www.womanofislam.com

Muslim women's online learning centre






ஆண்கள் வீட்டு வேலை செய்வது தவறா?


வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள் செய்ய வேண்டியவை என்று இஸ்லாம் கூறவில்லை. சமையல் செய்தல், சமையலுக்குத் துணை செய்தல், துணிதுவைத்தல், தண்ணீர் பிடித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களை ஆண்கள் செய்வது இழிவானது போலவும் ஆண் தன்மைக்கு எதிரானது எனவும் சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.


மனைவிக்கும் சேர்த்து பொருளீட்டுவதற்காக ஆண்கள் வெளியே சென்று உழைப்பதால் அவனது உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக பெண்கள் வீட்டு வேலை செய்து பணிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.


இதுபோல் வெளியே சென்று பொருளீட்டும் நிலையில் இல்லாதவர்களும், பொருளீட்டுவதற்காக குறைந்த நேரம் செலவிட்டு வீட்டில் அதிக நேரம் வேலை இல்லாமல் இருப்பவர்களும் மனைவியின் வேலைகளில் துணை செய்வதுதான் நியாயமாகும்.




வீட்டு வேலைகளை ஆண்களும் செய்ய முன்வர வேண்டும். பெண்கள்தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று சொல்லும் ஆண்கள் சோம்பேறிகள் மட்டும் அல்ல மிக சுயநலவாதிகள்.


சில ஆண்கள் சுயநலவாதிகளாக இருப்பதற்கு இவர்களின் தாய்மார்களும் ஒருவிதத்தில் காரணம். வீட்டு வேலை என்றால் அது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே உரியது என்ற நிலையில் தன் பிள்ளைகளை வளர்த்து விட்டார்கள். ஒரு வீட்டில் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் இருந்தால் வீட்டு வேலைகளை பெண் பிள்ளைகளிடமே செய்ய சொல்லி வளர்ப்பார்கள். ஆண்கள் குழந்தைகள் ராஜாக்களை போல வளர்க்கபடுவார்கள். இதனாலேயே சில ஆண்களுக்கு சோம்பேறித்தனம், சுயநலம், பெண்களை கஷ்டபடுத்தும் வக்கிர குணங்களும் வர காரணமாகிறது. இந்த தாய்மார்களின் வளர்ப்பு முறை, ஆண்களுக்கு அதிக சுதந்திரமும், பெண்களுக்கு அளவான சுதந்திரமும் கொடுத்து வளர்த்துவிட்டார்கள். ஆண் இந்தந்த வேலைகள்தான் செய்ய வேண்டும் என்ற பாகுபாட்டையும் ஊட்டிவிட்டார்கள்


எனவே, தாய்மார்கள் பிள்ளைகளை வளர்க்கும் போது ஒரே விதத்தில் சரி சமமாக வேலைகளை செய்ய சொல்லி வளர்க்க வேண்டும்.
பெண்களின் உழைப்புக்கு இன்றுவரை மதிப்பு தரப்படுவதில்லை என்றே சொல்ல வேண்டும். வீட்டு வேலைகளில் அதிக கவனமும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்பவர்கள் பெண்களே. ஆனால், அவர்களுக்கான மதிப்பும் மரியாதையும் ஒவ்வொரு வீட்டிலும் வழங்கப்படுவதில்லை.


நான் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம், "நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், "நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத், நூல்: புகாரீ


"நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வீட்டில் வேலை செய்வார்களா?'' என்று ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், "தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பை தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உர்வா நூல்: அஹ்மத்


இறைதூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களே இவ்வளவு வேலைகளை தன் குடும்பத்தாருக்கு செய்திருக்க, நாங்கள் ஆஷிகே ரஸுல்கள், நாங்கள் தஃவா வேலைகளை செய்கிறோம், நாங்கள் உலகத்திற்கு சீர்திருத்தம் செய்கிறோம் என்று கூறி கொண்டு வீட்டில் சோம்பேறிகளாக இருப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.