www.womanofislam.com

Muslim women's online learning centre

எது உண்மை காதல்?


இறந்த பின் எனக்கு நீ தாஜ்மஹால் கட்ட தேவை இல்லை.

உயிருடன் இருக்கும்போது என் உணர்வுகளை சமாதி ஆக்கிவிடாதே!

அது எனக்கு நீ கட்டும் 1000 தாஜ்மஹாலை விட சிறந்தது!

(ஒரு மனைவியின் அழுகுரல்)


ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாள் என்பர். ஆரம்பத்தில் இனிக்கும் கணவன் – மனைவி உறவுகள் பிற்காலத்தில் விரிசல் காணுகிறது. ஆரம்பத்தில் மனைவியின் காலில் குத்திய முள்ளை பார்த்து ஏசிய கணவன், இப்போது அதே முள் குத்தும்போது மனைவியை பார்த்து ஏசுகிறான்.


எந்த ஒரு பொருளும் நம் கையில் இருக்கும்போது அதன் அருமை நமக்கு தெரிவதில்லை. அது பிரிந்த பின்னர்தான் நாம் அதனை இழந்துவிட்டதாக உணர்கிறோம். மனிதன் அவ்வாறுதான் படைக்கப்பட்டுள்ளான். அவனது மனம் ஒரு குரங்கு என்பர். ஏனெனில் அது அங்கும் இங்கும் தாவி தாவி இருக்கும் என்பதால்.



அதேபோன்றுதான், ஒரு மனைவியும். இருக்கும்போது அவளது அன்பு, அவளது பரிவு, அவள் படும் கஷ்டங்கள் எதுவும் பலருக்கு புரிவதில்லை. அவள் இறந்த பின்னர்தான் அவளது அருமை தெரிகிறது.


அவள் என்னை இப்படி எல்லாம் கவனித்தாளே! அவள் என்னை இப்படி எல்லாம் அன்பு செலுத்தினாளே! நானும் அவளை ஒழுங்காக கவனித்து இருக்கக்கூடாதா? நானும் ஒழுங்காக அன்பு செலுத்தி இருக்க கூடாதா? அவளை இப்படி எல்லாம் சந்தோஷப்படுத்தி இருக்க கூடாதா? என பலர் போன பஸ்சுக்கு தான் கை காட்டுகின்றனர். எந்த பலனும் இல்லை.


அவள் உயிர் போன பின்னர் அவளுக்காக நீங்கள் ஆயிரம் தாஜ்மஹால் கட்டி எந்த பலனும் இல்லை. சமாதிக்குள் இருக்கும் அவள் அதனை அனுபவிக்க போவதில்லை. ஆனால் அவள் உயிருடன் இருக்கும்போது உங்கள் வார்தைகளாலோ உங்கள் செயல்களினாலோ அவள் உணர்வுகள் சமாதி ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் நீங்கள் உங்கள் மனைவிக்கு கட்டும் உண்மை தாஜ்மஹால். இது கல்லினாலும் பளிங்கினாலும் கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உடைந்து போக. புயலுக்கும் நெருப்புக்கும் அழிந்து போக. அன்பினாலும் உணர்வுகளினாலும் கட்டப்பட்ட தாஜ்மஹால். இது எல்லா அனர்த்தங்களையும் தாங்கி நிற்கும்.


நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் சொன்ன வார்த்தைகளை திரும்ப ஒரு முறை மீட்டி பாருங்கள்.


“உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் நற்பண்பால் மிகச் சிறந்தவரே” (திர்மதி)


“”இறைவனின் திருப்தியை மட்டுமே நாடி நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் நற்கூலி வழங்கப்படுவீர்கள். உங்களது மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் உணவு உட்பட”(புஹாரி)


இவை எல்லாம் எவ்வளவு அழகான கருத்துக்கள். நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் அழகிய வழிமுறைகள். அன்னவர்கள் தம் மனைவியரிடத்திலே எவ்வளவு அன்போடும் கண்ணியத்தோடும் பரிவோடும் பொறுப்போடும் நடந்துக்கொண்டார்கள் என்பதை சரித்திரத்தை வாசித்தால் நன்கு புரியும். அன்னவர்கள் உயிரோடு வாழ்ந்தபோதும் உயிர் நீத்த மனைவிகளுக்கும் அழியாத தாஜ்மஹால்கள் கட்டினார்கள். அதனால்தான் அவை இன்றும் வரலாறுகளில் பேசப்படுகின்றன.


இருபத்தி ஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது அவர்கள் கொண்ட காதலுக்கு நிகர் எதுவுமில்லை. அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலத்திற்கு பின்பும் அன்னையாரின் நினைவிலே அன்னவர்கள் வாழ்ந்தார்கள் என்றால் மனைவியை உண்மையாக எந்தளவுக்கு அவர்கள் காதலித்து உள்ளார்கள் என்பது விளங்கும். இதில் ஒரு அபூர்வ விடயம் என்னவென்றால் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களோ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களை விட வயதில் மூத்தவர்களாக இருந்தார்கள். திருமணத்தின் போது நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களுக்கு வயது 25 அன்னையருக்கோ வயது 40. உண்மையான காதலுக்கு வயதெல்லை இல்லை என்பதை இந்த பரிசுத்த தம்பதிகள் நிரூபித்துள்ளார்கள்.


தன் பரிசுத்த மனைவி மீது நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் தங்களின் உண்மையான காதலை வைத்திருந்ததற்கு இந்த சான்றே போதுமானது.


அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: “நான் கதீஜாவை பார்த்ததில்லை. ஆனால், கதீஜாவின் மீது பொறாமை கொண்டது போல் வேறு யார் மீதும் பொறாமை கொண்டதில்லை. இதற்கு காரணம் என்ன? நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் அடிக்கடி கதீஜாவி நினைத்துக் கொண்டு இருந்ததனால் தான். ஒருமுறை இதுபற்றி நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் மனம் வருந்தும்படி பேசினேன். எனினும், “இறைவன் கதீஜாவின் அன்பை என் மனதில் பதிய வைத்து விட்டான்” என்று நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட தூய காதல்.


எனவே செயற்படுங்கள். தாமதம் வேண்டாம். இறந்த சமாதிக்கு மாளிகை கட்ட போகிறீர்களா? இல்லை உயிருடன் இருக்கும் ஒரு மாளிகையை சமாதி ஆக்க போகிறீர்களா? இவை இரண்டும் இல்லை என்றால், அழிவில்லா ஒரு மாளிகையை உங்கள் மனைவியின் மனதில் நிறுவ போகிறீர்களா? விடை உங்களிடம்!!!