www.womanofislam.com

Muslim women's online learning centre

அண்டை வீட்டாரின் அன்பைப் பெறுவோம்.


இவ்வையகத்தில் வாழ்கின்ற மானிடர்கள் வாழும் காலமெல்லாம் உறவுகளோடு பின்னிப் பிணைந்ததாக அவனது வாழ்க்கை அமைந்துள்ளது. இரத்த உறவு, குடும்ப உறவு, சமூக உறவு இத்தொடரில் அயலவர்களின் (அண்டை வீட்டாரின் உறவு) உறவும் உள்ளடங்குகின்றது. ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரையில் தனது அண்டை வீட்டாருடன் எவ்வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் மிகத்தெளிவாக எடுத்தியம்புகின்றன.


மேலும் அல்லாஹ்வையே வணங்குங்கள் அவனுக்கு யாதொன்றும் இணை வைக்காதீர்கள். பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் (அவ்வாறே உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களுக்கும்) அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.


மேலே பார்த்த அல்குர்ஆன் வசனத்தில் அல்லாஹுத்தஆலா உறவினரான அண்டை வீட்டாரின் மகிமையை எடுத்தியம்புகின்றான். பிரிதொரு சந்தர்ப்பத்தில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் பார்த்து அபூதர்ரே நீர் கரி சமைத்தால் அதன் குழம்பை (ஆணத்தை) அதிகப்படுத்தி உமது அண்டை வீட்டாரைக் கவனித்துக் கொள்வீராக என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர்; அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நூல்; முஸ்லிம்)


வானவர்கள் தலைவர் ஜிப்ராயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பற்றி எம் தலைவர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு உபதேசம் செய்தார்கள் எந்தளவுக்கென்றால் தன்னுடைய சொத்தில் இருந்தும் அண்டை வீட்டாருக்கும் பங்கு கொடுக்கச் சொல்வார்களோ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பயப்படும் அளவிற்கு அண்டை வீட்டாரின் உரிமைகளையும் மகிமையையும் பற்றி உபதேசித்தார்கள்.


காருண்யக் கடல் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இப்பூவுலகத்தில் வாழ்ந்த காலத்தில் தனது அண்டை வீட்டாருக்கு கண்ணியமான முறையிலும் அவர்களின் உரிமைகள் விடயத்திலும் அதிக அக்கறை காட்டியவர்களாகவும் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு ஏராளனமான சான்றுகள் உள்ளன.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு முறை அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் ஈமான் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் ஈமான் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் ஈமான் கொள்ளவில்லை. என்று கூற யாரஸூலல்லாஹ் அவன் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் யாருடைய தீங்குகளிலிருந்தும் அவரது அண்டை வீட்டார் நிம்மதி அடையவில்லையோ அவனாவான் என்று கூறினார்கள்.
(நூல்கள்; புஹாரி முஸ்லிம்)


எங்களுடைய அன்றாட விடயங்கள் எங்களோடு வாழ்கின்ற எமது அண்டை வீட்டாருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாதவாறு மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஆகவே எமது அண்டை வீட்டாருடன் அன்பாகப் பழகி அவர்களின் அன்பைப் பெறுவதனூடாக அல்லாஹுத்தஆலாவிடம் மிகச் சிறந்தவர்களாக ஆகி ஈருலக வாழ்விலும் வெற்றி பெறுவோமாக!.