்துக்கள், நல்ல அமல்கள் எல்லாம் அல்லாஹுதஆலாவிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் முதலில் எங்களுடைய சாப்பாடு, எங்களுடைய வருமானம் எல்லாம் ஹலாலாக இருக்க வேண்டும்.


அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் கூறுகிறான்: உங்களது பொருளில் ஹராம் கலந்தால் அதை சாப்பிட வேண்டாம் என்று. இன்னொரு இடத்தில் கூறுகிறான்: நல்லதை சாப்பிடுங்கள், நல்லதை செய்யுங்கள் என்று.


அதேபோல் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒருவன் தன்னுடைய மனைவி, மக்களுக்கு நல்ல ஹலாலான உணவை சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அவன் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்கின்ற ஒரு வீரனை போலாவான். இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒருவன் 40 நாட்கள் நல்ல ஹலாலான உணவை சாப்பிட்டால் அவனது உள்ளத்தை அல்லாஹுதஆலா ஒளியமயமாக்கி விடுவான் என்பதாக.


ஒரு நாள் ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் கேட்டார்கள்: யா ரஸுலல்லாஹ்! எனது துஆக்கள் அல்லாஹ்விடத்தில் கபூலாக வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்? அதற்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: நாக்கின் ருசிக்கு ஹலாலான உணவை கொடுங்கள். நீங்கள் கேட்கும் துஆக்கள் கபூல் செய்யப்படுமென்று. இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் 10 ரூபாவுக்கு ஒரு உடை வாங்குகிறான். அதிலே ஹராமான வழியில் கிடைத்த 1 ரூபா கலந்திருந்தால் போதும், அவன் அந்த உடையை அணியும் போதெல்லாம் அவனுடைய இபாதத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதாக.


எனவே மேலே உள்ள ஹதீஸ்களிலிருந்து நாங்கள் விளங்கிக்கொள்கிறோம் எங்களுடைய இபாதத்துக்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் நாங்கள் சாப்பிடும் சாப்பாடு ஹலாலான முறையில் இருக்க வேண்டும். நாங்கள் அணியும் ஆடை ஹலாலான முறையில் இருக்க வேண்டும். எங்களுடைய சாப்பாடும், உடையும் ஹலாலாக இருக்க வேண்டுமென்றால் எங்களுடைய சம்பாத்தியம் ஹலாலாக இருக்க வேண்டும். இப்படி இல்லாமல் நாங்கள் ஹராமான முறையில் சம்பாதித்து விட்டு விடிய விடிய தொழுதாலும் எங்களது தொழுகையில் எந்த பிரயோஜனமும் இல்லை.


ஏனென்றால் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். ஹராமான சாப்பாட்டை சாப்பிடுபவர்களின் இபாதத்துக்களை அல்லாஹுதஆலா ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாக. மேலும் எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஹராமான வழியில் கிடைத்ததை சாப்பிடுவதை விட நெருப்பை அள்ளிப்போட்டு தின்பது மேலானது என்று.


நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எங்கள் சாப்பாட்டிலும், எங்கள் உடைலும், எங்கள் வருமானத்திலும் ஒரு போதும் ஹராம் கலந்து விடாமல் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஹராம் கலந்து விட்டால் எங்களுக்கு தெரியாமலே எங்களுடைய அமல்கள் எல்லாம் அழிபட்டு போய்விடும். நாங்கள் தொழுதுவிட்டு, நாங்கள் நோன்பு நோற்றுவிட்டு நிறைய நல்ல அமல்கள் செய்துவிட்டு “நான் நிறைய நல்ல அமல்கள் செய்திருக்கிறேன் நான் ஒரு இபாதத்சாலி” என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் எங்களை அறியாமலேயே எங்களது அமல்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காது.


இதனால்தான் கண்ணியமிகு ஸஹாபாக்கள் ஹலால், ஹராமை, பேணும் விஷயத்தில் மிக ஜாக்கிரதையோடு நடந்துக்கொண்டார்கள். ஹராமான சாப்பாடு கொஞ்சம் கூட தமது வாய்க்குள் சென்று விடாமல் மிக பேணுதலாக இருந்தார்கள்.


ஒரு நாள் அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வேலைக்காரர் கொஞ்சம் பால் கொண்டுவந்து அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கொடுத்தார். அதனை அவர்கள் குடித்தார்கள். குடித்து முடிந்த பின் அவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வேலைகாரரிடம் கேட்டார்கள்: “இது உனக்கு எப்படி கிடைத்தது. எந்த வருமானத்தில் இதை வாங்கினாய்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த வேலைக்காரர், சிலருக்கு நான் ஜோசியம் பார்த்தேன் அதற்கு அவர்கள் கொடுத்தார்கள்” என்று கூறினார். அப்போழுது அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முகம் அப்படியே மாறியது. தமது விரல்களை வாயில் திணித்து குடித்திருந்த பாலை வாந்தி எடுத்தார்கள். பின்பு யா அல்லாஹ்! உன்னிடம் பாவ மன்னிப்பு கோருகிறேன். என் குடலும், வயிரும் பெற்றுக்கொண்ட ஒன்றை பற்றி உன்னிடம் தௌபா செய்கிறேன் என்று துஆ கேட்டார்கள். இந்த சம்பவத்தை சில ஸஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் சென்று கூறினார்கள். அப்போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முகம் மலர்ந்தது. அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு தெரியாதா ஸித்தீக் இருக்கிறாரே அவருடைய வயிற்றுக்குள் நல்லதை தவிர வேறு எதுவும் போகாது. அதற்கு அவர் அனுமதி கொடுக்க மாட்டார் என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை புகழ்ந்து கூறினார்கள்.

