www.womanofislam.com

Muslim women's online learning centre

எனக்கு ஒரு மனைவி வேண்டும் 


இராக் நாட்டின் ஒரு பகுதியான திக்ரித் நகரின் அமீராக இருந்த நஜ்முத்தீன் ஐயூப் நீண்ட காலமாக திருமணம் முடிக்காமல் இருந்தார். ஏன் திருமணம் முடிக்காமல் இருக்கின்றீர்கள் என்று ஒரு முறை அவரது சகோதரரான அஸதுத்தீன் ஷிராக்கோ அவரிடம் வினவினார்...


அதற்கு நஜ்முத்தீன்: எனக்கு பொருத்தமான யாரும் இன்னும் கிடைக்கவில்லை.


​சகோதரன் : நான் உனக்கு திருமணம் பேசவா?


​நஜ்முத்தீன்: யாரை?


​சகோதரன்: ஸல்ஜூக்கிய மன்னரின் மகள் அல்லது பிரதம அமைச்சரின் மகள்


​நஜ்முத்தீன்: அவர்கள் எனக்கு தகுதியானவர்கள் அல்லர்.

ஆச்சர்யம் மேலிட்டவராக,


​​சகோதரன்: அப்படியாயின் யார் தான் உனக்கு பொருத்தமானவள்?!


நஜ்முத்தீன்:

"எனக்கு ஒரு மனைவி வேண்டும்..அவள் என்னை சுவனத்துக்கு அழைத்து செல்ல வேண்டும்.அவள் மூலம் ஒரு பிள்ளையை நான் பெற்றுக்கொள்ள வேண்டும்.அந்த பிள்ளை இளைமை பருவத்தை அடையும் வரை சிறந்த முறையில் அவள் பயிற்றுவித்து ஒரு குதிரை வீரனாக உருவாக்க வேண்டும். அந்த இளைஞன் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பைதுல் முகத்திஸை மீட்டு முஸ்லிம்களிடம் கையளிக்க வேண்டும்".


சகோதரன்:இப்படி ஒருவர் கிடைப்பது சாத்தியமா?


​நஜ்முத்தீன்: உண்மையான எண்ணம் (இஹ்லாஸ்) இருந்தால் நிச்சயம் அல்லாஹ் அருள்பாலிப்பான்.


அன்றொரு நாள் நஜ்முத்தீன் திக்ரித் பள்ளியில் அமர்ந்து கொண்டு ஒரு ஷெய்குடன் கதைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு யுவதி அங்கு வந்து அந்த ஷெய்குடன் பேச வேண்டும் என்று திரைக்கு பின்னால் இருந்து கொண்டு அனுமதி வேண்டினாள்.


நஜ்முத்தீனிடமிருந்து விடை பெற்ற அந்த ஷெய்க் அந்த யுவதியுடன் உரையாடல் துவங்கினார்.


​ஷெய்க்: ஏன் உன்னை பெண் கேட்டு வந்த இளைஞனை வேண்டாம் என்றாய்?


​யுவதி: ஆம்,அந்த இளைஞன் அழகிலோ, அந்தஸ்த்திலோ குறைந்தவனல்ல என்பது உண்மை.ஆனால் அவன் எனக்கு பொருத்தமானவன் அல்ல.


​ஷெய்க்: நீ எப்படிப்பட்டவரை எதிர்பார்க்கிறாய்?


​யுவதி: என்னை சுவனத்துக்கு அழைத்து செல்கின்ற ஒரு கணவனாக அவன் இருக்க வேண்டும். அவன் மூலம் நான் ஒரு பிள்ளையை நான் பெற்றுக்கொள்ள வேண்டும்.அந்த பிள்ளை ஒரு குதிரை வீரனாக உருவாகி பைதுல் முகத்திஸை முஸ்லிம்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும்.


இவர்களின் சம்பாஷனை நஜ்முத்தீனின் செவிகளில் விழுந்தது. உடனே அந்த ஷெய்கை அழைத்து அந்தப் பெண்ணை தான் மணமுடிக்க விரும்புவதாக மிகுந்த ஆனந்தத்துடன் கூறிய போது, அந்த பெண் இந்த ஊரின் ஏழ்மை குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவள் என்று ஷெய்க் சொன்னார்.


அவள் தான் தனக்கு மனைவியாக வருவதற்கு மிகவும் தகுதி படைத்தவள் என்பதை தெரிந்து கொண்ட அமீர் அந்தப் பெண்ணை மணமுடிப்பதற்கு பூரண விருப்பம் தெரிவித்தார். மன்னரின் மகளும் வேண்டாம். அமைச்சரின் மகளும் வேண்டாம் என மறுதலித்த நஜ்முத்தீன் ஒரு ஏழை வீட்டுப் பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டார்.


இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பெரியவனாகி மிகச்சிறந்த வீரனாக உருவெடுத்து முஸ்லிம்களின் கையில் மீண்டும் பைதுல் முகத்திஸை பெற்றுக் கொடுத்தது.


அந்தக் குழந்தை வேறு யாருமல்ல. அவர் தான் மாவீரர் ஸூல்தான் ஸலாஹூத்தீன் அய்யூபி.


நாம் அல்லாஹ்வுக்காக கொள்கின்ற தூய்மையான எண்ணங்கள் நிச்சயம் ஒரு நாள் சாத்தியப்படும்.