www.womanofislam.com

Muslim women's online learning centre

பிஸ்மில்லாஹ்வின் மகத்துவம்


எழுதியவர்: ஆலிமா முஷ்பிகா (முஹஸ்கரிய்யா)​

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அர்ஹமுர் ராஹிமீனால் அனுப்பப்பட்ட ரஹ்மத்துலில் ஆலமீன் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் விண்ணுலக யாத்திரை மேற்கொண்டபோது சுந்தரமாம் சுவனலோகங்களை சுற்றி வந்தார்கள். அவ்வமயம் அங்கே நான்கு ஆறுகள் நறுமணத்துடன் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள்.


​​அவை நான்கும் வெவ்வேறு வகையான ஆறுகள்.

​1. தண்ணீர் ஆறு

2. மது ஆறு

3. பாலாறு

4. தேனாறு


இவற்றை கண்ணுற்ற கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், “ஜிப்ரயீலே! இவை நான்கும் எங்கிருந்து வருகின்றன? எவ்விடம் போய் சேருகின்றன?” எனக் கேட்க, அதற்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், “நாயகமே! இவை ஹவ்லுல் கவ்ஸரை நோக்கிச் செல்கின்றன என்பதை நான் அறிவேன். எனினும் எவ்விடத்தில் இருந்து வருகின்றன என்பதை அறியமாட்டேன்” எனக் கூறிவிட்டு, “என்றாலும் அவற்றை அறிய விரும்பின் அல்லாஹ்விடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.


​​அப்போது கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இருகரம் ஏந்துகிறார்கள். சற்று நேரத்தில் சர்தார் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்குப் பக்கத்தில் ஒரு மலக்கு நிற்கிறார்.

அவர் கூறுகின்றார். “நாயகமே! உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள்!” எனக் கூற, கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களும் தனது கண்களை மூடிக் கொள்கிறார்கள். சற்று நேரத்தில் “நாயகமே! உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள் என்றார்கள். அப்போது நான் என் கண்களைத் திறந்து பார்த்தேன். அங்கே பெரிய மரம் ஒன்று இருந்தது, அதற்கருகில் வெண் முத்துக்களால் ஆன ஒரு பிரமாண்ட ஒரு குப்பா அமைந்திருந்தது. அதற்கு பச்சை மரகதத்தால் ஆன ஒரு வாயிற் கதவும், தங்கத்தினாலான ஒரு பூட்டும் போடப்பட்டிருந்தன. அந்நேரம் நான் பார்த்தேன். அந்நான்கு ஆறுகளும் இக்குப்பாவிற்குப் கீழால் இருந்து ஓடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்துவிட்டு புறப்படத் தயாரானேன்.” அச்சமயம் அம்மலக்கு, “யா ரஸுலல்லாஹ்! அதன் உள்ளே சென்று பார்க்கமாட்டீர்களா?” எனக் கேட்டார். அப்போது நான், “எவ்வாறு உள்ளே செல்வது? அதற்கு ஒரு பூட்டு போடப்பட்டிருக்கிறதே!” எனக் கூறினேன். அதற்கு அம்மலக்கு, “நாயகமே! அதன் சாவிதான் உங்கள் கைகளில் இருக்கிறதே” என்று சொன்னார். அப்போது “எங்கே இருக்கிறது?” எனக் கேட்டேன். அம்மலக்கோ அதன் சாவிதான் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” எனக்கூறினார்.


உடனே நான் அந்த அழகு நாமத்தை உச்சரித்தேன் உடனே அப்பூட்டு திறந்து கொண்டது. உள்ளே சென்றேன். அங்கே நான்கு தூண்கள் இருந்தன. அந்தத் தூண்களிலிருந்துதான் அந்நான்கு ஆறுகளும் வெளிவந்து கொண்டிருந்தன.


அதிலும் இன்னொரு ஆச்சரியம் என்னவெனில், அந்நான்கு தூண்களிலும் இந்த ‘பஸ்மலஹ்’ எழுதப்பட்டிருந்தது, அதில் தண்ணீர் ஆறு ‘பிஸ்மி’ யுடைய மீமில் இருந்தும், பாலாறு ‘பிஸ்மில்லாஹ்’ வுடைய ஹேயில் இருந்தும், மது ஆறு, ‘அர்ரஹ்மான்’ உடைய மீமில் இருந்தும், தேனாறு ‘அர்ரஹீம்’ உடைய மீமிலிருந்தும் ஊற்றெடுத்துக்கொண்டிருந்தன என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க, அருளாளன் அல்லாஹ், இந்த ‘பஸ்மலஹ்’ என்கிற “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்பதை உங்கள் உம்மத்தைச் சார்ந்த ஒருவன் மொழிந்தால், நிச்சயமாக அவனுக்கு இந்த நான்கு ஆறுகளிலிருந்தும் புகட்டுவேன் எனச் சொன்னான்.


இவ்வளவு பாக்கியத்தை இந்த பிஸ்மியைச் சொல்வது கொண்டு உம்மத்தே முஹம்மதிய்யாவான எமக்கு இறைவன் வைத்திருக்கிறான். எனவே, நாமும் எந்த நல்ல கருமங்களை துவங்குகின்ற போதும் இந்த திருநாமத்தை மறவாமல் சொல்லி ஆரம்பிப்போமாக!


தமிழ் பகுதி   →   பெண்கள் கல்வி