இதேபோன்று தான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்தது. ஸதகா கொடுப்பதற்கு இருந்த ஒட்டகமொன்றின் பாலை தவறுதலாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குடித்து விட்டார்கள். பின்னர் தொண்டைக்குள் விரலை போட்டு வாந்தி எடுத்து பின்தான் அவர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

இனிமையான இஸ்லாமிய சகோதரிகளே!

பாருங்கள். எங்களது ஸஹாபா பெருமக்கள் எந்தளவுக்கு ஹலால், ஹராமை பேணும் விஷயத்தில் மிக ஜாக்கிரதையோடு நடந்துக்கொண்டார்கள். என்று. ஆனால் இன்று எங்களது நிலைமை எப்படி இருக்கிறது. எப்பொழுதாவது நாங்கள் உண்ணும் உணவு ஹலாலா, ஹராமா என்று யோசித்து பார்த்திருக்கிறோமா? அதனால் எங்களது இபாதத்துக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்? துஆக்கள் எப்படி கபூல் செய்யப்படும்?


நாங்கள் Dதீனை பற்றி சிந்திக்கிறோம். ஆனால் Tதீனை பற்றி சிந்திக்கிறது இல்லை. Tதீன் ஹலாலா இருந்தாதான் ஒரு மனுஷனுக்கு Dதீன் வரும். ஏன் என்றால் நாங்கள் ஹலாலான உணவை சாப்பிட்டால்தான் எங்களுடைய உள்ளம் தூய்மை அடைந்து அல்லாஹ்வுடைய சிந்தனை, மறுமையை பற்றிய சிந்தனை, கப்ரை பற்றிய சிந்தனை எல்லாம் வரும். அப்போதுதான் நாங்கள் (D)தீன்தாரிகளாக உண்மை முஃமினாக வாழமுடியும்.


எனவே, ஹலாலான உணவு என்று சொல்லும் பொழுது நாங்கள் இரண்டு விஷயங்களை பார்க்க வேண்டும். ஒன்று, நாங்கள் வாங்கக்கூடிய உணவு நாங்கள் ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தை கொண்டிருக்க வேண்டும். மற்றவர்களை ஏமாற்றி அல்லது அவர்களுக்கு தெரியாமல் அவர்களது சொத்துக்களை அபகரித்து அல்லது ஹராமான தொழில்களின் மூலமாக கிடைக்கும் வருமானங்கள் எல்லாம் ஹராமான சம்பாத்தியம் ஆகும். எனவே இந்த பணத்தை கொண்டு நாங்கள் வாங்கும் உணவு ஹராமாகும். இது முதலாவது.


இரண்டாவது நாங்கள் ஹலாலான முறையில் சம்பாதித்தாலும் அந்த பணத்தை கொண்டு நல்ல ஹலாலான உணவை வாங்க வேண்டும். அதாவது இஸ்லாத்தில் நஜீஸாக்கப்பட்ட, ஹராமாக்கப்பட்ட மிருகங்களுடைய இறைச்சியோ, ரத்தமோ, கொழுப்போ கலக்காத பொருட்களாக இருக்கவேண்டும். அதேபோல் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட ஹலாலான மிருகங்களின் இறைச்சி போன்றவை நல்ல ஹலாலான உணவாகும். இப்படி இந்த இரண்டு விஷயங்களும் சேரும்போது தான் அந்த உணவு ஹலாலான உணவாக மாறும்.


எனவே நாங்கள் உணவு வாங்கும் பொழுது அந்த உணவு ஹலாலா என்று நிச்சயமாக அறிந்த பின்பு தான் வாங்க வேண்டும். அது ஹாலாலா, ஹராமா என்று சந்தேகம் இருந்தால் அதனை வாங்கக்கூடாது. குறிப்பாக மாற்று சமூகத்தினர் மற்றும் மாற்று மதத்தினர் வாழும் நாட்டிலே வாழும் நாங்கள் எமது உணவு விஷயத்தில் மிக ஜாக்கிரதையோடு நடந்துக்கொள்ள வேண்டும்.


அல்ஹம்துலில்லாஹ்! இன்று உணவு பொருட்கள் ஹலாலா, ஹராமா என்று பார்த்து வாங்கிக்கொள்ள கூடிய முறையில் எல்லா உணவு பொருட்களிலும் E-Codes போடப்பட்டுள்ளது. இதில் சில E-Codes ஹலாலானவை. சில E-Codes ஹராமானவை. எனவே நாங்கள் வாங்கும் பொருட்களில் ஹராமான E-Codes உள்ளதா என முதலில் பரிசோதனை செய்து விட்டு வாங்கவேண்டும்.

எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் கடைசி மூச்சு வரை எங்களது உடலில் ஹராமான உணவு கலந்து விடாமல் பாதுகாப்பானாக. ஹலாலையும், ஹராத்தையும் பிரித்து அறிய கூடிய அறிவை தருவானாக. ஆமீன்!!